ஆண்டு 0 அல்லது சுழியம் ஆண்டு (year zero) என்பது கிரெகொரியின் நாட்காட்டியில் (அல்லது அதன் முன்னோடியான யூலியன் நாட்காட்டியில்) ஆண்டுகளை எண்ணுவதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் அனோ டொமினி (AD) ஆண்டு முறையில் பயன்பாட்டில் இல்லை. இந்த அமைப்பில், கிமு 1 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நேரடியாக கிபி 1 ஆண்டு பின்பற்றப்படுகிறது. இருப்பினும், வானியல் ஆண்டு எண் முறைமையிலும் (யூலியன் ஆண்டு கிமு 1 உடன் ஒத்துப்போகிறது), அனைத்து நாட்காட்டி எண் அமைப்புகளுக்கான பரிமாற்றத் தரநிலையான ஐஎஸ்ஓ 8601:2004 அமைப்பிலும் சுழியம் ஆண்டு உள்ளது. இங்கு ஆண்டு சுழியம் கிரெகொரியின் ஆண்டு கிமு 1 உடன் இணைகிறது; (பார்க்க: மாற்று அட்டவணை). பெரும்பாலான பௌத்த, இந்து நாட்காட்டிகளில் சுழியம் ஆண்டு உள்ளது.

வானியல்

தொகு

வானியலில், கிபி 1 மற்றும் அதற்குப் பின்னரான ஆண்டுகளுக்கு அனோ டொமினி குறியீட்டின் அதே எண்களை ஒதுக்குவது பொதுவானது, இது பொது ஊழிக் குறிப்பிற்கு எண்ணியல் ரீதியாக சமமானதாகும். ஆனால் கிபி 1 இற்கும் கிமு 1 இற்கும் இடையே உள்ள தொடர்ச்சியின்மை பழங்கால மற்றும் நவீன தேதிகளை ஒப்பிடுவதில் சிரமமாக உள்ளது. எனவே கிபி 1க்கு முந்தைய ஆண்டு 0 என்றும், 0க்கு முந்தைய ஆண்டு −1 என்றும் கொள்ளப்படுகின்றன.

"AD", "BC", "CE" அல்லது "BCE" எழுத்துகள் வானியலில் தவிர்க்கப்பட்டுள்ளன. எனவே வரலாற்றுக் குறியீட்டில் கிமு 1 என்பது வானியல் குறிப்பில் 0 க்கு சமம், கிமு 2 என்பது −1 போன்றது. சில சமயங்களில் நேர்மறை ஆண்டுகள் + குறியால் குறிக்கப்படுகின்றன. 1740 ஆம் ஆண்டில் வானியலாளர் சாக் காசினி என்பவரால் இந்த ஆண்டு எண்ணிடல் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

வானியல் பயன்பாட்டின் வரலாறு

தொகு

1627-இல், செருமானிய வானியலாளர் யோகான்னசு கெப்லர், தனது ருடால்பின் அட்டவணையில், முதன் முதலாக ஒரு வானியல் ஆண்டை ஆண்டு சுழியமாகப் பயன்படுத்தினார். அவர் அதை "கிறிஸ்டி" (Christi) எனப் பெயரிட்டு, சூரியன், சந்திரன் மற்றும் கோள்களின் "சராசரி இயக்கப்" பக்கங்களில் முறையே BC (கிமு, Ante Christum) என்றும் AD (கிபி, Post Christum) என்றும் பெயரிடப்பட்ட ஆண்டுகளுக்கு இடையில் செருகினார்.[2] 1702-இல், பிரெஞ்சு வானியலாளர் பிலிப் டி லா ஐர் என்பவர் தனது Tabulæ Astronomicæ நூலில் ஓர் ஆண்டை கிறிஸ்டம் 0 (Christum 0) என்று பெயரிட்டு, ante Christum (BC, கிமு) என்று பெயரிடப்பட்ட ஆண்டுகளின் முடிவிலும், post Christum (AD, கிபி) என்று பெயரிடப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பும் வைத்தார். இதன் மூலம் கெப்லரின் கிறிஸ்டிக்கு 0 என்ற எண்ணைச் சேர்த்தது.[3]

இறுதியாக, 1740-இல், பிரெஞ்சு வானியலாளர் சாக் காசினி (காசினி II) மூலம் இந்த மாற்றம் நிறைவு செய்யப்பட்டது, அவரே மரபுரீதியாக சுழிய ஆண்டைக் கண்டுபிடித்ததாகக் கருதப்படுகிறார்.[4] அவரது வானியல் ஆய்வு அட்டவணைகளில், ஆண்டை வெறுமனே 0 என்று பெயரிட்டு, அதனை avant Jesus-Christ (கிமு) என்று பெயரிடப்பட்ட ஆண்டுகளின் முடிவிலும், après Jesus-Christ (கிபி) எனப் பெயரிடப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாகவும் வைத்தார்.[5]

ஐ.எசு.ஓ 8601

தொகு

ஐ.எசு.ஓ 8601:2004 (முன்னர் ISO 8601:2000, ஆனால் ISO 8601:1988 அல்ல) அதன் நாட்குறிப்பு அமைப்புகளில் வானியல் ஆண்டு எண்களை வெளிப்படையாகப் பயன்படுத்துகிறது. "அடிப்படை "ஆண்டு 0 க்கான வடிவம் நான்கு இலக்க வடிவமான 0000 ஆகும், இது வரலாற்று ஆண்டு கிமு 1 இற்கு சமமாகும். பல "விரிவாக்கப்பட்ட" −0000 மற்றும் +0000, அத்துடன் ஐந்து, ஆறு இலக்க எண் வடிவங்களும் சாத்தியமாகும். முந்தைய ஆண்டுகளும் எதிர்மறையான நான்கு-, ஐந்து- அல்லது ஆறு-இலக்க ஆண்டுகள் ஆகும், இவை சமமான கிமு ஆண்டை விட ஒன்று குறைவான தனி மதிப்பைக் கொண்டுள்ளன. எனவே -0001 = கிமு 2. ஐ.எசு.ஓ 646 (7-பிட் ASCII) எழுத்துக்கள் மட்டுமே ISO 8601 ஆல் அனுமதிக்கப்படுவதால், கழித்தல் குறியானது - ஆல் குறிக்கப்படுகிறது.

தெற்காசிய நாட்காட்டிகள்

தொகு

சாலிவாகன அல்லது கலியுகம் போன்ற இந்து, பௌத்த முறைகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான நாட்காட்டிகள் 0-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகின்றன. இந்த நாட்காட்டிகள் உலகின் பிற பகுதிகளில் உள்ள (தற்போதைய ஆண்டுகளைப் பயன்படுத்தும்) பெரும்பாலான நாட்காட்டிகளைப் போலல்லாமல், கடந்த, காலாவதியான அல்லது முழுமையான ஆண்டுகளைப் பயன்படுத்துகின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Richards, E. G. (2013). "Calendars". In Urban, Sean E.; Seidelmann, P. Kenneth (eds.). Explanatory Supplement to the Astronomical Almanac (3 ed.). Mill Valley, California: University Science Books. p. 591. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-891389-85-6.
  2. "Tabulae Rudolphinae – Ioannes Keplerus" (1627) 191 (42), 197 (48), 203 (54), 209 (60), 215 (66), 221 (72), 227 (78).
  3. Tabulae Astronomicae – Philippo de la Hire (1702), Tabulæ 15, 21, 39, 47, 55, 63, 71; Usus tabularum 4.
  4. Robert Kaplan, The nothing that is (Oxford: Oxford University Press, 2000) 103.
  5. [Jacques] Cassini, Tables astronomiques (1740), Explication et usage 5; Tables 10, 22, 53.
"https://ta.wikipedia.org/w/index.php?title=0_(ஆண்டு)&oldid=3427397" இலிருந்து மீள்விக்கப்பட்டது