வ. ராமசாமி அய்யங்கார் (வ. ரா, 17 செப்டம்பர் 1889 – 23 ஆகத்து 1951), தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும், தமிழறிஞரும் ஆவார். தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்களில் ஒருவர்.

வ. ராமசாமி
1940-இல் வ.ராமசாமி
பிறப்பு(1889-09-17)செப்டம்பர் 17, 1889
திருப்பழனம், தஞ்சாவூர்
இறப்புஆகத்து 23, 1951(1951-08-23) (அகவை 61)
மற்ற பெயர்கள்வ.ரா
அறியப்படுவதுஎழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்குப் பக்கத்தில் உள்ள திங்களூரைச் சேர்ந்த இவரின் பெற்றோர் வரதராஜ அய்யங்கார், பொன்னம்மாள் தம்பதியினர் ஆவர். 1910ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டது முதல் விடுதலை இயக்கத்தில் வ.ரா. தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். காந்தியடிகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டவராகத் திகழ்ந்தார். இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மூடப்பழக்க வழக்கங்களே என்று முழுமையாக நம்பினார். அதனால் அதனை எதிர்த்துப் போராடுவதில் வ.ரா. முனைந்து நின்றார். வ.ரா. வைதீக வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். தன் குல ஆசாரங்களைக் கைவிட்டார். பூணூல் போடுவதில்லை; குடுமியை நீக்கிக் கொண்டார். பெற்றோர், உற்றார், சகோதரர் ஆகிய உறவுகளைத் துறந்தார். இலங்கையில் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் போது, புவனேஸ்வரி அம்மையாரை மணந்து கொண்டார். வ. ராமசாமி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராகவும் விளங்கினார். அறிஞர் அண்ணா தமது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவைப் பற்றி எழுதுகையில் " அக்கிரகாரத்து அதிசய மனிதர் " என்று வருணித்தார். சிறந்த எழுத்தாளரான வ.ரா தான் எழுதிய சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா உள்ளிட்ட படைப்புகளின் வழியே விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்ததால் அவ்வாறு புகழப்பட்டார்.

கல்வி

தொகு

தஞ்சை மாவட்டம், உத்தமதானபுரம் கிராமத் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் வ.ரா.வின் ஆரம்பக் கல்வி தொடங்கியது. பிறகு தஞ்சை, திருச்சி என்று பல இடங்களில் அவர் படிப்பு தொடர்ந்தது. அவருடைய தந்தை வரதராஜ அய்யங்கார் நடுத்தரக் குடும்பத்தினர் பரம வைதீகர், பிழைப்புக்காக திருப் பழனம் என்ற ஊரில் குடியேறினார். தன் மகனைக் கல்வியில் சிறக்கச் செய்ய பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். அவருடைய நெருங்கிய நண்பர் கொடியாலம் வி.ரங்கசாமி அய்யங்கார், வ. ராமசாமியின் கல்விக்கு பல முறை உதவினார். 1911 முதல் 1914 வரை அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கினார். அரவிந்தரின் அன்பையும், ஆசியையும் பெற்றார்.

படைப்புத் திறன்

தொகு

தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண்கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களில் எழுதினார். 1914 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைப் பணியில் ஈடுபட்டார். தஞ்சையிலிருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரானார். பிறகு வர்த்தமித்திரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு, சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி என்று பல பத்திரிகைகளில் பணியாற்றினார். இவர் ஆசிரியராக இருந்த மணிக்கொடி தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய இதழாக விளங்கியது. வ.ரா.வின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகையில் சேர்ந்து, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அந்த வகையில் கல்கி, புதுமைப்பித்தன் போன்றவர்களைக் கூறலாம். கல்கியின் முதல் புதினமான விமலாவை, சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டார்.

காத்தரின் மேயோ என்ற அயல்நாட்டுப் பெண் இந்திய மாதர் என்ற பெயரில் எழுதிய நூலில் இந்தியர்களை மிகவும் இழிவாகச் சித்தரித்திருந்தார். இதனை மறுக்கும் விதத்தில் வ.ரா. எழுதிய "மாயா மேயோ அல்லது மாயோவுக்கு சவுக்கடி" என்ற நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆங்கிலேயர்களின் கண்டனத்துக்கும் உள்ளானது. சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா, கோதைத்தீவு போன்ற புதினங்களை எழுதினார். அவர் எழுதிய சிறுகதைகளில் சமூகத்துக்குச் சாட்டையடி கொடுத்துப் போராடும் தன்மை இருந்தது.

1930ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்ற வ.ரா. அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் "ஜெயில் டயரி" என்ற பெயரில் நூலாக வெளி வந்தது.சிறையில் இருந்த காலத்தில் இவருக்கு இருந்த ஆசுத்துமா நோய் மிகவும் அதிகமானது. உடல் நலிந்த நிலையில் சிறையிலிருந்து வெளிவந்தார். மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பராகவும், பாண்டிச்சேரியில் தீவிர வாத இயக்கங்களில் ஈடுபட்டிருந்த வ.வே.சு.ஐயர், அரவிந்தர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் நெருங்கிய சகாவாகவும் வ.ரா. திகழ்ந்தார்.

1944 ஆம் ஆண்டு இவரின் மகாகவி பாரதியார் நூல் பிரசுரமானது. பாரதியாரின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை இது சுருக்கமாக உரைக்கிறது. இந்த நூல் 27 அத்தியாயங்கள் கொண்டுள்ளது.

இவர் எழுதியவை நான்கு நாவல்கள்; ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள்; ஆறு சிந்தனை நூல்கள்; இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு நூற்படைப்புகள் ஆகும். வ. ரா வின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பாரதியின் உரைநடை வாரிசு

தொகு

புதுவையில் அரவிந்தருடனும் பாரதியுடனும் வ.ரா வசித்த பொழுது வங்காளி மொழியைக் கற்றுக் கொண்டு, பங்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய ஜோடிமந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார் . தினமும் சில பக்கங்கள் என்ற முறையில் மொழி பெயர்த்து , அதை நோட்டில் எழுதிக் கொண்டுவந்தார். ஒருமுறை வ.ரா தனது மொழிபெயர்ப்பை குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தபொழுது வந்த பாரதி, " என்ன ஓய் ! ரகசியம் ஒளிக்கிறீர் ? எடும் இப்படி ! " என்று எழுதிய நோட்டைப் படிக்க ஆரம்பித்தார் , மேலும் அரவிந்தரை அழைத்து, " பாபுஜி இந்த குறிப்புப்புத்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா ? பக்கிம் பாபுவின் " ஜோடிமந்திரங்களின் மொழி பெயர்ப்பு. நம் ராமசாமி ஐயங்கார் எழுதியிருக்கிறார். அற்புதமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். வசனத்தில் இனி எனக்கு வேலையில்லை, கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் கொள்கிறேன்' என்றார்.

நூற்படைப்புகள்

தொகு
  1. மாயா மேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி
  2. சுவர்க்கத்தில் சம்பாஷணை
  3. கற்றது குற்றமா
  4. மழையும் புயலும்
  5. வசந்த காலம்
  6. வாழ்க்கை விநோதங்கள்
  7. சின்ன சாம்பு
  8. சுந்தரி
  9. கலையும் கலை வளர்ச்சியும்
  10. வ.ரா. வாசகம்
  11. விஜயம்
  12. ஞானவல்லி
  13. மகாகவி பாரதியார்
  14. வாழ்க்கைச் சித்திரம்
  15. கோதைத்தீவு; 1950; 120 பக்கம்; ஸ்டார் பதிப்பகம்; சென்னை.

உரையாடல் எழுதிய திரைப்படங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ராமசாமி&oldid=3871054" இலிருந்து மீள்விக்கப்பட்டது