முதன்மை பட்டியைத் திறக்கவும்

வெளியேற்றுதல் (துடுப்பாட்டம்)

வீசப்படும் பந்து இழப்பைத் தாக்குவது இழப்பு வீச்சு (bowled) என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: ஆஷஸ் தொடர் 2018-19)

துடுப்பாட்டத்தில் வெளியேற்றுதல் (Dismissal) என்பது ஒரு அணியினர் தங்கள் எதிரணியைச் சேர்ந்த ஒரு மட்டையாளரின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். இது ஆட்டமிழப்பு என்றும் அறியப்படுகிறது. ஒரு மட்டையாளர் ஆட்டமிழந்து களத்தில் இருந்து வெளியேறிய பிறகு அவரது அணியில் மீதமுள்ள வீரர்களில் ஒருவர் களமிறங்குவார். இறுதியாக ஒரு அணியில் மொத்தமுள்ள 11 வீரர்களில் 10 வீரர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அந்த அணியின் ஆட்டம் முடிவுக்கு வரும். இது அனைவரும் வெளியேறினர் (All out) என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக பிடிபடுதல், இழப்பு வீச்சு, ஓட்ட இழப்பு, இழப்பு முன் கால் மற்றும் இழப்புத் தாக்குதல் ஆகிய முறைகளின் மூலம் மட்டையாளர் வெளியேற்றப்படுவார். எனினும் பிழை வீச்சு (no ball) அல்லது அதைத் தொடர்ந்து வீசப்படும் பந்துவீச்சில் ஒரு மட்டையாளரை வெளியேற்ற இயலாது.

பொதுவான வெளியேற்றும் முறைகள்தொகு

விதி 32 இழப்பு வீச்சு (Bowled)தொகு

ஒருவேளை பந்துவீச்சாளர் முறையாக வீசிய பந்து நேரடியாகச் சென்று இழப்பைத் தாக்கினால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். அவ்வாறு நேரடியாக இல்லாமல் மட்டையாளரின் மட்டை அல்லது உடலில் பட்டு இழப்பைத் தாக்கினாலும் இந்த விதி பொருந்தும். எனினும் பந்து எதிரணி வீரர் ஒருவரின் கையில் பட்டு இழப்பைத் தாக்கும் போது மட்டையாளர் தன் எல்லைக்கோட்டிற்குள் இருந்தால் அவர் ஆட்டமிழக்க மாட்டார்.[1]

விதி 33 பிடிபடுதல் (Caught)தொகு

ஒருவேளை முறையான வீசப்படும் பந்தை மட்டையாடுபவர் தன் மட்டையால் (அல்லது மட்டையைப் பிடித்திருக்கும் கையுறைகளால்) அடிக்கும்போது. நிலத்தைத் தொடும் முன்பே எதிரணி வீரர்களுள் ஒருவர் அந்தப் பந்தைப் பிடித்துவிட்டால் மட்டையாடுபவர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.[2]

விதி 34 இழப்பு முன் கால் (Leg Before Wicket/LBW)தொகு

ஒருவேளை முறையாக வீசப்படும் பந்தை மட்டையாளர் தன் மட்டையில் அடிக்கும் முன்பு அவரது கால் அல்லது உடலின் பிற பகுதியில் பட்டால் அது இழப்பு வீச்சைத் தடுத்தது போல் கருதப்படும். எனவே மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். எனினும் அந்த பந்து இழப்பில் படாமல் விலகிச் சென்றிருந்தால் இந்த விதி பொருந்தாது. இதுதவிர மேலும் பல்வேறு அளவுகோல்கள் உள்ளன. எனவே அவற்றைக் கணிக்க மீளாய்வு முறை பயன்படுத்தப்படுகிறது.

விதி 38 ஓட்ட இழப்பு (Run Out)தொகு

ஒரு மட்டையாளர் இழப்புகளுக்கு இடையே ஓடி ஓட்டங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தன் மட்டையால் வரைகோட்டைத் தொடும் முன்பே அங்கு அமைந்துள்ள இழப்பை எதிரணி வீரர்களுள் ஒருவர் பந்தால் தாக்கிவிட்டால் அந்த மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.

ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது வரைகோட்டை விட்டு நகர்ந்தால் அவரை ஓட்ட இழப்பு மூலம் ஆட்டமிழக்கச் செய்யலாம். இது மன்கட் என்று அழைக்கப்படுகிறது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு தேர்வுப் போட்டியில் இந்திய வீரர் வினோ மன்கட், ஆத்திரேலிய வீரர் பில் பிரவுனை முதன்முறையாக இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதனால் இந்த முறை அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

விதி 39 இழப்புத் தாக்குதல் (Stumped)தொகு

ஒருவேளை மட்டையாளர் வீசப்பட்ட பந்தை அடிப்பதற்குத் தன் எல்லைக் கோட்டை தாண்டி முன்வரும்போது இழப்புக் கவனிப்பாளர் அந்த பந்தைப் பிடித்து இழப்பைத் தாக்கிவிட்டால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். ஆனால் அப்போது மட்டையாளரின் மட்டை அல்லது உடற்பகுதி எல்லைக் கோட்டிற்குள் இருந்தால் இந்த விதி பொருந்தாது.

மீளாய்வு முறைதொகு

பொதுவாக ஒரு கள நடுவருக்கு முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டால் அவர் களத்தில் இல்லாத மூன்றாவது நடுவருக்கு முடிவைப் பரிந்துரைப்பார். அதைத்தொடர்ந்து மூன்றாவது நடுவர் தொழில்நுட்ப உதவியுடன் முடிவை அறிவிப்பார். அதுபோல் கள நடுவரின் முடிவில் உடன்பாடு இல்லையென்றால் மட்டையாடுவர் அல்லது எதிரணியின் தலைவர் அந்த நடுவரின் முடிவை மீளாய்வு செய்யும்படி முறையிடலாம். அப்போது மூன்றாம் நடுவரின் முடிவே இறுதி முடிவாகக் கருதப்படும். எனினும் இழப்பு முன் கால் நிகழும்போது பந்து பாதியளவு மட்டுமே இழப்பில் பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டால் கள நடுவரின் முடிவே இறுதி முடிவாகக் கருதப்படும். இது ஆங்கிலத்தில் umpire's call என்று அழைக்கப்படுகிறது. அப்போது ஒரு அணி மீளாய்வு செய்திருந்தால் தனது வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவரின் முடிவை மீளாய்வு செய்ய ஒரு அணிக்கு வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் ஒரு வாய்ப்பும் தேர்வுப் போட்டிகளில் இரு வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. மீளாய்வில் சாதகமான முடிவு வந்தால் ஒரு அணி தனது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளும். பாதகமான முடிவு வந்தால் அது தனது வாய்ப்பை இழந்துவிடும்.

மேற்கோள்கள்தொகு

  1. "Law 32.1 – Out Bowled". MCC. பார்த்த நாள் 6 May 2019.
  2. "Law 33.5 – Caught to take precedence". MCC. பார்த்த நாள் 22 April 2019.