விசலூர் வாசுகீசுவரமுடைய மகாதேவர் கோவில்
விசலூர் வாசுகீசுவரமுடைய மகாதேவர் கோவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார் கோயில் வட்டம், விசலூர் கிராமத்தில் (அஞ்சல் குறியீட்டு எண் 622504) அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் வாகீசுவரமுடைய மகாதேவர் என்னும் மார்க்கபந்தீசுவரர் ஆவார். இக்கோயிலின் இறைவன் சோழர் கல்வெட்டுகளில் வாகீசுவரமுடைய - மகாதேவர் என்றும், பாண்டியர் கல்வெட்டுகளில் வரதகுசுரமுடைய - நாயனார் என்றும் குறிப்பிடப்படுகிறார்.[1]
கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இக்கோவில் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய அங்கங்களுடன் எழுப்பப்பட்ட கற்றளியாகும் இந்தக் கற்றளி ஏகதள நாகர விமானம் வகையைச் சேர்ந்ததாகும். பிற்காலத்தில் இக்கோவில் பலகால கட்டங்களில் பல்வேறு இணைப்புகளுடன் விரிவாக்கம்பெற்றுள்ளது. இக்கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. [2]
அமைவிடம்
தொகுஇவ்வூர் அன்னவாசலிலிலிருந்து 10.2 கி.மீ. தொலைவிலும், சித்தன்னவாசலிலிருந்து 14.9 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 18.8 கி.மீ தொலைவிலும், நார்த்தாமலையிலிருந்து 20.5 கி.மீ. தொலைவிலும், கொடும்பாளூரிலிருந்து 28.3 கி.மீ. தொலைவிலும், குன்னாண்டார் கோவிலிலிருந்து 46.7 கி.மீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து 58.4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் புவியமைவிடம் 10° 22' 46.7868 N அட்சரேகை 78° 49' 15.0492 E தீர்க்க ரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் 112 மீ. உயரத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 949 (ஆண்கள் 475; பெண்கள் 474) ஆகும்.[3]
கோவில் அமைப்பு
தொகுகிழக்கு நோக்கி அமைந்த ஏகதள நாகர விமானம் கொண்ட கற்றளி. கருவறையில் மூலவர் வாகீசுவரமுடைய மகாதேவர் என்னும் மார்க்கபந்தீசுவரர் அருள்பலிக்கிறார். கருவறைக்கு எதிரே நேர்கோட்டில் பலிபீடம், கொடிமரம், ஆகியன நிறுவப்பட்டுள்ளன. நுழைவாயிலில் இரண்டு நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. கற்றளியைச் சுற்றி சுற்று மதிலும் நுழைவு தோரண வளைவும் அமைந்துள்ளன. தோரண வாயில் புருவத்தில் சிவன், பார்வதி, முருகன் ஆகியோரின் சுதைச் சிற்பம் இடம் பெற்றுள்ளது. [2][4] [1]
இக்கற்றளி கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய அங்கங்களைக் கொண்டுள்ளது. பிற்கால விரிவாக்கமாக ஒரு மகாமண்டபம் இக்கட்டுமானத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்திற்கு கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு சுவர்களில் நுழைவாயில்கள் அமைந்துள்ளன. நந்தி வாகனம் கருவறைக்கு நேர்கோட்டில் நிறுவப்பட்டுள்ளது.[2]
கருவறை விமானம் உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், மேலும் கீழும் கம்புகள் தழுவிய கண்டம், பட்டிகை ஆகிய உறுப்புகளுடன் கூடிய அதிட்டானம் பாதபந்த வகையைச் சேர்ந்ததாகும். இவற்றில் எவ்வித அழகணிகளும் காணப்படவில்லை. அதிட்டனத்திற்கு மேலே அமைந்துள்ள சுவர்கள் நான்கு அரைத்தூண்களைக் கொண்டு மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் தென்புறச் சுவரின் சாலைப் பத்தியில் அரைத்தூண்களின் அணைப்பில் அகழப்பட்ட கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.[4]
அரைத்தூண்களுக்கு மேலே அமைந்துள்ள விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. பிரஸ்தர உறுப்புகளாக வாஜனமும் அதற்குமேல் வலபியும் அமைந்துள்ளன. வாலபியில் பூத கண வரிசை இடம்பெறவில்லை. இதற்கு மேலே கூரை அமைந்துள்ளது. கூரை முன்னிழுப்புப் பெற்று கபோதமாக நீட்சி பெற்றுள்ளது. கபோதத்தில் கூடுகள் இடம்பெற்றுள்ளன. கருவறையின் கூரைக்கு மேலே பூமிதேசம் இடம்பெற்றுள்ளது. பூமிதேசத்தில் யாளி வரி காட்டப்பட்டுள்ளது. நான்கு புற மூலைகளிலும் வெளிப்புறம் பார்த்தவாறு நின்ற நிலையில் நான்கு நந்திகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. [4]
விசலூர் வாகீசுவரமுடைய மகாதேவர் கோவில் கருவறையின் மீது அமைந்த விமானம் ஏகதள நாகர விமானம் ஆகும். ஏகதள விமானம் ஒரு நிலையைக் கொண்டிருக்கும். விமானத்தின் சிகரம், கிரீவம், தூபி ஆகியன சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தால் அது நாகர விமான வகையைச் சேர்ந்தது ஆகும். சதுர வடிவுடன் கூடிய கிரீவத்தின் நாற்புறமும் கிரீவ கோட்டங்கள் அமைந்துள்ளன. கிரீவ கோட்டங்களில் கிழக்கில் சுப்பிரமணியர், தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் ஆகிய தெய்வங்களுக்கான திருமேனிகள் கட்டப்பட்டுள்ளன. கிரீவக் கோட்டத்தின் மேல் உள்ள மகாநாசிகைகள் வெறுமையாக உள்ளன. நாகர சிகரத்திற்கு மேல் மகா பத்மவரி என்ற அமைப்பு விரிந்த தாமரை மலர் போன்று காட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து நான்முக தூபி காட்டப்பட்டுள்ளது. [4]
கருவறையை ஒட்டி முகமண்டபம் அமைந்துள்ளது. கருவறையைப் போன்றே முகமண்டபத்தின் வெளிப்புறச் சுவர்கள் மூன்று பத்திகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. தேவ கோட்டங்கள் அகழப்படவில்லை. பிற்கால இணைப்பாக மகாமண்டபம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன., மகாமண்டபத்தின் சுவர்கள் அலங்கரிப்பின்றி வெறுமையாக காணப்படுகின்றன. சிவன் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு தெய்வங்கள் வீற்றிருக்கும் வகையில் சூரியன், விநாயகர், கார்த்திகேயர், சப்த மாத்ரிகைகள், சந்திரா, சண்டிகேஸ்வரர், சேட்டை (மூதேவி) மற்றும் நந்தி அல்லது பைரவர் ஆகிய அட்ட-பரிவார உப சன்னிதிகளுடன் இந்தக் கோவில் அமைந்துள்ளது. [4]
வரலாறு
தொகுவிசலூர் வாகீசுவரமுடைய மகாதேவர் கோவில் விஜயாலய சோழனின் (கி.பி. 848-871) ஆட்சிக்காலமான கி.பி. 9 ஆம் நூற்றண்டில் கட்டப்பட்டதாக எஸ் ஆர் பாலசுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.[2][4] முதலாம் பராந்தக சோழனால் கட்டமைக்கப்பட்டதென்று தமிழ் இணையக் கழகம் குறிப்பிட்டுள்ளது.[1]
கல்வெட்டுகள்
தொகுமுதலாம் இராஜராஜனின் ஆட்சியாண்டு கி.பி. 997 (No 217 of the Annual Report on Epigraphy 1940-41), மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியாண்டு கி.பி. 1117 (No 231 of the Inscriptions in the Pudukkottai State) ஆட்சிக்காலத்தில் இக்கோவில் கருவறையின் அதிட்டானத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் ஜடவர்மன் என்ற ஸ்ரீ வீர-பாண்டியதேவனின் பதினான்காம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் (No 598 and No 609 of the Inscriptions of the Pudukkottai State) தென்புறக் கோபுரச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. [2][4]
கோவில் திறந்திருக்கும் நேரம்
தொகுஇக்கோவில் காலை 08.00 மணி முதல் 17.00 மணி வரை திறந்து இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 அருள்மிகு விசலூர் சிவன் திருக்கோயில் தமிழ் இணையக் கல்விக்கழகம்
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Balasubrahmanyam, S R (1966). Early Chola Art part I. Asia Publishing House. Bombay. pp 57-58
- ↑ Visalur Onefivenine
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 [https://puratattva.in/visalur-vasukisvaramudaiya-mahadeva-temple/ Visalur – Margasahayeshvara Temple Saurabh Saxena Puratattva April 13, 2011