விதைச் சான்றளிப்பு

விதைச்சான்று என்பது வேளாண் விதைகளின் தரங்கள் மற்றும் இனத்தூய்மையை உறுதி செய்து அரசு அமைப்பினால் வழங்கப்படும் சான்றாகும். விதைச்சான்றளிப்பு செயல்முறை பொதுவாக அரசு நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விதைச்சான்று அமைப்புகளால் மேற்கொள்ளப்படுகிறது.[1] தமிழ்நாட்டு அரசால் அளிக்கப்படும் விதைச்சான்று, விதைகள் சட்டம் 1966 பிரிவு 5 இன் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் இரகங்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது.

நோக்கம் தொகு

இச்சான்று, விதை மரபணு தூய்மை, புறத்தூய்மை மற்றும் விதை ஆரோக்கியம் தொடர்பான குறிப்பிட்ட தர பரிசோதனைகளை சான்றளிக்கப்படும் விதைகள் பூர்த்தி செய்கிறதா என்பதை சரிபார்க்க வேளாண் அலுவலர்கள் மூலம் தொடர்ச்சியான வயல் ஆய்வுகள், விதைப்பரிசோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் போன்ற நிகழ்வுகள் மூலம் மிகுந்த இனத்தூய்மையும் அதிக சுத்தத்தன்மையும் முளைப்புத் திறனும் உள்ள விதைகள் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதை நோக்கமாக கொண்டதாகும். [2]

  • விவசாயிகளுக்கு உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்தல்.
  • விதைகளின் மரபணு தூய்மை மற்றும் மாறுபட்ட ரக அடையாளத்தை பராமரித்தல்.
  • விதைகள் மூலம் நோய்கள் மற்றும் பூச்சிகள் பரவுவதைத் தடுத்தல்.
  • விதை சான்றளிப்பு நடைமுறைகளுக்கு உட்பட்ட விதைகளுக்கு அவற்றின் தரம் மற்றும் நிறுவப்பட்ட தரங்களுடன் இணங்குவதைக் குறிக்கும் சான்றிதழ் அல்லது முகவரிச்சீட்டு வழங்கப்படுதல்

-போன்றவைகளும் இதன் நோக்கங்களாகும்.

விதைச் சான்றளிப்புத் துறை தொகு

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விதைகள் சட்டம் 1966, விதைகள் விதிகள் 1968, விதைகள் மற்றும் சுற்று சூழல் திட்டம் 1986 ஆகிய விதைச்சட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் படி தமிழ்நாடு அரசால் 1979-ம் ஆண்டு கோயம்புத்தூரில் இந்த துறை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயமுத்தூரில் இருக்கிறது. மேலும் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விதைகளை பரிசோதிக்கவே மிகப்பெரிய விதைப் பரிசோதனைக்கூடம் இயங்கி வருகிறது. அத்தோடு விதைகளைத் தயாரிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இதனாலேயே இந்த விதைச் சான்றளிப்புத் துறையும் அங்கேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 2021 ஆம் ஆண்டில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து[3] [4] விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை சென்னைக்கு நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை".
  2. "விதைச்சான்று".
  3. "கோவை விதை சான்றளிப்பு இயக்குநரகத்தை இடம் மாற்றக் கூடாது".
  4. "விதைச் சான்றளிப்பு இயக்ககத்தை சென்னைக்கு மாற்றினால் கோவை மண்டல விவசாயிகள் பாதிக்கப்படுவர்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதைச்_சான்றளிப்பு&oldid=3918568" இலிருந்து மீள்விக்கப்பட்டது