வேர்க்குரு
வியர்க்குரு அல்லது வேர்க்குரு (miliaria, prickly heat) என்பது தோலின் மேற்புறத்தில் சிறுசிறு கொப்புளங்களாய்த் தோன்றி அரிப்புண்டாக்கும் தோல் நோய் ஆகும். இது வெப்பமண்டலப் பகுதிகளில் கோடை காலத்தில் ஏற்படும். மிகப் பெரும்பாலும் குழந்தைகளையே இது பாதிக்கிறது.
வேர்க்குரு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | குடும்ப மருத்துவர் |
ஐ.சி.டி.-10 | L74.0-L74.3 |
ஐ.சி.டி.-9 | 705.1 |
நோய்களின் தரவுத்தளம் | 31431 |
ஈமெடிசின் | derm/266 |
ம.பா.த | D008883 |
நோய்த்தோற்றவியல்
தொகுவேர்க்குரு வியர்வைச் சுரப்பிகள் அடைபடுவதால் உண்டாகிறது. வெப்பமண்டலக் காலநிலை, இறுக்கமான உடைகளை அணிவது போன்றவை வியர்வைச் சுரப்பிகள் அடைபடுவதைத் தூண்டுகின்றன. இறந்த தோல் செல்கள், ஸ்டெஃபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியங்களால் அடைப்பு ஏற்படுகிறது. குழந்தைகளின் வியர்வைச் சுரப்பிகள் சரிவர வளர்ச்சி அடைந்திருக்காதாகையால் எளிதில் அடைபட்டு விடுகின்றன. குழந்தை வெயிலில் இருக்கும் போது வியர்வை உண்டாகிறது. ஆனால் வியர்வைச் சுரப்பிகள் அடைபட்டு இருப்பதால் வியர்வை வெளிவர முடியாமல் போகிறது. எனவே வியர்வை வியர்வைச் சுரப்பிகளிலிருந்து உடலுக்குள்ளேயே கசியத் துவங்குகிறது. இது நோய்எதிர்ப்பு செல்களைத் தூண்டி தீவிர அழற்சியைத் தூண்டுகிறது. எனவே தான் குத்துவது போன்ற வலி, கொப்புளங்கள் ஆகியவை உண்டாகின்றன.
வகைப்பாடு
தொகுவியர்வைச் சுரப்பிகள் அடைபடும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு வேர்க்குருவை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.
படிக வேர்க்குரு
தொகுபடிக வேர்க்குரு (Miliaria crystallina) வகையில் வியர்வைச் சுரப்பிகள் மேற்புறத் தோல் அடுக்கில் அடைபடுகின்றன. பொக்குளங்கள் முத்து முத்தாய் வியர்த்திருப்பது போல படிகமாய்க் காணப்படும். இவ்வகையில் அறிகுறிகள் அவ்வளவாய் இருப்பதில்லை.
சிவப்பு வேர்க்குரு
தொகுசிவப்பு வேர்க்குருவே (Miliaria rubra) நாம் பொதுவாகக் காணும் வேர்க்குரு வகை ஆகும். அழற்சியினால் சிவப்பு நிறமும் சில மில்லிமீட்டர் அளவுள்ள கொப்புளங்களும் உருவாகின்றன. ஊசியால் குத்துவது போல் கொடுமையான வலி உண்டாகும். பெரும்பாலும் இது துணியால் மூடப்பட்ட உடற்பகுதிகளிலேயே காணப்படும். பாதிக்கப்பட்ட இடத்தில் வியர்வை இருக்காது. வியர்வை தான் உடலைக் குளிர்விக்கிறது. வியர்வை சுரக்கப்படாமல் போகுமாயின் வெப்பம் உடலுக்குள்ளேயே தங்கி கடுமையான விளைவுகளை உருவாக்கலாம். எனவே வேர்க்குரு உள்ள குழந்தைகள் வெப்பம் உருவாகும் செயல்களில் (வெயிலில் விளையாடுதல்) ஈடுபட அனுமதிக்கப்படக் கூடாது.
உட்புற வேர்க்குரு
தொகுஉட்புற வேர்க்குரு (Miliaria profunda) வேர்க்குருவின் மிகக் கடுமையான வகையாகும். பெயர் உணர்த்துவதற்கேற்ப வியர்வைச் சுரப்பிகள் உட்புறமாக அடைபடுகின்றன. பெரும்பாலும் சிவப்பு வேர்க்குரு அடிக்கடி ஏற்பட்டதன் பின்விளைவாக இது உண்டாகிறது. கொப்புளங்களை சிவப்பு நிறத்தில் இல்லாமல் தசையின் நிறத்திலேயே காணப்படும். நெறிக்கட்டுதல், உடல்தகித்தல் (hyperpyrexia) போன்றவை காணப்படலாம். இந்த வகையில் வெப்பம் உடலுக்குள் தங்க மிக அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஏற்படும் போது கிறுகிறுப்பு, குமட்டல், படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும.
சீழ் வேர்க்குரு
தொகுஅழற்சியினாலும் பாக்டீரியாத் தொற்றினாலும் கொப்புளங்களை சீழ் வைக்கும் நிலையே சீழ் வேர்க்குரு (Miliaria pustulosa) ஆகும். இந்நிலை வேர்க்குருவைச் சரிவர கவனிக்காததால் உண்டாகும் விளைவு ஆகும்.
மருத்துவம்
தொகுவேர்க்குரு கொப்புளங்கள் இதர கொப்புளங்கள் உண்டாக்கும் நோய்களிலிருந்து வேறுபடுத்துதல் அவசியம். வியர்வை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் இறுக்கமான ஆடைகளணிவது தவிர்க்கப்பட வேண்டும். நல்ல காற்றோட்டமான பருத்தி இழையாலான ஆடைகள் நல்லது. குளிர் நீர்க் குளியல் இதமாக இருக்கும்.
ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படம் வேர்க்குரு பொடிகள் (prickly-heat powders) நல்ல பலனளிக்கக் கூடியவையே! அவற்றில் மென்தால் மற்றும் நுண்ணுயிர்க்கொல்லிகள் போன்றவை கலந்திருக்கும்.
கொப்புளங்கள் வெடித்து நீர் வடிதல், சீழ் வைத்தல் போன்றவை ஏற்படுமாயின் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.