வோல்ட்டா
அலெசான்றோ வோல்ட்டா அல்லது அலிசாண்ட்ரோ வோல்ட்டா(Alessandro Volta: 1745-1827)இத்தாலிய இயற்பியலாளர்.[1][2] மின்துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். 1800 களில் முதல் மின்கலத்தை உருவாக்கியவர். மீத்தேன் வாயுவைக் கண்டறிந்தவர்.[3] இவர் இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18, 1745ல் பிறந்தார். மின் ஆற்றல் மற்றும் மின் விசையைப்பற்றி ஆய்வு செய்ய மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இவ்வார்வத்தின் காரணமாகவே இவர் இலத்தீன் மொழியில் தம் மின் கண்டுபிடிப்பைப்பற்றி ஒரு கவிதையே எழுதிவிட்டார். இன்று அன்றாடம் பேச்சு வழக்கில் கூறப்படும் 110 வோல்ட்டு மின் அழுத்தம், 230 வோல்ட்டு மின் அழுத்தம், என்பதில் உள்ள வோல்ட்டு என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும், நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி(Voltmeter) என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும்.
வோல்ட்டா | |
---|---|
![]() | |
பிறப்பு | 18 பெப்ரவரி 1745 Como |
இறப்பு | 5 மார்ச் 1827 (அகவை 82) Como |
பணி | இயற்பியலறிஞர், புத்தாக்குனர், கல்வியாளர் |
வேலை வழங்குபவர் |
|
விருதுகள் | Knight of the Legion of Honour, கோப்ளி பதக்கம் |

இவர் 1774ல் அரச கல்விக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். 1775ல் மின் ஏற்பை உருவாக்கும் எலெக்டெரோஃவோரசு (electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776-77களில் வளிமங்களின் (வாயுக்களின்) வேதியல் பண்புகளை ஆய்ந்துகொண்டு இருந்தபோது, மெத்தேன் என்னும் ஒரு வளிமத்தைக் கண்டுபிடித்தார். இது எரியக்கூடிய வளிமம். இவ்வளிமம் கரிமமும் நான்கு ஐதிரசன் அணுக்களும் சேர்ந்த கூட்டணுக்களாலான ஓர் அடிப்படையான ஒரு வளிமம்.
1800ல் இவருக்கும் லூயிகி கால்வானி என்னும் இன்னுமொரு பெரிய மின் அறிஞருக்கும் இடையே அறிவியல் சார்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தன. கால்வானி அவர்களின் கருத்துக்கு மாறாக, இவர் மின்கல அடுக்கு ஒன்றை செய்து காட்டினார். இதன் வழி தொடர்ந்து மின்னோட்டம் இருப்பதைக் காட்டினார்.