விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 23, 2007
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் பல அறுகோண அறைகள் கொண்ட, கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் வெளியிடும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன.
வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.