வெரித்தாஸ் வானொலி
வெரித்தாசு வானொலி ஆசியா (Radio Veritas Asia) என்பது ஆசிய மக்களுக்காக சிற்றலை வரிசையில் ஒலிபரப்பாகும் ஒரு கத்தோலிக்க சமய, சமூக வானொலி சேவை ஆகும். இது பிலிப்பீன்சு நாட்டின் குவிசோன் நகரில் இருந்து ஒலிபரப்பாகிறது. இது பிலிப்பீன் வானொலி கல்வி, மற்றும் தகவல் மையத்தினால் நிருவகிக்கப்படுகின்றது. இம்மையம் முன்னர் மணிலா கத்தோலிக்க மறைமாவட்டத்தினால் நிருவகிக்கப்பட்டு வந்தது.
உரிமமுள்ள நகரம் | குவிசோன் நகரம், பிலிப்பீன்சு |
---|---|
அதிர்வெண் | சிற்றலை 16, 19. 25, 31 மீட்டர் |
முதல் ஒலிபரப்பு | 11 ஏப்ரல் 1969 |
மொழி | தமிழ், ஆங்கிலம் உட்பட பல ஆசிய மொழிகள் |
உரிமையாளர் | பிலிப்பீன் வானொலி கல்வி, மற்றும் தகவல் மையம் |
இணையதளம் | rveritas-asia |
வரலாறு
தொகு1958 திசம்பரில் இடம்பெற்ற தென்கிழக்காசிய கத்தோலிக்க ஆயர் மாநாட்டில் தென்கிழக்காசியாவில் வானொலி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 11 ஆண்டுகளின் பின்னர் 1969 ஏப்ரல் 11 இல் வெரித்தாசு வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. வெரித்தாஸ் என்பது இலத்தீன் மொழியில் உண்மை எனப் பொருள்.
இவ்வானொலி நிலையத்திற்குத் தேவையான உதவிகள் வத்திக்கானில் உள்ள மறைபரப்புச் செயலகத்திலிருந்தும், செருமனியில் உள்ள மிசியோ என்ற அறநிறுவனத்திடம் இருந்தும், வேறு சில அறநிறுவனங்களிடம் இருந்தும் கிடைக்கின்றன.[1]
நோக்கம்
தொகுஆசிய மக்களுக்கு அவர்களுடைய மொழியில் இயேசு கிறித்துவின் நற்செய்திகளை அறிவிப்பது, மனித வளர்ச்சிக்குத் தேவையான பயன்மிக்க கருத்துகளை அளிப்பது போன்றவை வெரித்தாசு வானொலியின் முக்கிய நோக்கங்களாகும்.[1]
மொழிகள்
தொகுவெரித்தாசு வானொலி தமிழ், சிங்களம், பர்மியம், உருது உட்பட பல மொழிகளில் மணிலாவில் இருந்து ஒலிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு மொழிப் பிரிவிற்கும் ஒரு பொறுப்பாளரும், அவருக்கு உதவியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
தமிழ்ப்பணி
தொகுதமிழ் மொழியிலான நிகழ்ச்சி "வெரித்தாசு வானொலி தமிழ்ப்பணி" என அழைக்கப்படுகிறது. 1976 நவம்பர் 1 முதல் தமிழ்ப்பணியின் ஒலிபரப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதலாவது தயாரிப்பாளராக எம். ஏ. சுவாமி என்பவர் பொறுப்பேற்றார்.[1] தமிழ்ப்பணி இலங்கை-இந்திய நேரப்படி நாள்தோறும் காலை 7 மணி முதல் 7:30 வரையும், மாலை 7:30 முதல் 8 மணி வரையும் ஒலிபரப்பப்படுகின்றது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 அரியாலையூர் உதயசந்திரன். "வெரித்தாஸ்". ஈழநாடு 1983.11.20. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2016.