ஹரி நாராயண் ஆப்டே

இந்திய மராத்தி எழுத்தாளர்

ஹரி நாராயண் ஆப்டே (Hari Narayan Apte, தேவநாகரி : हरि नारायण आपटे) (8 மார்ச் 1864 - 3 மார்ச் 1919) என்பவர் இந்தியாவின் மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஒரு மராத்தி எழுத்தாளராவார்.

ஹரி நாராயண் ஆப்டே
இயற்பெயர்
हरी नारायण आपटे
பிறப்பு8 மார்ச் 1864
பரோலா, மகாராட்டிரம், இந்தியா
இறப்பு3 மார்ச் 1919
தொழில்எழுத்தாளர், புதின ஆசிரியர்
மொழிமராத்தி
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • காட் ஆலா பன் சின்ஹா கெலா (வரலாற்றுப் புதினம்)
  • பான் லக்ஷத் கோன் கெடோ.

சமகால சமூகத்தின் பல்வேறு அம்சங்களை உண்மையாக பிரதிபலிக்கும் புதினங்கள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதினார். இவர் தன் எழுத்துகள் வழியாக எதிர்கால மராத்தி புனைகதை எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார். இவருக்கு முன், புதின ஆசிரியர்கள் குலாபகாவலி (गुलबकावली) போன்ற புதினங்களை யதார்த்தமான சமூக சூழ்நிலைகளுடன் தொடர்பில்லாத கருப்பொருள்களுடன் எழுதினார்கள்.

1912 ஆம் ஆண்டு அகோலாவில் நடைபெற்ற மராத்தி சாகித்ய சம்மேளனத்திற்கு ஆப்டே தலைமை தாங்கினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஆப்டே 1864 ஆம் ஆண்டு மகாராட்டிரத்தின் காந்தேஷ் பிரதேசத்தில் உள்ள பரோலா நகரில் பிறந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, இவரது குடும்பம் பம்பாய்க்குச் (இப்போது மும்பை ) சென்று சில ஆண்டுகள் அங்கேயே தங்கி, பின்னர் 1878 இல் பூனாவுக்கு (இப்போது புனே ) குடிபெயர்ந்தது. அக்காலச் சமூக வழக்கப்படி, அடுத்த ஆண்டு இவரது 15 வயதில் இவருக்கு குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. (இவரது 27 வயதில் இவரது மனைவி இறந்துவிட்டார். அடுத்த ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.) ஆப்டே 1919 இல் இறக்கும் வரை, அவரது வாழ்நாள் முழுக்க புனேவில் வாழ்ந்தார்.

அக்காலம் பித்தானியர் இந்தியாவை ஆண்ட காலமாகும். மகாராட்டிரத்தில் மிகவும் கற்றறிந்த மற்றும் முதல்தர சமூக மற்றும் அரசியல் தலைவர்களான விஷ்ணுசாஸ்திரி சிப்பலுங்கர், வாசுதேவ் சாஸ்திரி கரே, வாமன் சிவ்ராம் ஆப்டே, பால கங்காதர திலகர், கோபால் கணேஷ் அகர்க்கர் ஆகியோர் இந்திய தேசியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக புனேவில் 1880 ஆம் ஆண்டு புதிய ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். 1880-1883 காலகட்டத்தில், ஆப்தே அந்தப் பள்ளியில் பயின்றார்.

1883 இல், ஆப்டே டெக்கான் கல்லூரியில் சேர்ந்தார். 1885 ஆம் ஆண்டில், பால கங்காதர திலகர் மற்றும் கோபால் கணேஷ் அகர்க்கர் ஆகியோர் பெர்க்குசன் கல்லூரியை புதிதாகத் தொடங்கியபோது, ஆப்டே உடனடியாக அந்தக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். கணிதம் தவிர அனைத்து பாடங்களிலும் சிறந்த மாணவராக ஆப்டே இருந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கணிதத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால், 1886 இல் தனது கல்லூரிப் படிப்பை முடிக்காமல் ஏமாற்றத்துடன் நிறுத்திக் கொண்டார்.

ஆப்டே தன் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சேக்சுபியர், மொலியர் ஆகியோரின் நாடகங்கள், வால்டர் ஸ்காட், ஜார்ஜ் டபிள்யூ எம் ரெனால்ட்ஸ் ஆகியோரின் புதினங்கள் மற்றும் ஜோன் கீற்ஸ், பெர்சி பைச்சு செல்லி ஆகியோரின் கவிதைகள் உட்பட மராத்தி, சமசுகிருதம், ஆங்கில இலக்கியங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் படித்தார். ஜான் ஸ்டூவர்ட் மில், எர்பெர்ட் இஸ்பென்சர், எட்மண்ட்பர்க், பிரான்சிஸ் பேக்கன், தாமஸ் மெக்காலே மற்றும் சாமுவேல் ஜோன்சன் ஆகியோரின் படைப்புகளையும் படித்தார் .

தொழில்

தொகு

ஆப்தே உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, 1882 ஆம் ஆண்டில், அவரது ஆசிரியர் கோபால் கணேஷ் அகர்கர் சேக்ஸ்பியரின் ஹேம்லெட்டை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதற்கு விகார் விலாசிதா (विकारविलसित) என்று பெயரிட்டார். அந்த மொழிபெயர்ப்பு குறித்து ஆப்டே 72 பக்க விமர்சனத்தை எழுதினார். அந்த காலத்தின் புகழ்பெற்ற இலக்கிய இதழான நிபந்த் சந்திரிகாவில் (निबंध-चंद्रिका) விமர்சனம் வெளியானது. ஆப்டேவின் அறிவார்ந்த விமர்சனத்தை அகர்கர் மனதார வாழ்த்தினார்.

அப்டே கல்லூரியில் படிக்கும் போது, மராத்தி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெறுவதற்காக, மகாராட்டிரத்தின் அப்போதைய சமூக வாழ்க்கையைக் காட்டுவதா தனது முதல் புதினமான மதலி ஸ்திதியை (मधली स्थिति) எழுதினார். (இந்த புதினம் ஜார்ஜ் டபிள்யூ.எம். ரெனால்டின் மிஸ்டரீஸ் ஆஃப் லண்டனின் தழுவலாகும். )

மஹைசுரச்சா வாக் (म्हैसूरचा वाघ) என்பது ஆப்டேவின் முதல் வரலாற்று புதினமாகும். (இது திப்பு சுல்தான் பற்றிய மீடோஸ் டெய்லரின் ஆங்கில புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. )

ஆப்டே சமகால சமூகம் தொடர்பாக 8 புதினங்களையும் 10 வரலாற்றுப் புதினங்களையும் எழுதினார். அலங்காரமற்ற, யதார்த்த மொழியின் சக்திவாய்ந்த, வெளிப்படையாக "இலௌகீக" சமூக நிகழ்வுகளின் வசீகரிக்கும் விளக்கம் இவரது சமூக புதினங்களின் தனிச்சிறப்பாக அமைந்தது.

இதழ்

தொகு

1890 ஆம் ஆண்டில், தனது 26 வயதில், ஆப்டே வார இதழான கரமானுக்கை (करमणूक) நிறுவினார். இவரது பன் லக்ஷ்யத் கோன் கெத்தோ புதினத்தின் முதல் அத்தியாயம் அதன் முதல் இதழில் வெளிவந்தது. இதழில் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்கள், மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த இலக்கியத்தை மராத்தி வாசகர்களுக்கு வழங்கினார். இதில் பல எழுத்துப் படைப்புகளை எழுதிய இவர் 27 ஆண்டுகள் வார இதழின் ஆசிரியராக இருந்தார்.

மற்ற பணிகள்

தொகு

சமூக சேவை

தொகு

ஒரு ஆரம்பக் காலக் கட்டுரையில், ஆப்டே தனது எழுத்துக்களின் முக்கிய நோக்கமாக மராத்தி வாசகர்களின் பொழுதுபோக்கு தவிர மகாராட்டிரத்தில் சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாக அறிவித்தார். இவரது காலத்தில், மரபுவழி சமூகம் அதை ஊக்கப்படுத்தியபோது, இவர் பெண் கல்வியை ஆர்வத்துடன் ஊக்குவித்தார். "சமூகத்தில் நான் காணாத எந்த பாத்திரமும் எனது சமூக புதினங்களில் இல்லை" என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார்.

1897-1907 காலக்கட்டத்தின் போது, இந்தியாவில் பிளேக் தொற்றுநோய் பரவியது. அப்போது மகாராட்டிரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட ஆப்டே தன்னலமின்றி முன்வந்தார். ஆளும் பிரித்தானிய அரசாங்கம் இவரது சேவைகளுக்கு கைசர்-இ-ஹிந்த் பதக்கம் வழங்கி கௌரவித்தது. 1918ல், புனே நகராட்சியின் மேயராகப் பணிபுரிந்தபோது, மகாரத்தில் இன்ஃபுளுவென்சா தொற்று பரவியது. மீண்டும், ஆப்தே நகர மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தார்.

நூல் பட்டியல்

தொகு

சமூக புதினங்கள்

தொகு
  • மதலி ஸ்திதி (मधली स्थिति) (1885)
  • கணபத்ராவ் (गणपतराव) (1886)
  • பான் லக்ஷ்யத் கோன் கெட்டோ (पण लक्षात कोण घेतो?) (1890)
  • பர் தியன் கோன் தேதா ஹை (இந்தி)
  • மீ (மி) (1895)
  • ஜக் ஹெ அசே ஆஹே (1899)
  • யஷவந்தராவ் கரே (यशवंतराव खरे)
  • அஜாச் (आजच)
  • பயங்கர் திவ்யா (भयंकर दिव्य)

வரலாற்றுப் புதினங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Apte, Hari Narayan (1972). Gaḍa ālā, paṇa sīha gelā (in மராத்தி). Ramyakathā Prakāśana.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரி_நாராயண்_ஆப்டே&oldid=3677030" இலிருந்து மீள்விக்கப்பட்டது