விக்கிப்பீடியா பேச்சு:ஒலிபெயர்ப்புக் கையேடு

Add topic
Active discussions

பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஒலிபெயர்ப்பு செய்தல்தொகு

பிறமொழிச் சொற்களை தமிழில் ஒலிபெயர்ப்பு செய்யும் பொழுது தமிழ் முறைமையைப் பின்பற்றத் தவறினால், தமிழ் ஒலிப்புமுறை குட்டிசுவராகிவிடும். தமிழில் பிற இந்திய மொழிகளில் இருப்பது போல் க,ச,ட,த,ப ஆகிய எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் 4 வகையான வேறுபாடுகளைக் காட்ட நான்கு தனித்தனி எழுத்துக்கள் இருப்பது போல் இல்லை. தமிழின் சிறப்பு இது. தமிழில் ஒவ்வொன்றுக்கும் இரு வேறுபாடுகள் தான் உண்டு (சகரத்திற்கு மட்டும் 3 வேறுபாடுகள்). ஆனால் அவற்றுக்குத் தனி எழுத்துகள் கிடையாது. ஆனால் துல்லியமாய் ஒலிக்க மிகச்சீரான ஒலிப்பு முறை உண்டு. இதனை மீறினால் தமிழ் ஒலிப்பொழுக்கம் சிதறி சீர்மை இழக்கும். உயிர் ஏறிய வல்லினம் இரண்டே இரண்டு இடத்தில்தான் வல்லினமாக ஒலிக்கும், பிற இடங்களில் மெல்லினமாகத்தான் ஒலிக்கும். வல்லினமாக ஒலிக்கும் இரண்டு இடங்களாவன: (1) சொல்லின் முதல் எழுத்தாக. (2) புள்ளி வைத்த வல்லின எழுத்துக்குப் பின் (அடுத்ததாக) வந்தால்.

பிறமொழிச் சொற்களை தமிழ் இயல்புக்கு ஏற்ப, திரித்து எழுதுவதே நல்லது. இதுவே சற்றேறக்குறையா எல்லா மொழிகளும் பின்பற்றும் முறை. சீன, சப்பானிய (நிப்பானிய), செருமன் மொழிகளைப் பாருங்கள். ஏன் ஆங்கிலத்தையே பாருங்கள். பழனி என்னும் ஊரை Palani என்றுதானே எழுதுகிறார்கள். Srinivasan என்னும் பெயரை ஸ்ரீnivaasan என்றா எழுதுகிறார்கள்? பல்லாயிரக்கணக்கான சீன மொழிச் சொற்களை ஆங்கிலேயர்கள் எப்படி எழுதுகிறார்கள்? ஏன் பிரான்சிய மொழியில் Paris என்பதில் வரும் அடித்தொண்டை ரகர ஒலிப்பையா காட்ட முயல்கிறார்கள்? இல்லையே. அருள் கூர்ந்து எழுத்துப் பெயர்ப்பு செய்யாதீர்கள். ஒலிப்பெயர்ப்பு செய்யுங்கள். ஒலிப்புத்துல்லியம் ஓரளவிற்குத்தான் காட்ட வேண்டும். ஆனால் தமிழ் முறையைப் பின்பற்றிச் செய்யுங்கள். சில திரிபுகள், தமிழ் இயல்புக்கு ஏற்றவாறு செய்தலே சரியான முறை. தமிழைக் கிள்ளுக்கீரையாக எண்ணி பலர் செய்யும் முறைகேடுகளை தமிழ் விக்கியில் கைக்கொள்ளலாகாது. இவை என் கருத்துக்கள். --செல்வா 21:47, 18 நவம்பர் 2008 (UTC)


 • ஜெர்மன், யேர்மன், செருமன்
 • ஜப்பான், யப்பான், சப்பான்
 • சேக்ஷ்பியர், சேக்ஸ்பியர், சேக்பியர்
 • சைனா, சீனா
 • செல்வா நல்ல தமிழில் எழுத வேண்டும் என்றே பலர் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான புரிதல் திறமை மெதுவாகவே வருகிறது.
 • சிலர் வேண்டும் என்றே கலக்கம் செய்கிறார்கள். ஒரு பார்வையில் அவர்கள் தங்களை முற்போக்காளர்கள் என்று கருதுகிறார்கள்.
 • கருநாடக இசை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் பல படிக்க கடினமாக இருக்கின்றன. ஆனால், அது இசை, அதை அதற்கேற்ப குறிக்க வேண்டும் என்று வாதம் இருக்கிறது. பல சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உண்டு. எ.கா ஏறுவரிசை, இறங்குவரிசை. அதைப் பற்றி மேலும் கருத்து கூற விரும்பவில்லை. நேர விரயம் எனக்கு. சிலருக்கு வெறுப்பையும் உண்டாக்க கூடும். தமிழிசை பற்றி விரிவான கட்டுரைகள் வேண்டும். http://www.tamilinnisai.org/ தமிழிசைக்கான ஒரு பெரும் அகராதித் திட்டம் பற்றி விபரிக்கின்றது. விபுலாநந்தர் உட்பட பலர் விரிவான ஆய்வுகள் செய்துள்ளனர்....
 • தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு இடை நிலையே பின்பற்றவே தள்ளப்பட்டிருக்கிறோம். ஏற்கனவே பல தளங்களில் இது பேசப்பட்டு விட்டது. செருமன் என்று எழுதினால் நிச்சியம் கடும் விமர்சனம் இருக்கும். இலங்கைத் தமிழில் யேர்மன் என்பார்கள், அதையும் ஏற்பதில்லை, பெரும்பாண்மை வழக்கத்திற்காக.
 • நீங்கள் பல இடங்களில் உங்கள் கருத்துக்களை கூறுயுள்ளீர்கள். அவற்றை தொகுத்து ஒரு கையேடு ஆக்கினால் பயன் மிகும். நேரம் கிடைக்கும் பொழுது....
 • கம்பியூட்டர் என்பது நல்லதா கணினி என்பது நல்லதா? - விளக்கப் பெயர்களைத் தமிழ் படுத்துவது நன்று.
 • இலத்திரன், எலக்டோரான்...? குறிப்பெயர்களை அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்து எழுதுவது நன்று. சில விதிவிலக்குகள் உண்டு.
 • வேதியியல் பெயர்களை, பொதுவாக தமிழ் வழக்கில் இருப்பவை தவிர்த்து ஆங்கில அறிவியல் பெயர்களைப் பயன்படுத்துவது நன்று.
 • உயிரினங்கள் பெயர்களுக்கு, பொதுவாக தமிழ் வழக்கில் இருப்பவற்றை பயன்படுத்துவது நன்று. புது உயிரினங்களுக்கு!!??
 • இயற்பியல் கலைச்சொற்களை இயன்றவரை தமிழ்ப்படுத்துவது நன்று.
 • மருத்துவம் ?? பொதுமக்கள் மருத்துவ கலைச்சொற்கள் தமிழில் இருப்பது நன்று. மருத்துவத்துறை அதன் சிக்கலான கலைச்சொற்களுக்கு பெயர் போனது. எனவே அதற்கு உயர் நிலையில் ஆக்கர்கள் கொள்வார் உள்ளனரா என்று தெரியாது.
 • இவை என் புரிந்துணர்வு. இது பற்றி சில கையேடுகள் இணையத்தில் உண்டு. இப்பிடி த.வி விற்கும் வேண்டும்.
 • நன்றி.
 • --Natkeeran 22:56, 18 நவம்பர் 2008 (UTC)

நற்கீரன், கட்டாயம் கையேடு செய்தல் வேண்டும். அண்மையில் பேச்சு:சுடாலின்கிரட் சண்டை பக்கத்தில் ஒலிபெயர்ப்பு பற்றிய கருத்தைப் பதிவு செய்தேன். செருமன் என்று எழுதினால் cheruman என்று சொல்ல வேண்டும் அப்பொழுது நிகழும் திரிபு மிகச் சிறியதே. மேலும் அந்த செருமன் மொழியாளரே J என்னும் ஒலிப்பைக் காட்ட முடியாது, பின் ஏன் தமிழர்களில் சிலர் தயங்குகிறார்கள் என்று விளங்கவில்லை. செருமானியர், தங்கள் மொழியை 'டாய்ட்சு என்று அழைப்பதால் நான் இயன்ற இடங்களில் எல்லாம் 'டாய்ட்சு (daaytchu) (அல்லது டாய்ட்சு = (ஒலிப்பு) taaytchu) என்றே எழுதுகிறேன். செருமன் நாட்டை பிரான்சியர் L’Allemagne என்கின்றனர், நாம் செருமன் என்றால் என்ன குறைந்து விடும்? 'டாய்ட்சு மொழியை (செருமன் மொழியை) பிரான்சியர் La langue allemande அல்லது Allemand என்று அழைக்கின்றனர். எனவே தமிழில் செருமன் என்றோ, டாய்ட்சு என்றோ, இடாய்ட்சு என்றோ, 'டாய்ட்சு என்றோ அழைக்கலாம். அதே போல செருமானியர் என்றோ இடாய்ட்சியர் என்றோ டாய்ட்சு மக்கள் என்றோ கட்டாயம் எழுதலாம். செருமானியரை தியூத்தானியர் (Teutonic) என்றும் அழைக்கலாம். French மொழி அவர்கள் ஒலிப்பில் 'விரான்சே (ஃவிரான்சே) என்பது போல் ஒலிக்கின்றது. எனவே பிரான்சே என்று தமிழில் எழுதலாம். பிரான்சு, பிரான்சிய மொழி (பிரான்சே) என்பன தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அழகாக போதிய அளவு துல்லியத்துடன் எழுத முடியும். பிரெஞ்சு (Pirenju, Firenju) என்பது ஆங்கிலத்தைத் தழுவி தவறுதலாக எழுதுவது. பிரெஞ்சு என்று எழுதிவிட்டு பிரெஞ்ச்சு என்று படித்தால் தமிழ் ஒலிப்புமுறை கெடுகின்றது. ஆனால் Pirenju என்றே ஒலித்தால் தமிழ் ஒலிப்பு முறையாகிலும் கெடாமல் இருக்கும். சிறுகச் சிறுக கெட விடுவது பெருங்கேடாய் முடியும். கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். பிரான்சு, பிரான்சிய மொழி, பிரான்சு மக்கள் (பிரான்சியர்) என்று எழுதுவது நல்லது. பாரிசு என்று எழுதவதே சரி. பிரான்சியர் தங்கள் மொழியில் பாரிசு நகரத்தை பாஃறீ [paʁi] என்பது போல ஒலிக்கிறார்கள். கிரேக்க மொழியர் Παρίσι (பாரிசி) என்று ஒலிக்கிறான். நாம் பாரிசு என்று எழுதினால் அத்து மீறி குறை கூறுகிறார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டுமா, நேர்மையை, தமிழ் முறையை பொருட்படுத்த வேண்டுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பாரிசு என்று எழுதுவதைக் எதிர்த்து கிண்டல் செய்பவர்கள் நேர்மையாக உரையாடவில்லை. --செல்வா 00:45, 19 நவம்பர் 2008 (UTC)


ஒலிபெயர்ப்பு கலைச்சொல் இரண்டையும் கலந்து கருத்துக்களைச் சொல்லிவிட்டேன். நாம் உலகை ஆங்கிலம் ஊடாக பார்ப்பதால் அவர்களின் பலுக்கலை நாம் பின்பற்றுகிறோம். தற்போது தமிழருக்கு பிற ஐரோப்பிய மொழிகள் ஓரளவு அறிமுகமாககி உள்ளன. ஆனால் ஆபிரிக்க மொழிகளுக்கு, சீன யப்பானிய மொழிகளுக்கு நாம் இன்னும் ஆங்கிலத்தையே தங்கி உள்ளேம். மயூரநாதன் பல பெயர்களை ஒலிபெயத்துள்ளார். அவரோடும், நீங்களும் பிறரும் சேர்ந்து தமிழிலில் ஒலிபெயர்ப்பு செய்வது பற்றி ஒரு கூடிய புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டு. அதை கையேடாக பரிதுரைக்க வேண்டு. நன்றி.−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
செல்வா, உங்கள் கவலையை முற்றிலுமாக பகிர்கிறேன். தொல்காப்பியத்தின் முதல் அதிகாரத்திலேயே இதைப் பற்றிய விளக்கம் உள்ளது. விரைவில் கையேடு ஒன்றை எழுதி முடித்தால் பின்பற்றுவதற்கு எளிதாகும். விக்கிப்பீடியா:ஒலிபெயர்ப்புக் கையேடு - இங்கே ஒரு அறிமுகப் பத்தியை எழுதுங்கள். நானும் தொல்காப்பியம் நன்னூல் ஆகியவற்றின் உரைகளிலிருந்து நெறிகளைச் சேர்க்கிறேன். பிறரும் பங்களித்தால் விரைவில் முடித்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 07:56, 19 நவம்பர் 2008 (UTC)

துவங்குகிறேன், சுந்தர். கருத்துக்கு நன்றி. மேலும் சில எடுத்துக்காட்டுகள் தர விழைகிறேன் (சுடாலின்கிராடு சண்டைஎன்னும் கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் நிகழ்ந்த உரையாடலை ஒட்டி): சுவாமினாதன் என்று எழுதுவது தமிழ் முறை. ஸ்வாமிநாதன் என்று தமிழ் நலத்தைகெடுத்து, தமிழ் முறைமையை மீறி எழுதத் தேவை இல்லை. சுவர்னம், சொர்ணம் (ஸ்வர்னம்) , சுவர்கம் (ஸ்வர்கம்), சொர்கம், சுவாகா (ஸ்வாகா), சுவேத்தா, சுவேதாரணியன் (ஸ்வே(த்)தா, ஸ்வே(த்)தாரண்யன்), சுவாதி (ஸ்வாதி), சுயம் (ஸ்வயம்), தாபி, தாபித்தல் (உயிர்ப்புடைய தமிழில் வினை!!), தாபிதம் (ஸ்தாபி, ஸ்தாபித்தல், ஸ்தாபிதம்), தலவரலாறு (ஸ்தல வரலாறு)...என்று எத்தனையோ இடங்களில் முதலில் வரும் காற்றொலி சகர ஒற்றைத் (ஸ்) தமிழ்ப்படுத்தித்தானே ஆண்டு வந்திருக்கின்றோம் (சில இடங்களில் தமிழ்ச்சொல்லை வடமொழியில் ஸ் என்னும் எழுத்தைச் சேர்த்தும் அம்மொழியாளர்கள் காட்டுவதுண்டு). ஆழ்வார்கள் கூட சிரீதரா என்றுதானே எழுதுகிறார்கள். தமிழ்நலத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள், தமிழ் முறையை மீறி வலிந்து எழுதுவோர்களுக்காக தவறான பாதையை நாம் தேர்ந்து கொள்ளுதல் கூடாது. அனுமன், அனுமான் என்று எழுதுவதும், அரி, அரன் என்று எழுதுவதும் தமிழ் வழக்கம் ஹனுமான், ஹநுமான், ஹரி, ஹரன் என்று எழுதுவது வலிந்து தமிழ் முறையை மீறுவது, தமிழ் முறையைப் போற்றாமை ஆகும். பிரபாகரன் என்று எழுதுவது தமிழ் முறை, ப்ரபாஹரன் என்று எழுதுவது வலிந்து தமிழ் முறையைக் கெடுப்பது (ஒலிப்புத்துல்லியம் என்னும் போர்வையில்). மொழிக்கு மொழி மாறும் பொழுது சில திரிபுகள் ஏற்படுவது இயல்பே. மேலும் ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான ஓர் ஒலிநயம் இருக்கும். அந்த உள்ளிணக்க, உள்ளிசைவை, உள்ளினிமையை வலிந்து கெடுத்தல் கூடாது. மொழிக்கு மொழி ஏற்படும் ஒலித்திபைப் பெரிது படுத்தி, இழிவுபடுத்திப் பேசி தம் மொழியையே கெடுக்கிறார்கள் பலர். இது ஏற்புடையதன்று. --செல்வா 14:09, 19 நவம்பர் 2008 (UTC)

பிற மொழிச் சொற்களை தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றி எழுதவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை மொழியில் ஒரு பகுதியில் மட்டும் இறுக்கமாகக் கடைப்பிடித்துக்கொண்டு இன்னொரு பகுதியில் "அம்போ" என விட்டுவிடக்கூடாது. அறிவியல் சொற்களில் மட்டும் ஏன் விதிவிலக்கு. "ஹைட்ரஜன்", "ஆக்சிஜன்", "எலெக்ட்ரான்" என்று எல்லாக் கிரந்த எழுத்துக்களுக்கும், தமிழ் வழக்குக்கு மாறான பயன்பாடுகளுக்கும் ஏன் முழுமையான சுதந்திரம் கொடுக்கவேண்டும். இதே கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சமயம், இசை போன்ற துறைகளிலும் வட மொழியிலிருந்து வந்த சொற்களை அப்படியே எழுதவேண்டும் என்கிறார்களே? அறிவியல் கற்கும் மாணவனை "எலெக்ட்ரான்" என்றுதான் எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டு, "ஆம்ஸ்ட்ரடாம்" என்று என்று எழுதாதே என்று சொல்லலாமா? இன்று அறிவியலைச் சாதாரண மக்கள் மட்டம் வரையும் கொன்று செல்வதற்கான தேவைகளும் வழிமுறைகளும் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு வகைத் தமிழ் வழக்குகளுக்கு இடையிலான எல்லைக்கோட்டை எங்கே வரைவது? மயூரநாதன் 17:23, 19 நவம்பர் 2008 (UTC)

சரியான கேள்விதான். என் கருத்துப்படி அறிவியல் சொற்களில் கிரந்தத்தை முற்றிலுமாக தவிர்க்கலாம். ஏனெனில் இசை, சமயம் ஆகியவற்றிலாவது ஏதோ ஒரு நாளில் கிரந்தம் வழக்கில் இருந்தது. ஆங்கில (+பிறமொழி) அறிவியல் சொற்களை இப்போதுதான் தமிழில் ஆளத்துவங்கியுள்ளோம். அதனால் அவை வழக்கூன்றுமுன்னரே நன்கு ஒலிபெயர்க்க முடியும். முடிந்த இடங்களில் மொழிபெயர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 18:01, 19 நவம்பர் 2008 (UTC)


இறுகிய கொள்கையாக இதை கொள்ளுதல் வேண்டாம், சச்சரவை வரவழைக்கும். சில துறைகளில் பரிந்துரையாக, வழிகாட்டலாக (Guide line) மட்டும் பயன்படுத்தலாம். பெரும் வழக்கையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் முற்றிலும் en:Linguistic prescription செய்தல் நல்லதல்ல. அது தமிழை இறுக்கமாக்கி விடும். --Natkeeran 18:34, 19 நவம்பர் 2008 (UTC)

//அறிவியல் சொற்களில் கிரந்தத்தை முற்றிலுமாக தவிர்க்கலாம்.//

சுந்தரின் இக்கருத்தையே சற்று விரிவாக நோக்கலாம். ஏற்கனவே கிரந்தத்தில் எழுதப்பட்ட சொற்களில் கிரந்தம் தவிர்த்து எழுதுவதில் உள்ள தயக்கங்களை நாம் அறிவோம். ஆனால், புத்தறிவியில் போன்ற துறைகளில் இதுவரை தமிழிலேயே எழுதப்படாத பெயர்களை நாம் முதன் முதலாக எழுதி அறிமுகப்படுத்தும்போதே கிரந்தம் தவிர்த்து அறிமுகப்படுத்தலாம் என்பதை குறைந்தபட்ச வழிகாட்டலாக கொள்ளலாம். --ரவி 19:46, 19 நவம்பர் 2008 (UTC)

ஆம், இரவி. அந்த நோக்கில்தான் எழுதினேன். -- சுந்தர் \பேச்சு 15:11, 20 நவம்பர் 2008 (UTC)
நக்கீரன், இதில் சச்சரவுக்கு இடம் இருக்க வேண்டியதில்லை. கொள்கைகளை வகுக்க முயலும்போது பல பக்கங்களில் இருந்தும் நோக்கவேண்டும். வெளியிலிருந்து மற்றவர்கள் கேள்வி கேட்குமுன்னர் நாங்கள் முழுமையாக அலசி ஆராயவேண்டும். ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டுக்கொண்டுதான் தெளிவு பெறவேண்டும். எங்களுடைய சிந்தனைகளின் குறைகளையும் நிறைகளையும் கூடிய அளவுக்கு வெளிக்கொண்டு வந்தால்தான் நிலைமைகளைச் சிறப்பாகக் கையாளமுடியும். மயூரநாதன் 19:47, 19 நவம்பர் 2008 (UTC)
மயூரநாதன், இங்கு 3 வகையான சிக்கல்கள் உள்ளன, அவைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு இருப்பதோ, தீர்வு நோக்கிய நகர்வோ இருப்பது நல்லது. (1) (பிறமொழிச் சொற்களைத் தமிழில் வழங்கும்பொழுது) கிரந்த எழுத்தின் பயன்பாடு (கூடவே கூடாதா, சில இடத்தில் மட்டும் ஏற்கப்படுமா? எல்லா இடங்களிலும் தங்கு தடையின்றி ஆள வேண்டுமா?). (2) கலைச்சொற்களை ஆங்கிலத்தில் உள்ளவாறே எடுத்தாள்வதா மொழிபெயர்ப்பதா? (எல்லா இடத்திலுமா? சில இடத்தில் மட்டுமா?), (3) தமிழ்நாடு-இலங்கை எழுத்து-ஒலி முரண்பாடு (இதுவும் பெரும்பாலும் பிறமொழிச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதும்பொழுது நிகழ்வது; இதில் கிரந்தம் இல்லாமலே குழப்பங்கள், சிக்கல்கள் உள்ளன). இவை எது பற்றியும் இறுக்கமான கொள்கைகள் இங்கு விக்கியில் இப்போது இருக்க வேண்டாம் என்றாலும், தக்க அறிவடிப்படையான பரிந்துரைகள், வழக்கங்கள், முன்னுரிமைகள் இருப்பது நல்லது. நற்கீரன் கூறுவது போல், பரிந்துரையாக (guideline) இருக்கலாம். முரண்பாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக்காட்டிலும், கூடுதலான இணக்கம் நோக்கிய நகர்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். நானறிய ஸ் என்னும் ஓரெழுத்து (காற்றொலி சகர ஒற்று) மட்டும் சேர்த்துக்கொண்டாலும், ஒலித்திரிபுகள் ஓரளவு குறையும். ஆனால் அதுவும் தேவை அற்றதே. பல ஒலித்திரிபுக் குறைபாடுகள் இருக்கும் பொழுது ஸ் இல்லாமலும் இருப்பதால் தவறில்லை. ஆம்ஸ்ட்ரடாம் என்பதை ஆம்சிட்ரடாம் அல்லது ஆம்சிற்றடாம், ஆம்சற்றடாம், ஆம்சட்ரடாம் என்றும் எழுதலாம். நாம் ஆம்ஸ்ட்ரடாம் என்று எழுதி ஒலித்தாலும் எத்தனையோ மாறுபாடுகள் உள்ளன, அதுவும் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கூறுகிறார்கள் (ஒரே இலத்தீன எழுத்துக்கூட்டலைக் கொண்டு). முதல் அகரத்தை ஏகாரம் கலந்த ஆகாரமாக ஒலிப்பதும் காட்ட வேண்டும் என்பர், ஒலித்துல்லியம் வேண்டுவோர். தமிழ் மொழியில் எழுதும் பொழுது தமிழ் முறையைப் பின்பற்றி எழுதுதல் வேண்டும் இது நேர்மையான வேண்டுகோள். ஹைட்ரஜன் என்று எழுத வேண்டாம் ஐதரசன் என்று எழுதலாம். சப்பானிய மொழியில் உள்ள கட்டகானா (Katakana (片仮名, カタカナ) முறை இருப்பதுபோல், சில பிறமொழிச்சொற்களுக்கும் மட்டும் (அறிவியல் கலைச்சொற்கள், வேற்றுமொழி பெயர்ச்சொற்கள்) கிரந்தத்தைப் பயன்படுத்தலாம் என்று முறை வகுத்துக்கொள்ளலாம். இங்கும் தனி எழுத்தாக இல்லாமல், ஒலித்திரிபுக்கோடுகள் கொண்ட தமிழ் எழுத்தாக இருப்பது நல்லது என்பது என் கருத்து. ஏன் என்றால், கூடுதலான ஒலியன்களை எளிதாகக் குறித்து பயன்படுத்திக்கொள்ள முடியும். கிரந்த எழுத்துக்களையும், புதிய எழுத்தான ஶ முதலான்வற்றை ஏற்கும் தமிழர்கள் ˜ச = Sa அல்லது ˘ச = Sa என்று கொள்ளலாம். ஆம்˜ச்ட்ரடாம் என்று எழுதலாம். தமிழில் ka, kha, ga, gha ஆகிய நான்கு வேறுபாடுகளையும் காட்டலாம். நம் ககரம் ககரமாகவே இருக்க வேண்டும் என்றாலும், அந்த நான்கு வேறுபாடுகளையும் "க "க: 'க 'க: என்று குறிக்கலாம். அதாவது வேற்றுமொழி எழுத்து என்று க்ட்டகானா போல் தெளிவாகக் காட்ட எல்லா வல்லினத்திலும் ஏதேனும் திரிப்புக் குறி காட்டலாம். இப்போதைக்கு என் பரிந்துரை கூடிய மட்டிலும், தமிழ் முறைக்கு ஏற்ப திரித்து எழுதலாம். கூடிய மட்டிலும் கிரந்த எழுத்துக்களைக் குறைத்தோ தவிர்த்தோ எழுதலாம். கூடிய மட்டிலும் கலைச்சொற்களை மொழிபெயர்த்தோ, புத்தாக்கமாகவோ செய்யலாம்.--செல்வா 20:02, 19 நவம்பர் 2008 (UTC)

தொடர்புடைய கட்டுரைகளும் ஏனைய பக்கங்களும்தொகு

தமிழ் ஒலிப்புமுறை தொடர்பில் கட்டுரைகளோ கையேடுகளோ எழுதுமிடத்தில் பின்வரும் பட்டியலில் சேர்க்க வேண்டுகிறேன். இவற்றின் துணைகொண்டு இக்கையேட்டை வடிக்கலாம். முதலாவதாக தமிழில் மெய்யொலிக் கூட்டம் என்ற கட்டுரையை இடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:26, 2 டிசம்பர் 2008 (UTC)

Return to the project page "ஒலிபெயர்ப்புக் கையேடு".