ஹொங்கொங்கில் தமிழ் மொழி

ஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய இளம் நண்பர்கள் குழு எனும் பெயரில் குழுமமாக இயங்கிய தமிழ் இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகரமாக நடாத்தியும் வருகின்றனர்.

நட்சத்திரங்களின் ஒழுங்கையில் ஆசிரியர்களும் மாணவர்களும் 2005 ஆம் ஆண்டு

வரலாறு

தொகு

2004 செப்டம்பர் மாதம் ஹொங்கொங்கில் முதன்முதலாக தமிழ் மொழி கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த தமிழ் வகுப்புகள் சிம் சா சுயி நகரில், சுங்கிங் கட்டடத்தில், 9 ஆம் மாடியில் அலாவுதீன் எனும் உணவகத்தில், சனிக்கிழமைகளில் மாலை நேர வகுப்புகளாகவே ஆரம்பம் ஆகின. ஹொங்கொங் உணவகச் சட்டத்திற்கு அமைய உணவகங்கள் மாலை மூன்று முதல் ஆறு மணிவரை, உணவகப் பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் மூடப்பட வேண்டும். அதன்படி உணவகம் மூடப்படும் நேரமான (3:00 முதல் 5:00) வரையில் அலாவுதீன் எனும் உணவகத்தில் வகுப்புகளை நடாத்த, அவ்வுணகத்தின் உரிமையாளர் சம்மதித்திருந்தார்.

வகுப்புகள் ஆரம்பமான முதல் மாதத்திலேயே 45 மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்தனர். குழந்தைகளின் வயது 5 முதல் 13 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருந்தனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான தமிழ் பயிற்சிகள், தமிழ் நூல்களின் அச்சு நகல் பிரதிகளாக எடுத்தே கற்பிக்கப்பட்டது. அதன்பின்னரே ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. அலாவுதீனும் வெங்கட்டும் தமிழ்க் கல்வி குறித்தான இணையத் தளங்களையும், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனங்களிம் நூல்களையும், சிங்கப்பூர் அரசு அங்கீகரித்த தமிழ்ப் பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களையும் பரிசீலித்து இறுதியிலேயே ஹொங்கொங் சூழலுக்கு ஏற்ற ஒரு பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்தனர். தேர்வின் முடிவாக சிங்கப்பூர் பாட நூல்களை தெரிவுசெய்தனர்.

குழந்தைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். எழுத்து பயிற்சிகள் மட்டும் பெறுவோர் முதல் பிரிவுக்கும், சொற்கள், சொற்றொடர்கள், பாடல்கள், கதைகள் போன்றவற்றை பயிலும் குழந்தைகள் இரண்டாம் பிரிவுக்கும், வாக்கியங்கள், உரைநடை, இலக்கணம் போன்றன மூன்றாம் பிரிவுக்கும் என வகுக்கப்பட்டது.

சுங்கிங் கட்டடத்தில், உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்ற தமிழ் வகுப்புகள் 2008 ஆம் ஆண்டு முதல் "யவ் மா டேய்" எனும் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

சிறப்புகள்

தொகு
 
2005 ஆம் ஆண்டு ஹொங்கொங் பண்பாட்டு மன்றம் முன்பாக ஆசிரியர்கள் தமிழ் கற்கும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்டப் படம்.

ஹொங்கொங்கில் தமிழ் பேசும் தமிழர்களான இவர்கள் தங்களிடையே இந்து, இசுலாம், கிறித்தவம் எனும் மதப் பேதங்களின்றி "நாம் அனைவரும் ஒரே தமிழர்கள்" என ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து கற்கின்றனர். "தாய்மொழி என்பது நமது பண்பாட்டின் அடையாளம், நமது மொழி தமிழ், அது ஒரு செம்மொழி" என்பதை உணர்த்தி ஆசிரியர்களும் தமிழ் கற்பிக்கின்றனர் என்பது மகிழ்வான விடயமாகும்.

இந்த தமிழ் மொழி கற்பிக்கும் திட்டத்தை ஹொங்கொங் இந்திய முஸ்லிம் கழகமும், தமிழ் பண்பாட்டு கழகமும் இணைந்து ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் என வகுப்பில் பொங்கலிட்டு ஆசிரியர்களும் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். திருக்குறள் வாசகங்களும் கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் திருக்குறள் வாசகங்களை விரும்பி மனனமாக்கிக்கொள்கின்றனர்.

முக்கியத்துவம்

தொகு
 
இது 2004-2005 ஆன் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட "ஆண்டு மலர்" நூலின் முகப்புப்பக்கம் ஆகும். அத்துடன் இதுவே ஹொங்கொங் தமிழ் வகுப்புகளில் வெளியிடப்பட்ட முதல் நூலும் ஆகும்.

பாடசாலையில் கற்கும் பாடங்களைத் தவிர, பகுதி நேர வகுப்புகளாக குரலிசை, நாட்டியம், பிரார்த்தனை, வாத்திய இசை போன்றவற்றையும் இக்குழந்தைகள் கற்று வருகின்றனர். இருப்பினும் 2004 செப்டம்பர் மாதத்திற்கு முன்புவரை ஹொங்கொங் தமிழர் வரலாற்றில் ஒரு முறையான தமிழ் மொழி பாடம் கற்பிக்கும் திட்டமோ வகுப்புகளோ இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் இந்திய இளம் நண்பர்கள் குழுவினரின் தன்னார்வ முயற்சி முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்திய இந்திய நண்பர்கள் குழு

தொகு

இந்த தமிழ் மொழி வகுப்புகளை தன்னார்வப் பணியாக தொடங்கிய இந்திய இளம் நண்பர்கள் குழு எனும் குழுமம், 2003 யூன் மாதம் விளையாட்டுகளின் மீதுள்ள ஆர்வத்தால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த குழு கடற்கரை கைபந்தாட்டம், காற்பந்தாட்டம், துடுப்பாட்டம், பந்தெறிதல் மற்றும் பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் பங்குபற்றுவதற்கான ஒரு குழுவாகவே உருவாக்கம் பெற்றதாகும்.

ஆண்டு விழா மலர்

தொகு

இந்த தமிழ் வகுப்புகளின் ஆண்டு நிறைவு நாளை, ஒவ்வொரு ஆண்டும் விழாவாக எடுத்து சிறப்பிக்கப்படுகின்றது. அத்துடன் "ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்" சிறப்பு மலர் வெளியிட்டும் சிறப்பிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடமாற்றம்

தொகு

சுங்கிங் கட்டடத்தில், அலாவுதீன் உணவகத்தில் நடைபெற்ற தமிழ் வகுப்புகள் 2008 ஆம் ஆண்டு முதல் கவுலூன், யவ் சிம் மொங் மாவட்டத்தில் உள்ள யவ் மா டேய் சமூகக்கூடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. வகுப்புகள் முன்பையும் விட கூடிய இடவசதியுடன் வகுப்புகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. வகுப்புகள் சனிக்கிழமைகளில் நடைபெறும்.

வெளியிணைப்புகள்

தொகு
  ஒங்கொங்:விக்கிவாசல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி&oldid=3230131" இலிருந்து மீள்விக்கப்பட்டது