வல்ட்டூர்னோ கோடு

(வொல்டுர்னோ அரண்கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வல்ட்டூர்னோ கோடு (Volturno Line) அல்லது விக்டர் கோடு (Viktor Line) என்பது இரண்டாம் உலகப் போரில் இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு.

ரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்

செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. இதனால் இத்தாலி சரணடைந்தது. ஆனால் நாசி ஜெர்மனியின் படைகள் அந்நாட்டை ஆக்கிரமித்து நேச நாட்டுப் படைகளுடன் போரிட்டன. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் தெற்கில் முதலாவதாக இருந்தது வல்ட்டூர்னோ கோடு.

கிழக்கு-மேற்காக அமைந்திருந்த இந்த அரண்கோடு, கிழக்கே தெர்மோலி நகரில் தொடங்கி பைஃபெர்னோ மற்றும் வல்ட்டூர்னோ ஆறுகளில் கரையோரமாக நீண்டு இத்தாலியின் மேற்குக் கடற்கரையில் முடிவடைந்தது. தெற்கிலிருந்து முன்னேறி வந்த நேச நாட்டுப் படைகள் அக்டோபர் முதல் வாரத்தில் இக்கோட்டினை அடைந்து தாக்குதலைத் தொடங்கின. அக்டோபர் 3ம் தேதி அதிகாலையில் பிரித்தானிய 8வது ஆர்மியின் படைப்பிரிவுகள் பைஃபெர்னோ ஆற்றைக் கடந்தன. பிரித்தானியக் கமாண்டோக்கள் கடல்வழியாக தெர்மோலியில் தரையிறங்கி அதனைக் கைப்பற்றினர். இத்தாக்குதலை எதிர்கொள்ள இத்தாலிய முனைக்கான ஜெர்மானிய தலைமைத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் 16வது பான்சர் (கவச) டிவிசனை இப்பகுதிக்கு அனுப்பினார். மூன்று நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின்னர் பிரித்தானியர்கள் முறியடிக்கப்பட்டு பின்வாங்க வேண்டிய நிலை உருவானது. ஆனால் அதற்குள் புதிய துணைப்படைப்பிரிவுகள் பிரித்தானியர்களின் துணைக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் துணையுடன் ஜெர்மானியத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அக்டோபர் 12ம் தேதி வல்ட்டூர்னோ கோட்டின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க 5வது ஆர்மி தன் தாக்குதலைத் தொடங்கியது. இரு முனைத் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல் ஜெர்மானியர்கள் அடுத்த அரண்நிலையான பார்பரா கோட்டுக்குப் பின்வாங்கினர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்ட்டூர்னோ_கோடு&oldid=3591803" இலிருந்து மீள்விக்கப்பட்டது