வீர சைவம்

பசவண்ணர் தோற்றுவித்தது
(வீரசைவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வீர சைவம் அல்லது லிங்காயதம் என்பது சைவ சமயப் பிரிவுகளிலிருந்து தோன்றிய ஒரு சமயமாகும்.

சைவ சமயத்தின் வளர்ச்சிப் படி நிலைகள்

வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும், சடங்கு சம்பிரதாயம் மற்றும் சாதி முறைகளையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. ஒவ்வொரு இலிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்.

தோற்றம்

வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் பொ.ஊ. 1125–1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14-ம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15-ம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.

வகைகள்

வீரசைவமானது மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருந்தென நா ஞானகுமாரன் நயன்தரும் சைவசித்தாந்தம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அவையாவன,.

  1. சாமானிய வீரசைவம்
  2. விசேட வீரசைவம்
  3. நிராபரா வீரசைவம்

பரவல்

தமிழகத்தில் பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் ’அர்ச்ச’ முறை கொண்டவை. அதாவது 16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடுபவை.

ஆனால் இவற்றுக்கு வெளியேயும் பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. அவை தாந்த்ரீக (குறியீட்டுச் சடங்குகள் கொண்ட) வழிபாட்டு முறையை பின்பற்றியவை. அவற்றை பக்தி இயக்கம் வெறுத்து ஒதுக்கவே அவை இரகசியச் சடங்குகளாயின. தாந்த்ரீகக் கல்வி அளிக்கும் கல்விச்சாலைகளை ராஜராஜன் அழித்தார். (காந்தளூர் சாலை கலமறுத்தருளி...காந்தளூர்ச்சாலை குமரிமாவட்டத்தில் இருந்த அதர்வவேத பாடசாலை) இந்த தாந்த்ரீக மதங்களில் பல ரகசியச்சடங்குகளாக ஆயின. பௌத்த ஞானத்தை உள்வாங்கின. ரசவாதத்துடன் கலந்தன. பின்னர் சித்தர் மரபாக உருவெடுத்தன.

வீரசைவம் ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானது. அதன் தத்துவ ஊற்றுமுகம் காஷ்மீர சைவம். அவற்றுக்குத் தனி மடங்கள் வந்தன. பல்லவர்களால் பேணப்பட்டன. பின்னர் வீரசைவம் கர்நாடகத்தில் பரவிச் செழித்தது. கர்நாடகத்தில் பசவண்னர் உருவாக்கிய சைவம் இன்று கர்நாடக வீரசைவமென சொல்லப்படுகிறது.

தமிழ் வீரசைவர்கள் ஆகம சைவர்களால் புறக்கணிக்கப்பட்டனர். நாயக்கர் காலகட்டத்தில் வீரசைவ மடங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. ஆகவே ஆலயங்களைக் கைப்பற்ற போட்டிகள் நிகழ்ந்தன. குறிப்பாக சங்கரன் கோயில் வீரசைவர்களால் கையகபடுத்தப்பட்டு நெடுங்காலம் அவர்களின் சடங்குகளுக்குள் இருந்தது. வீரசைவர்களின் பூசாரிகள் பண்டாரங்கள் பண்டாரம் (சமய மரபு) என்றயினர். இவர்களை வைராகிகள் அல்லது வைராவிகள் என்றும் சொல்வார்கள். வீரசைவ தாந்த்ரீக நெறிகள் சிலவற்றை இவர்கள் கையாள்வதனால் இப்பெயர். இவர்கள் மெல்ல மெல்ல உபநிடத அய்யர்களால் கோயில்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று சிறிதளவு எஞ்சும் செல்வாக்கு பழனியில் மட்டுமே உள்ளது.

வீரசைவ லிங்கக் கோட்பாடு

வீரசைவ சமயம் 'தக்கிண மத சித்தாந்தம்' என்னும் தனிக் கோட்பாட்டினைக் கொண்டது. சைவ சமயத்தின் ஒரு லிங்கம், மூன்று-லிங்கம், ஆறு-லிங்கம், முப்பத்தாறு-லிங்கம் எனத் தத்துவ லிங்கங்களாகக் காட்டுவதே வீரசைவக் கருத்தோட்டம்.[1]

3 லிங்கம இட்ட-லிங்கம், பிராண-லிங்கம், பாவ-லிங்கம்
6 லிங்கம் ஆசார-லிங்கம், குரு-லிங்கம், சிவ-லிங்கம், சங்கம-லிங்கம், பிரசாத-லிங்கம், மகா-லிங்கம்
9 லிங்கம் நவ-லிங்கம் என்பது மேலே கண்ட மூன்றும், ஆறுமாய் அமைந்த ஒன்பது லிங்கங்கள் (3 கூட்டல் 6)
36 லிங்கம் 6 பெருக்கல் 6

வீர சைவமும் சைவ சித்தாந்தமும்

குழந்தைப் பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு, மாதவிடாய் தீட்டு, பூப்புத் தீட்டு, எச்சில் பட்ட உணவு அல்லது நீர் அருந்துவதால் ஏற்படும் உணவுத் தீட்டு மற்றும் தாழ்குலத்தவர்கள் தீட்டு என ஐந்து தீட்டுகள் சைவ சித்தாந்தத்தில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் வீர சைவர்கள் இத்தகைய தீட்டுகளை கடைப்பிடிக்கப்படுவதில்லை. மேலும் வீர சைவர்கள் பால் பேதம் சொல்லிப் பெண்களை ஆன்மீக விடயங்களில் இருந்தும் ஒதுக்கிவைப்பதும் இல்லை.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 214. {{cite book}}: Check date values in: |year= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_சைவம்&oldid=3415513" இலிருந்து மீள்விக்கப்பட்டது