வேல் (ஆயுதம்)

வேல் (vel) என்பது இந்துக்களின் கடவுளான முருகனின் கைகளில் காணப்படும் தெய்வீக ஆயுதமாகும். பண்டைத் தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஆயுதமான ஈட்டியும் கிட்டத்தட்ட வேல் போன்றதாகும்.

வேல்
வகைஈட்டி
அமைக்கப்பட்ட நாடுதமிழ் நாடு,இந்தியா

இந்து சமயத்தில் வேல்

தொகு

இந்து சமயப் புராணங்களின் படி பார்வதி, தனது சக்தி முழுவதையும் ஒரு வேலுக்குள் அடக்கி, அதனைத் தன் மகனான முருகனுக்கு அசுரன் சூரபதுமனை அழிப்பதற்காக வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்கந்த புரணத்திலும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான கந்த புராணத்திலும் முருகனுக்கும் சூரபதுமனுக்கிடையே நடந்த போரில், இந்த வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபதுமனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான். ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது. முருகன் மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறார் என்பது இப்புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகள். இதனால் வீரத்தின் சின்னமான வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது என்ற நம்பிக்கையை இந்துக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

வழிபாட்டுச் சின்னம்

தொகு
 
யௌதேயர் காலத்து நாணயத்தில் (கிமு 200) வேல், சேவலுடன் காணப்படும் கார்த்திகேயன்
 
மகாபலிபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்லால் ஆன வேல். இது சங்க காலத்தைச் சேர்ந்தது.

சில முருகன் கோவில்களில், தெய்வத்தன்மை கொண்டதாக வேலுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. முருகன் தன் தாய் பார்வதியிடம் இருந்து வேலைப் பெற்ற நிகழ்வாக, ஆண்டுதோறும் முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் சிலர் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள். இச்செயல் அலகு குத்துதல் எனப்படுகிறது. முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

தமிழர் பண்பாட்டில் வேல்

தொகு

பண்டையத் தமிழர்கள் வேலை ஆயுதமாகப் பயன்படுத்தினர்.[1] "வெற்றிவேல், வீரவேல்" என்பது அக்காலத்துப் போர்க்களங்களில் முழங்கப்படும் முழக்கமாக இருந்தது. தற்காலத்திலும் முருகன் கோவில் திருவிழாக் கால ஊர்வலங்களில் கடவுளைப் போற்றும் வகையிலும் பக்தர்களை உற்சாகப்படுத்தவும் இம்முழக்கம் முழங்கப்படுகிறது. தமிழ் இந்துக்களின் பெயர்களில் சக்திவேல், ராஜவேல் பழனிவேல் போன்ற வேல் என முடியும் பெயர்களும் வேல்முருகன், வேலப்பன், வேலம்மாள் என்ற பெயர்களும் அதிகமாக காணப்படுகின்றன. முருகன் பக்திப் பாடல்களிலும் வேல் என்ற வார்த்தை அதிகமாகப் பயன்படுவதைக் காணலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Powerful Spiritual & Physical Weapons from Ancient Hindu Texts". The Chakra News. Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்_(ஆயுதம்)&oldid=3773851" இலிருந்து மீள்விக்கப்பட்டது