வித்யா சங்கர் ஸ்தபதி
வித்யா சங்கர் ஸ்தபதி (பிறப்பு: சூன் 6, 1938),[1] தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் கரூரில் பிறந்த சிற்பக் கலைஞர் ஆவார். தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளார். தமிழ்நாட்டின் முக்கியமான கலை ஆளுமைகளில் ஒருவர்.
பின் புலம்
தொகுஇவர் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை ஸ்தபதிகள் குடும்பப் பாரம்பரியத்தில், 11-ம் நூற்றாண்டிலிருந்து நீளும் சிற்பிகளின் கால்வழி மரபில் வந்த நவீன சிற்பி ஆவார். சிற்ப சாஸ்திரம், நாட்டியம், சோதிடம் சம்பந்தமான படிப்பறிவும் கேள்வியறிவும் கல்லூரிக்கு வரும் முன்னரே இவர் பெற்றிருந்தார்.1880-களில் சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்த இ.பி.ஹெவலின் காலத்தில் உலோகச் சிற்பக் கலைப் பிரிவை ஆரம்பித்து, அதன் தலைவராகப் பணிபுரிந்தவர், புடைப்புச் சிற்பங்களில் விற்பன்னரான இவருடைய கொள்ளுத்தாத்தா ராமசாமி ஸ்தபதி. இவருடைய தந்தை கௌரிசங்கர் ஸ்தபதி ஸ்ரீரங்கம் கோயிலில் பலிபீடம், கொடிமரம், ஆனந்த விமானம், வாகனங்கள் ஆகியவற்றைச் செய்தவர். அப்போது அங்கே பள்ளிப்படிப்பைப் படித்ததால் தந்தையின் வேலையைக் காணும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தார். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். [2] அவருடைய மகன் ராஜா ரவிசங்கரும் தந்தையின் வழியில் சிற்பக்கலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.[3]
பாணி
தொகுஇக்காலச் சிற்பிகளில் சிறந்த படைப்புகளை தமக்கே உரிய பாணியில் செல்வாக்குப் பெற்ற சிற்பிகள் ஓவியக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். அவ்வகையில் சிறந்து விளங்குபவர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் மரபுக்கும் புதுமைக்கும் இணைப்புப் பாலமாக விளங்குபவர். தமது சிற்பங்களில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனிப் பாணியை உருவாக்கினார். [4] இந்தியப் பண்பாட்டை மையப்படுத்தி புதுமையான வளர்கலை ஓவியங்களை அறிமுகப்படுத்திய பெருமையைப் பெற்றவர். அதனால், மேற்கத்திய ஓவிய பாணிகளின் அடிப்படையில் இந்திய ஓவியங்களையும் சிற்பங்களையும் வடிப்பவர்களுக்கு மத்தியில், வித்யாசங்கர் வித்தியாசப்படுகிறார்.[3] இவர், பழமையின் பிடிப்பிலேயே புதிய பிம்பங்களை உருவாக்கி திகைக்க வைப்பவர். [5]
உலோகச் சிற்பங்கள்
தொகுரதி, விநாயகர், இராவணன், இரணிய வதை போன்ற உலோகச் சிற்பங்கள் பழைமையின் பின்புலத்தில் நவீனமாக வடிவமைக்கப் பெற்றவை ஆகும். உலோகச் சிற்பங்கள் தவிரச் சுடுமண் சிற்பங்களைப் படைப்பதிலும் சாதனை படைத்தவர்.[4] 1964இல் இவருடைய முதல் நவீன புடைப்புச் சிற்பம் இரண்டு அடி செப்புத் தகட்டில் உருவானது. கல்லூரிக்காலத்தில் அவருடைய நவீன ஓவியத்தைச் சிற்பமாகச் செய்ய மேற்கொண்ட முயற்சியில் ஈடுபட்டு, தட்டையாக இருந்த செப்புத் தகட்டை வளைத்து, குவித்து மூன்று பரிணாமத்தில் அதனை வடிவமைத்தார்.[2] இவருடைய நவீன உலோகச் சிற்பங்களில் குறிப்பிடத் தக்கவை ஆலமரம், கற்பக விருட்சம் மற்றும் முப்பரிமாணப் படைப்பாக விளங்கும் ரேணுகா தேவி, யுவதி, மிதுனச் சிற்பம் ஆகியனவாகும். யுவதி சிற்பம் மேல்பகுதி மட்டும் பெண் போன்ற தோற்றத்திலும் கீழ்ப்பகுதி தீர்மானிக்க முடியாததாகவும் உள்ளது. மிதுனச் சிற்பம் ஆண் பெண் இருவர் படுத்திருக்கும் காட்சியாகக் காணப்படுகிறது. இதில் மூக்கும், கண் இமையும் சிறப்பாகப் படைக்கப்பட்டு உள்ளன.[6]
கிராமியக் கலை
தொகுஇவர் கிராம வாழ்வின் அழகில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆவார். கிராமியக் கலைகளாலும், சுடுமண் சிற்பங்களாலும் கவரப்பட்டு, கிராமத்துச் சிற்பங்களின் உருவத்தைச் சிதைக்காமல் உண்மையை மிகைப்படுத்தல் என்ற உத்தியைக் கையாள்கிறார்.[4]
விருதுகள்
தொகுஇவர் சென்னை பீங்கான் பொருள் கலைக் கண்காட்சி (1961), சென்னை கலை கிளப் கண்காட்சி (1963), சென்னை மாநில லலித் கலா அகாதமி (1964, 1978, 1985), மைசூர் தசரா பண்பாட்டுக் கண்காட்சி (1973), தேசிய விருது, புதுதில்லி (1993), கலைச்செம்மல், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை (1996), கலைச்செம்மல், அனைத்திந்திய நுண்கலைக்குழுச் சங்கம், புதுதில்லி (1999), மும்பை கலைச்சங்கம் (1976), அகில இந்திய கலைப்போட்டி, நாக்பூர் (1995), கௌரி சங்கர் ஸ்தபதி விருது,விஸ்வகர்மா கலை மன்றம், சென்னை (1998), சில்பகலாரத்னம், திருவாவடுதுறை ஆதீனம் (2011) உள்ளிட்ட பல விருதுகளையும், சிறப்புகளையும் பெற்றுள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 வித்யா சங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை (சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, செப்டம்பர் 2019 நூலிலிருந்து எடுக்கப்பட்ட விவரம்
- ↑ 2.0 2.1 எனது படைப்பில் இயேசுநாதர் துயரர் அல்லர், மன்னாதி மன்னர், வித்யா சங்கர் ஸ்தபதி பேட்டி, இந்து தமிழ் திசை, 9 பிப்ரவரி 2020
- ↑ 3.0 3.1 அய்யாசாமி ராம், வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக் கலை, ஈகரை தமிழ் களஞ்சியம், 12 சனவரி 2020
- ↑ 4.0 4.1 4.2 நவீன சிற்பக் கலைஞர்கள்
- ↑ வெங்கட் சாமிநாதன், தமிழ்நாட்டுக்கலைகளின் சீர்மையும், சீரழிவும், இன்றைய சித்திரம், பதிவுகள், இதழ் 91
- ↑ தமிழ் இணையக் கல்விக்கழகம்
வெளியிணைப்புகள்
தொகு- எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக் கலை, எஸ்.ஜி.வித்யாசங்கர் ஸ்தபதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை வரப்பெற்றோம், தினமணி, 13 சனவரி 2020
- நவீன சிற்பக் கலை | எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை, சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியின் "நவீன சிற்பக் கலை" நூல் அறிமுக விழா, 13 மார்ச் 2020
- எத்தனை எத்தனை ஓவியர்கள், தினமணி, 20 செப்டம்பர் 2012