விடயம்சார் தபால்தலை சேகரிப்பு

(விடயம்சார் அஞ்சல்தலை சேகரிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விடயம்சார் தபால்தலை சேகரிப்பு (Topical or thematic stamp collecting) என்பது ஒரு குறிப்பிட்ட விடயம் அல்லது கருத்துரு தொடர்பான தபால்தலைகளைச் சேகரிப்பதாகும். இவ்வாறான சேகரிப்புக்குரிய விடயங்கள் பறவைகள், விலங்குகள் முதல், போக்குவரத்து, விளையாட்டு, புகழ் பெற்ற மனிதர்கள், நாட்டு வரலாறுகள் போன்ற எதுவாகவும் இருக்கக்கூடும்.

திமிங்கிலத் தபால்தலைகளைச் சேகரிப்போருக்கும், பென்குயின் சேகரிப்போருக்கும் 1929 இல் போக்லாந்து வெளியிட்ட இந்தத் தபால்தலை பயன்படும்.

தொடக்க காலங்களில், அரசன் அரசிகளின் தலைகளையும், நாட்டின் சின்னங்களையும் தபால்தலைகளிகளில் பொறித்து வெளியிட்ட தபால்சேவை நிர்வாகங்கள் நாட்டின் பண்பாடு, இயற்கையழகு, சாதனைகள் என்பவற்றையும் தபால்தலைகளில் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினர். 1845 இலேயே சென் லூயிஸில் வெளியிடப்பட்ட தபால்தலைகள் கரடி உருவங்களைத் தாங்கியிருந்தன. கனடா நாடும் ஆரம்ப காலங்களிலேயே விலங்குகள் பொறிக்கப்பட்ட தபால்தலைகளை வெளியிட்டது. முதல் தபால்தலை வெளியிடப்பட்டு ஒன்றரை நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் இன்று ஏராளமான வேறுபட்ட வடிவமைப்புகளில் ஆயிரக்கணக்கான விடயங்கள் சார்ந்த தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது விடயம்சார் தபால்தலை சேகரிப்பாளர்களுக்கு நிறைந்த வாய்ப்புக்களைத் தருகின்றது.

பிரான்ஸிஸ் கானியர் மேகொங் ஆற்றில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். இதனால் 1943 இல் பிரான்சிய இந்தோசீனாவில் வெளியிடப்பட்ட இந்தத் தபால்தலை ஆறுகள் தொடர்பான சேமிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் சேமிப்பில் இடம்பெறக்கூடியது.

பலகாலமாகப் பிரபலமாக இருக்கும் கப்பல்கள், பறவைகள், விளையாட்டு போன்ற பல சேகரிப்புக்குரிய விடயங்களில் இன்றுவரை பல ஆயிரக்கணக்கான தபால்தலைகள் வெளியிடப்பட்ட நிலையில், இவற்றில் முழுமையான சேமிப்பு என்பது இன்று இயலாத ஒன்றாகிவிட்டது. இதனால் மேற்படி விடயங்களில் ஒரு பகுதியை மட்டும் கையாளும் வகையில் தபால்தலை சேகரிப்புகள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, கப்பல் தொடர்பான விடயங்களில் போர்க் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், தட்டை அடிகளையுடைய கப்பல்கள், உலக யுத்தங்களில் பங்குபற்றிய கப்பல்கள் எனப் பலவகையானவை பிரபலமாக உள்ளன.

தற்காலத்தில் சில குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்த தபால்தலைகளுக்காகவே தனியான விபரப்பட்டியல்கள் வெளியிடப்படுகின்றன.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Stamps by topic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.