திருநாடு (Holy Land) என்றும், புண்ணிய பூமி என்றும் அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி மேற்கு ஆசியாவில் யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்களுக்கு முதன்மை வாய்ந்த மண்டலமாக அச்சமயத்தவர்களால் கருதப்படுகின்ற நிலப்பரப்பைக் குறிப்பதாகும் [1]. துல்லியமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டிராத இந்நிலப்பரப்பு எபிரேயத்தில் Ereṣ HaQodhesh/Eretz HaKodesh என்றும், அரபியில் Bilad Ash'Sham கூறப்படுகிறது.

இசுரயேல், யூதா அரசுகளையும் பன்னிரு குலப் பகுதிகளையும் உள்ளடக்கிய பாலஸ்தீனம் என்னும் திருநாடு. நிலப்படம் ஆக்குநர்: தொபியாஸ் லோட்டர். ஆண்டு: 1759. காப்பிடம்: வாஷிங்டன்.

இன்றைய நாட்டு எல்லைப்படி, திருநாடு என்பது இசுரயேல், பாலஸ்தீன ஆட்சி மண்டலம், யோர்தான், மற்றும் லெபனானின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கும். இவ்வாறு யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்கள் இந்நிலப்பகுதியைப் புனிதமாகக் கருதுவதற்கு ஒரு முக்கிய காரணம் அம்மதங்கள் எருசலேம் நகருக்கு அளிக்கின்ற சமய அடிப்படையிலான முதன்மை ஆகும்.

யூதர்கள் தம் வரலாற்றில் எருசலேம் தலைநகராக இருந்து, அங்கு தம் சமயத்திற்கு மையமான திருக்கோவில் இருந்ததைக் குறிப்பிடுகிறார்கள். கிறித்தவம் எருசலேமைத் தன் பிறப்பிடமாகக் கருதுவதற்கு அந்நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்பது முக்கிய காரணம். இசுலாம் எருசலேம் நகரத்தை மெக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அடுத்த நிலையில் வைப்பது அந்நகரை முகம்மது நபியின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகக் கருதுவதுமாகும்.

திருநாடு தங்கள் சமயத்திற்குப் புனிதமானது என்று கிறித்தவர்கள் கருதியதும் சிலுவைப் போர்கள் நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம். எனவே அவர்கள் பிசான்சிய அரசிடமிருந்து திருநாட்டைக் கைப்பற்றிய சுல்ஜுக் துருக்கிய முசுலிம் ஆட்சியிலிருந்து அப்பகுதியை மீட்க முயன்றனர்.

விவிலியக் காலத்திலிருந்தே திருநாடு யூதர்களும் கிறித்தவர்களும் அதன் பின் இசுலாமியரும் திருப்பயணமாகச் செல்லும் முதன்மை இடமாக மாறியது.

யூத சமயமும் திருநாடும்

தொகு
 
எருசலேமில் யூதர்களுக்குப் புனிதமான இடம்: "அழுகைச் சுவர்" (மேற்குச் சுவர்).

பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களாகிய "தோரா" (Torah) என்னும் பகுதியில் "திருநாடு" என்னும் பெயர் இல்லை. ஆனால், கடவுள் இசுரயேலுக்கு ஒரு நாட்டை "வாக்களித்தார்" என்னும் கூற்று விவிலியத்தில் பல இடங்களில் உள்ளது. இசுரயேலின் பழங்கால நகரங்கள் "திரு நகரங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிடப்படுகின்ற நான்கு "திரு நகரங்கள்" எருசலேம், எபிரோன், சாபத், திபேரியா என்பவை ஆகும். இவற்றுள் எருசலேமில் கோவில் அமைந்திருந்ததால் அது யூத சமயத்தின் புனித மையமாயிற்று.

எபிரேய விவிலியத்தில் எருசலேம் 669 தடவை குறிக்கப்படுகிறது. அங்கே சீயோன் என்னும் சொல்லும் எருசலேமைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் சில சமயங்களில் இசுரயேல் நாட்டையும் குறிக்கும். சீயோன் என்னும் சொல் எபிரேய விவிலியத்தில் 154 தடவை வருகிறது. தொடக்க நூலில் மோரியா என்னும் பெயருள்ள மலைக்கு ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கைக் கூட்டிக்கொண்டு பலிசெலுத்தச் சென்றார் என்னும் செய்தி உள்ளது (தொநூ 22). அம்மலைதான் பிற்காலத்தில் எருசலேமில் "கோவில் மலை" என்று அழைக்கப்பட்டது என்பர்.

எபிரேய விவிலியத்தில் எருசலேமும் இசுரயேல் நாடும் மக்களுக்குக் கடவுளால் அளிக்கப்பட்ட கொடை எனவும் கடவுள் மக்களோடு செய்துகொண்ட பல உடன்படிக்கைகளின் பகுதி என்றும் உள்ளது.

யூத மக்களின் நினைவில் எருசலேம் என்றால் புனித இடம் என்னும் உணர்வு ஆழப் பதிந்துள்ளது. தாவீது மன்னர் கடவுளுக்கு எருசலேமில் ஒரு கோவில் கட்ட முயன்றதும் மக்கள் உணர்வில் நிலைத்தது. இக்கருத்து சாமுவேல் நூல்களிலும் திருப்பாடல்கள் நூலிலும் சிறப்பாகத் துலங்குகின்றது. எருசலேம் பற்றிய தாவீதின் ஏக்கங்கள் பலவும் பல இறைவேண்டல்களிலும், பொதுமக்கள் பாடல்களிலும் இணைக்கப்பட்டுள்ளன். யூதர்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவின்போது அவர்கள் "அடுத்த ஆண்டு எருசலேமில் சந்திப்போம்" என்று கூறிப் பிரியாவிடை பெற்றுக்கொள்வார்களாம். எருசலேமை நோக்கி யூதர் இறைவேண்டல் செய்வது மரபு. "அழுகைச் சுவர்" (Wailing Wall) என்று அழைக்கப்படுகின்ற "மேற்குச் சுவர்" (Western Wall) என்பது பல நூற்றாண்டுகளாக யூதர்களின் திருப்பயணத் தலமாக விளங்கிவந்துள்ளது. இதுவும் "கோவில் மலையும்" யூதர்களின் மிகப் புனித தலங்களாகப் பல நூற்றாண்டுகள் கருதப்பட்டு வந்துள்ளன.

கிறித்தவ சமயமும் திருநாடும்

தொகு
 
இயேசு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எழுந்த "திருக்கல்லறைக் கோவில்", எருசலேம். இரவுத் தோற்றம்.

கிறித்தவர்களின் பார்வையில் திருநாடு என்னும் கருத்து ஆபிரகாமோடு தொடங்குகிறது.

புதிய ஏற்பாட்டில் கடவுளால் வாக்களிக்கப்பட்ட நாடு "இசுரயேல் நாடு" என்று அழைக்கப்படுகிறது:

திருநாடு என்னும் கருத்து நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்ல, மாறாக நிலப்பரப்போடு இறையியல் கருத்தும் இணைந்துதான் திருநாடு உருவாகிறது.

குறிப்பாக, எண்ணிக்கை நூலில் திருநாடு என்னும் கருத்து முதன்மையாக உள்ளது. அங்கே கடவுளின் "புனித" மக்கள் குடியேறினார்கள். யோசுவா நூலின் கடைசிப் பகுதியில் நாட்டின் பகுதிகள் இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் நிகழ்ச்சி உள்ளது. இவ்வாறு, கடவுள் முன்னோருக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறுகிறது. அவர்கள் பெற்றுக்கொண்ட நாடும் "திருநாடாக" மாறுகிறது.

கிறித்தவர்கள் இயேசு கிறித்துவை உலக மீட்பராகவும், மெசியாகவும் கடவுளின் மகனாகவும் ஏற்கின்றனர். எனவே இயேசு பிறந்த இடம், அவர் பணி செய்த இடங்கள், அவர் துன்பங்கள் பட்டு சிலுவையில் அறையுண்ட இடம், அவரது கல்லறை இருந்த இடம், அவர் உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய இடங்கள் போன்றவை ஒருவிதத்தில் "புனிதமடைந்த" இடங்களாக மாறுகின்றன. இந்த இடங்களெல்லாம் இருக்கின்ற நாடு "திருநாடு" என்று அழைக்கப்படுகிறது.

கிறித்தவர்கள் திருநாட்டில் கீழ்வரும் இடங்களை உள்ளடக்குவர்:

  • எருசலேம்: இங்கு இயேசு மக்களுக் கற்பித்தார். தாம் துன்புற்று இறப்பதற்கு முந்திய இரவில் தம் சீடர்களோடு கடைசி இரா உணவை அங்கு அருந்தினார். தம் சீடரோடு உணவுண்ட போது அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து அவை தம் உடலும் இரத்தமுமாக உள்ளன என்று கூறி, அவர்தம் நினைவாக அச்செயலைத் தொடருமாறு தம் சீடரிடம் கூறினார். எருசலேமுக்கு அருகிலுள்ள கொல்கதா என்னும் குன்றில் (கல்வாரி) இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். இயேசுவின் உடல் வைக்கப்பட்ட கல்லறையின் மீது கட்டப்பட்ட "திருக்கல்லறைக் கோவில்" எருசலேமில் உள்ளது. மேலும் "அனைத்து நாடுகளுக்குமான கோவில்" அங்கு அமைந்துள்ளது. வேறு பல கிறித்தவ நிறுவனங்களும் எருசலேமில் உள்ளன.
  • பெத்லகேம்: இங்குதான் இயேசு மரியாவுக்குக் குழந்தையாகப் பிறந்தார். "இயேசு பிறப்புக் கோவில்" இங்குள்ளது.
  • நாசரேத்து: இயேசு வளர்ந்த ஊர். இங்கு பல திருத்தலங்கள் உள்ளன. "மங்கள வார்த்தைக் கோவில்" மற்றும் "மரியாவின் கிணறு" இங்கு இருக்கின்றன.

சிலுவைப் போர்கள் நிகழ்ந்த காலத்தில் கிறித்தவ திருப்பயணிகள் திருநாட்டுக்குச் சென்று அங்கு இறைவேண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எருசலேமையும் பிற புனித இடங்களையும் இசுலாமியரிடமிருந்து விடுவிப்பதும் அப்போர்களின் நோக்கமாயிருந்தது.

மேலே குறிப்பிட்ட இடங்கள் தவிர கிறித்தவர் புனிதமாகக் கருதும் தலங்கள் இவை:

  • செப்போரியா (Sephoria): இங்கு இயேசுவின் தாய் மரியா தம் குழந்தைப் பருவத்தைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.
  • இயேசு திருமுழுக்குப் பெற்ற யோர்தான் ஆறு.
  • திருமுழுக்கு யோவான் தங்கியிருந்ததாகக் கருதப்படும் பாறைக் குகை.
  • இயேசு பணி புரிந்த பகுதியாகிய கலிலேயக் கடல்.
  • இயேசு தோற்றம் மாறிய தாபோர் மலை.
  • நல்ல சமாரியர் கதையோடு தொடர்புடைய எரிக்கோ நகரம்.

இசுலாமும் திருநாடும்

தொகு
 
அல்-அக்சா மசூதி, எருசலேம். முசுலிம்களுக்குப் புனித இடம்.

"திருநாடு" பற்றி திருக்குரானில் பல குறிப்புகள் உள்ளன[2] எடுத்துக் காட்டாக,

இசுலாமிய வரலாற்றின் முதல் சில மாதங்களில் எருசலேமில் அமைந்திருந்த அல்-அக்சா மசூதியை நோக்கி தொழுகை நிகழ்ந்தது. பின்னரே காபா நோக்கி தொழுகை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. எருசலேமும் அல்-அக்சா மசூதியும் இசுலாமியருக்குப் புனித இடங்களாக உள்ளன. அரபியில் எருசலேம் "திருவிடம்", "புனித இடம்" என்றே அழைக்கப்படுகிறது ("அல்-கட்ஸ்"). அல்-அக்சா மசூதியில்தான் முகம்மது நபி மோசே ("மூசா"), இயேசு போன்ற பிற நபிகளோடு தொழுகை செய்தார் என்றும் அங்கிருந்தே விண்ணகம் ஏறிச் சென்றார் என்றும் இசுலாமியர் நம்புகின்றனர்.

எருசலேமில் சீனாய் மலையை அடுத்துள்ள பள்ளமான பகுதியை முசுலிம்கள் "துவா" (Tuwa) என்று அழைக்கின்றனர். அதற்கு "புனித பள்ளத்தாக்கு" என்று பொருள். திருக்குரான் கூறுவது:

"திருநாடு" என்பது "பாக்கியமுள்ள பூமி" என்னும் பெயரில் திருக்குரானில் பல இடங்களில் வருகிறது. அது குறிக்கும் இடம் எது என்பது பற்றி இசுலாமிய அறிஞரிடையே பல கருத்துக்கள் உள்ளன. குரான் கூற்று:

மேலும், முசுலிம்கள் "திருநாடு" என்று மெக்கா, மதீனா, காபா ஆகிய இடங்களையும் குறிப்பர்.

பாஹாய் சமயமும் திருநாடும்

தொகு
 
பாஹாய் சமயத்தாருக்குப் புனித இடம். ஆக்கர், இசுரயேல்.

இசுரயேலில் ஹைஃபா மற்றும் ஆக்கர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாஹாய் உலக மையம் அச்சமயத்தவரால் "திருநாடு" என்று கருதப்படுகின்றது[3]

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநாடு&oldid=3165267" இலிருந்து மீள்விக்கப்பட்டது