விடை (இலக்கணம்)

ஒன்றனைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுகின்றனர். இதை வினா என்கின்றனர். வினாவிற்கு ஏற்ப விடையளிப்பதுதான் மொழிநடையின் சிறப்பு.

தேர்வு நாளை நடைபெறுமா? எனக் கேட்ட ஒருவனிடம், என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் எனக் கூறுவது தவறு. வினாவும் அவ்வினாவிற்கு உரிய விடையும் பிழையின்றி அமைதலே முறை.

இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்.

விடை வகைகள்

தொகு

விடை எட்டு வகைப்படும்.

  1. நேர்விடை
  2. சுட்டுவிடை
  3. மறைவிடம்
  4. ஏவல்விடை
  5. வினாஎதிர்வினாதல்விடை
  6. உற்றதுரைத்தல்விடை
  7. உறுவதுகூறல்விடை
  8. இனமொழிவிடை

சுட்டுவிடை

தொகு

சென்னைக்கு வழி யாது?” என்று வினவினால் ‘இது’ என்பது போலச் சுட்டிக் கூறும் விடையானது சுட்டுவிடை ஆகும்.

‘மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது?’ என்பதற்கு ‘வண்டு விரும்பித் தேன் உண்ணும் நொச்சிப் பூ’ என்று விளக்கம்  கருதிக் கூறும் விடையானது சுட்டுவிடை ஆகும். 

மறைவிடை ( எதிர் மறுத்துக் கூறல் விடை)

தொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யேன்’ என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடையானது எதிர்மறைவிடை ஆகும்.

செழியா, விளையாடினாயா? என்ற வினாவிற்கு ‘விளையாட வில்லை’ எனக் கூறுவது மறைவிடை எனப்படும்.

இங்கு மறை என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.

நேர்விடை ( உடன்பட்டுக் கூறுதல்)

தொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்வேன்’ என்பதுபோல உடன்பட்டுக் கூறும் விடையானது நேர்விடை ஆகும்.

நேர்விடை என்பது வினாவிற்கு உடன்பட்டுக் கூறும் விடையாகும்.

செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாடினேன்’ எனக் கூறுவது நேர்விடை எனப்படும்.

ஏவல்விடை

தொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’நீயே செய்’ என்று ஏவிக் கூறுவது , ஏவல்விடை.

வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வதுஏவல்விடை எனப்படும். வினவியவரையே ஏவுவதால் ஏவல்விடை  எனப்பட்டது.

கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நீயே பாடு’ என்பது ஏவல்விடை எனப்படும். 

வினாஎதிர்வினாதல்விடை

தொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யாமலிருப்பேனா?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது, வினாஎதிர்வினாதல்விடை ஆகும்.

வினவப்பட்ட வினாவிற்கு விடையாக வினாவாகவே விடை அளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும். 

கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நான் பாடாமல் இருப்பேனா’ என விடையளித்துத் தான் அச்செயலைச் செய்யவிருப்பதை உறுதி செய்வது, வினா எதிர் வினாதல் விடை  எனப்படும். 

உற்றதுரைத்தல்விடை

தொகு

இது செய்வாயா?” என்று வினவிய போது, ’உடம்பு நொந்தது’ என்று தனக்கு உற்றதனை விடையாகக் கூறுவது, உற்றதுரைத்தல்விடை ஆகும்.

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது’ எனத் தனக்கு நேர்ந்ததைக் கூறுவதால் இஃது, உற்றது உரைத்தல் விடை எனப்பட்டது. இஃது இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விடையளிப்பதாகும்.

உறுவதுகூறல்விடை

தொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’கை வலிக்கும்’ எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது, உறுவதுகூறல்விடை ஆகும்.

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நிகழ உள்ளதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.

நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும்’ எனத் தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவதால் இதனை, உறுவது கூறல் விடை எனப்பட்டது. இஃது எதிர்கால வினை கொண்டு முடியும்.

இனமொழி விடை

தொகு

”ஆடுவாயா?” என்று வினவிய போது, ’பாடுவேன்’ என்று ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது, இனமொழிவிடை ஆகும்.

ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்.

‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’ என்ற கேள்விக்கு, ‘துவரம்பருப்பு இருக்கு’ என விடை தருதல் இனமொழி ஆகும்.

சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை(செவ்வன் இறை). மற்ற ஐந்தும் வினாக்களுக்குரிய விடையைக் குறிப்பால்(இறை பயப்பன) உணர்த்துவன ஆகும்.

நன்னூல் பாடல்

தொகு
சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் 
உற்றது உரைத்தல் உறுவது கூறல் 
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி 
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப (நன்னூல் - 386) 

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடை_(இலக்கணம்)&oldid=4117649" இலிருந்து மீள்விக்கப்பட்டது