வேலூர் (சங்ககாலம்)
சங்ககாலத்தில் ஓய்மானாட்டின் பகுதியாக விளங்கியது இந்த வேலூர். அக்காலத்தில் இதன் அரசன் நல்லியக்கோடன். சீறியாழ்ப் பாணர்களை இவனிடம் சென்று பரிசில் பெற்று உய்யுமாறு ஆற்றுப்படுத்தும் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இந்த வேலூர் வழியாகச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.
இக்காலத்தில் திண்டிவனம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள ஊர் இந்த வேலூர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். [1]
இதனை வேலூர் மாவட்ட வேலூர் எனக் கருதுவது ஏற்புடையதாக அமையவில்லை. காரணம் இந்த ஊர் எயிற்பட்டினம் என்னும் துறைமுகத்துக்கும் நல்லியக்கோடன் தலைநகர் ஆமூருக்கும் இடையில் இருப்பதாகப் பாடல் காட்டுகிறது.
பாடல் தரும் செய்தி
தொகுமழை இல்லாத கோடையில் வேலால் (கடப்பாறையால்) தோண்டிய கிணற்றிலிருந்து இவ்வூர் மக்கள் தண்ணீர் பெறுவார்களாம். [2]
இவ்வூரில் அவரை பவள நிறத்தில் பூத்திருக்குமாம். காயாம்பூ மயில் நிறத்தில் பூத்திருக்குமாம். முசுண்டைக்கீரை கொத்துக்கொத்தாக இருக்குமாம். காந்தளின் பூ கைவிரல் போல பூத்திருக்குமாம். கொல்லைப் புறங்களில் கோவம் என்னும் செந்நிறத் தம்பலப் பூச்சிகள் ஊருமாம். இது இந்த ஊரின் முல்லை நில வளமாம். இங்கு அருவி வெடிப்பு நிலத்தில் ஓடுமாம்.
மக்கள் வெயிலைத் தணிக்கும் புல் குரம்பைகளில் வாழ்வார்களாம். குரம்பையில் வாழும் எயிற்றியர் மாந்தளிர் போன்ற மேனி உடையவர்களாம். இவர்கள் வழிச் செல்வோருக்கு விருந்தாக சுட்ட ஆமான் கறியும், புளிச்சோறும் விருந்தாகத் தருவார்களாம்.