ஹவா அப்டி
மருத்துவர் ஹவா அப்டி (Hawa Abdi Dhiblawe சோமாலி: Xaawo Cabdi, அரபு: حواء عبدي, பிறப்பு மே 17, 1947) ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பிறந்தவர்.[1] இவர் சோமாலியாவின் முதல் பெண்மருத்துவர் ஆவார்.
ஹவா அப்டி حواء عبدي | |
---|---|
பிறப்பு | மே 17, 1947 மொகடிசு, சோமாலியா |
தேசியம் | சோமாலியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சோமாலய தேசிய பல்கலைக்கழகம் |
பணி | மருத்துவர் |
வலைத்தளம் | |
www |
வாழ்க்கை
தொகு1947-ம் ஆண்டு பிறந்தார் ஹவா. சிறு வயதிலேயே தாயை இழந்தார். அவரது நான்கு சகோதரிகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு ஹவாவுக்கு வந்தது. வீட்டையும் நிர்வகித்துக்கொண்டு, பள்ளிக்கும் சென்று வந்தார்.
திருமணம்
தொகுஇவரது 12 வயதில் வயதான போலிஸ்காரர் ஒருவருடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 7 வயதில் ஆப்பிரிக்க நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் பெண் உறுப்பு சிதைப்பு (genital mutilation) செய்யப்பட்டிருந்ததால், முதல் பிரசவம் மிகவும் கடினமாக இருந்தது. குழந்தை இறந்து போனது. கணவர் விவாகரத்துப் பெற்றுச் சென்றுவிட்டார்.
மருத்துவப்படிப்பு
தொகுவிவாகரத்தால் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தவருக்குப் படித்து, மருத்துவராக வேண்டும் என்ற ஆசை வந்தது. மீண்டும் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சோவியத் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ரஷ்யாவில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஏடன் என்ற சோமாலியரின் அறிமுகம் கிடைத்தது. சோமாலியாவின் முதல் மகப்பேறு மருத்துவர் என்ற சிறப்புடன் நாடு திரும்பினார் ஹவா. அவர் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் சிறிய மருத்துவமனையை ஆரம்பித்தார். சோமாலி தேசியக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.
புதிய வாழ்க்கை
தொகுஏடனும் ஹவாவும் திருமணம் செய்துகொண்டனர். மூன்று குழந்தைகள் பிறந்தன. சோமாலியா மக்களின் ஆரோக்கியம், மனித உரிமைகளுக்கான போராட்டம், பெண்களின் முன்னேற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார் ஹவா.
1991-ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் உச்சத்தை அடைந்தது. ஓயாத சண்டை. தெருவெங்கும் மனித உடல்கள். பொருட்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் அழிக்கப்பட்டன. தப்பிப் பிழைத்தவர்கள் ஹவாவின் உதவியை நாடி வந்தனர். தன்னுடைய நிலத்தில் அகதியாக வந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்தார் ஹவா. பெரும்பாலான ஆண்கள் கொல்லப்பட்டு விட்டதால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள்தான் எஞ்சியிருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டனர். உணவு, உடை வழங்கப்பட்டன. விரைவில் சிறிய வீடுகள் கட்டப்பட்டன. அருகில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டது. இதன் மூலம் அகதிகளாக வந்தவர்கள் சொந்தக் காலில் நிற்கும் நிலை உருவானது. குழந்தைகளுக்காகப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் எதிர்ப்பு
தொகுபெண்கள் படிக்கக் கூடாது. திரைப்படம் பார்க்கக் கூடாது. போனில் காலர் டியூன் வைக்கக் கூடாது. மேற்கத்திய ஆடை அணியக் கூடாது என்ற கொள்கையுடைய அல்-ஷபாப் தீவிரவாதிகளின் கோபத்துக்கு ஆளானார் ஹவா. ஒருமுறை துப்பாக்கி முனையில் அவரை வெளியேறச் சொல்லி மிரட்டினார்கள்.
‘மக்களின் உயிரைக் காப்பாற்றுவது குற்றம் என்றால் முதலில் என்னைக் கொல்லுங்கள். என் உயிருக்காக நான் எங்கும் தப்பிச் செல்லமாட்டேன். இந்த எளிய, அப்பாவி மக்களுடனே என் உயிர் போகட்டும்’ என்று எதிர்த்து நின்றார் ஹவா.
ஒவ்வொரு முறை தாக்குதல் நடக்கும்போதும் பெரிய அளவில் சேதாரம் ஏற்படும். மீண்டும் முதலிலிருந்து எல்லா வேலைகளையும் ஆரம்பிப்பார்கள்.
கடந்த 25 ஆண்டுகளில் ஹவா அப்டியின் கிராமத்தில் 90 ஆயிரம் மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வியாபாரம் என்று சகலமும் சொல்லித்தரப்பட்டு வருகிறது. அவரது மருத்துவமனையில் தினமும் 500 பேருக்கு இலவசமாகச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் பணிபுரிகிறார்கள். அவர்களில் இருவர் ஹவாவின் மகள்கள். இருவருமே மருத்துவர்கள்.
அன்பின் வழியில்
தொகுதிருமணம் நடந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஏடன், ஓர் இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். கணவரை விட்டுப் பிரிந்தார் ஹவா. சில ஆண்டுகளில் கணவர் இறந்தபோது, மகள்களுடன் சென்றார். ‘நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள் நினைவில் வருகின்றன. உன்னை மன்னித்துவிட்டேன் ஏடன். நீ சொர்க்கத்துச் சென்று சேர வேண்டும்’ என்றவர், ‘அன்பே அமைதிக்கான வழி என்று போதிக்கும் நானே மன்னிப்பு வழங்காவிட்டால் எப்படி?’ என்கிறார்.
கடந்த இருபது ஆண்டுகளாகச் சிறிதும் ஓய்வின்றி அதிகாலையி லிருந்து நள்ளிரவு வரை உழைத்துக்கொண்டே இருக்கிறார் ஹவா அப்டி. 90,000 மக்களைக் காப்பாற்றி வருவதற்கும் 20 லட்சம் மக்களுக்கு இலவச மருத்துவம் அளித்ததற்கும் எந்த விருதும் ஈடாகாது. நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ஹவாவுக்கு,[2] உலகின் பல நாடுகள் விருதுகளையும் பட்டங்களையும் வழங்கியுள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ http://sabahionline.com/en_GB/articles/hoa/articles/features/2012/03/22/feature-01
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-02. பார்க்கப்பட்ட நாள் 2015-02-02.