1978 விழுப்புரம் கொடூரம்
1978 விழுப்புரம் வன்கொடுமை (1978 Villupuram atrocity) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் 1978 சூலையில் நடந்த சாதி அடிப்படையிலான வன்முறை நிகழ்வு ஆகும். இந்த வன்முறையில் தலித் மக்கள் வசிக்கும் பெரியபறைச்சேரியில் 12 தலித்துகள் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் எரிக்கப்பட்டன. ஆதிக்க சாதி ஆணொருவன் தலித் பெண்ணைத் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதற்கு அந்தப் பெண்ணின் கணவன் மற்ற தலித்துகளுடன் சேர்ந்து ஆதிக்க சாதி ஆணைத் தாக்கியதாகவும் முதல் நாள் புகார் கூறப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது. ஆதிக்க சாதியினர் ஏவு வானவெடிகளால் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதுடன் தீ வைப்பு, தாக்குதல் போன்றவற்றிலும் ஈடுபட்டனர். தலித்துகளும் பல ஆதிக்க சாதியினரின் வீடுகளுக்கு தீ வைத்து பழிவாங்கினார்கள்.
இந்த வழக்கில் முப்பத்தி நான்கு சாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டனர், 3 பேருக்கு மரண தண்டனையும், 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பின்னணி
தொகுவிழுப்புரம் நகரின் மையப்பகுதியில் பெரியபறைச்சேரி அமைந்துள்ளது. இந்த குக்கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான தலித்துகள் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும் கூலிகளாகவும் வேலை செய்துவந்தனர். சந்தையில் வன்னியர், முதலியார், நாடார் சாதியைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வணிகம் செய்துவந்தனர். [1] பெரியபறைச்சேரியானது எண்ணூறு மண் வீடுகள் மற்றும் 3,000 மக்கள் வசிக்கும் ஓலை குடிசைகளைக் கொண்ட ஒரு சேரி ஆகும். அதில் கிட்டத்தட்ட அனைவரும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். சேரியில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்கவர்கள் தங்கள் பாரம்பரிய வேலைகளையும் செய்துவந்தனர். [2] 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, விழுப்புரத்தில் வாழும் தலித் மக்களில் ஏறக்குறைய பாதி பேர் பெரியபறைச்சேரியில் வசித்துவந்தனர். [3] அவர்கள் தீண்டாமை மற்றும் பிரிவினைக்கு ஆட்படுத்தப்படிருந்தனர். மேலும் தலித்துகள் பெரும்பாலும் இழிவான சாதிப் பெயர்களால் குறிப்பிடப்பட்டனர். [4]
விழுப்புரத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகள், வருவாய்க் கோட்ட அலுவலர், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகிய அனைவரும் தலித்துகள்.[5]
காரணங்கள்
தொகு1978 சூலை 23 அன்று மதியம் காய்கறிக் கடை ஒன்றில் பணிபுரியும் ஆதிக்க சாதித் தொழிலாளி ஒருவரால் காய்கறி சந்தையில் ஒரு இளம் தலித் பெண் அவமதிக்கப்பட்டார். கணவரின் மதிய உணவு சமைக்கும் தேவைக்காக அந்தப் பெண் தக்காளியை எடுக்க கீழே குனிந்த போது அவர் அந்தப் பெண்ணிடம் சரசமாடி மார்பகத்தை பிடித்ததாகவும் கூறப்படுகிறது.[5] [6] பின்னர் அவரது கணவர் சம்பவத்தைப் பற்றி விசாரிக்க குற்றவாளியின் இடத்திற்குச் சென்றார், பின்னர் அவரை மற்ற தலித்துகளுடன் சேர்ந்து அடித்தார். [7] [8]
காய்கறி வணிகர் சங்கம், அன்றிரவு துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததுடன், தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுநாள் கடையடைப்பு செய்யவுள்ளதாக தெரிவித்தனர். மறுநாள் காலை, தாக்கப்பட்ட ஆதிக்க சாதிக்காரர் தன்னை தாக்கிய ஏழு தலித் நபர்களை அடையாளம் காட்டி புகார் அளித்தார். மறுநாள் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் தலைமையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஊர்வலம் சென்றனர். [3] ஆர்ப்பாட்டத்தின் போது, "தலித்களை நகரத்தின் மையப் பகுதியில் இருந்து வெளியேற்றுங்கள்", "பறையர்களின் மனைவிகள் எங்கள் காமக்கிழத்தியர்" போன்ற தலித் விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட தலித்துகள் காவல்நிலையத்திற்கு வந்ததையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே காவல் துறையினர் சமாதானக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். [9] மேலும் தாக்கியவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. [3] எவ்வாறாயினும், சாதி இந்துக்கள் சமாதானக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக முத்துத்தோப்பில் ஒரு இரகசியக் கூட்டத்தைக் கூட்டினர், அங்கு ஆதிக்க சாதியினர் அனைவரும் பெரியபறைச்சேரியைத் தாக்க முடிவெடுத்தனர். [3] [9] [10]
வன்முறை
தொகுசூலை 24 இரவு 11:30 மணிக்கு, பெரியபறைச்சேரியை நோக்கிச் சென்ற ஆதிக்க சாதிக் கூட்டம், இரண்டு ரிக்ஷாகாரர்களைத் தாக்கி, அவர்களது ரிக்ஷாக்களை எரித்தனர். ரத்தம் வழிந்தோடிய ரிக்ஷாகாரர்கள், காவல் நிலையத்திற்குச் சென்று, கம்பிகளாலும், கத்திகளாலும் தாக்கப்பட்டதாகக் கூறி தாக்கியவர்கள் மீது புகார் அளித்தனர். [6] தாக்கச் சென்ற கூட்டம் எட்டு தலித் வீடுகளுக்கு தீ வைத்தது. [7] மேலும் கூட்டத்தினர் வெளியில் இருந்து சேரியைத் தாக்க நகரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவந்த ராக்கெட்டுகள் மற்றும் வெடிகளைப் பயன்படுத்தினர். அருகில் இருந்த தலித் ஆசிரியர் ஒருவரின் சொத்து முதலில் தாக்கப்பட்டு தீயில் முற்றிலும் எரித்து நாசமாக்கபட்டது. தீயை அணைக்க வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனம், ஆதிக்க சாதியினரால் மறித்து நிறுத்தப்பட்டது. பின்னர் தலித்துகள் வந்து கூட்டத்தை விலக்கி வாகனம் செல்ல வழி செய்தனர். பின்னர் கூட்டம் கலைந்தது. இந்த தாக்குதலில் பல தலித் வீடுகள் இடிந்தன. [6] [11]
சூலை 25 காலை, ஆதிக்க சாதியினர் ராக்கெட்டுகளைக் கொண்டு குறிவைத்து மேலும் ஐந்து குடிசைகளை அழித்தனர். [12] இதற்கு பழிவாங்கும் வகையில் தலித்துகள் ஆதிக்க சாதியினரின் வீடுகளுக்கு தீ வைத்து தாக்கினர். [9] இந்தக் கலவர படுகொலைகளின் போது இரும்பு தலைக்கவசமணிந்த நூற்றுக்கணக்கான காவல் துறையினர் ஏதும் செய்யாமல் சும்மா நின்றனர். ஒரே நாளில் 80 முதல் 100 தலித் வீடுகள் அழிக்கப்பட்டன. மேலும் குறைந்தது 12 தலித்துகள் மண்டை உடைந்தும், முக்கிய உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டும் கொல்லப்பட்டனர். [13] [12] விழுப்புரம் காவல் படையின் கணிசமான பகுதி மதுரை மாநகராட்சித் தேர்தல் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டதை அடுத்து, அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. [14]
சூலை 27 அன்று மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. [6]
வன்முறையின் போது, தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன், 200 கி.மீ., தொலைவில் உள்ள மதுரையில், மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.[5]
பின்விளைவுகள் மற்றும் நம்பிக்கைகள்
தொகுஇந்திய தேசிய காங்கிரசு தலைவர் ஜெகசீவன்ராம், மு. கருணாநிதி, முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டனர். அரசாங்கம் 1978 சூலை 29 அன்று விசாரணை ஆணையத்தை அமைத்தது. குற்றத்தில் ஈடுபட்ட 41 சாதி இந்துக்களில் 34 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற தீர்ப்பில், மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பலர் பின்னர் தண்டனை காலம் குறைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். [9] [15] [16]
குறிப்புகள்
தொகு- ↑ Balasubramaniam 2013, ப. 117.
- ↑ Economic and Political Weekly 1978, ப. 1723.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Economic and Political Weekly 1978, ப. 1721.
- ↑ Economic and Political Weekly 1978, ப. 1724.
- ↑ 5.0 5.1 5.2 Digital, India Today (August 31, 1978). "Breasts of a Harijan girl spark off orgy of violence in Villupuram, Tamil Nadu". இந்தியா டுடே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Economic and Political Weekly 1978.
- ↑ 7.0 7.1 Balasubramaniam 2013.
- ↑ Vakil 1985.
- ↑ 9.0 9.1 9.2 9.3 Balasubramaniam 2013, ப. 118.
- ↑ Vakil 1985, ப. 89.
- ↑ "TAMIL NADU-The Villupuram Atrocity" (in en). Economic and Political Weekly 13 (41): 7–8. 2015-06-05. https://www.epw.in/journal/1978/41/our-correspondent-columns/tamil-nadu-villupuram-atrocity.html.
- ↑ 12.0 12.1 Economic and Political Weekly 1978, ப. 1722.
- ↑ Vakil 1985, ப. 90.
- ↑ Economic and Political Weekly 1978, ப. 1725.
- ↑ Balasubramaniam 2013, ப. 119.
- ↑ Balasubramaniam 2013, ப. 120.
துணைநூல் பட்டியல்
தொகு- Vakil, A. K. (1985). Reservation Policy and Scheduled Castes in India (in ஆங்கிலம்). APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7024-016-7.
{{cite book}}
: CS1 maint: date and year (link) - Balasubramaniam, J. (2013-07-01). "Villupuram Atrocity: Physical and Symbolic Violence against Dalits" (in en). Contemporary Voice of Dalit 6 (2): 117–122. doi:10.1177/0974354520130201. பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-328X. https://doi.org/10.1177/0974354520130201.
- Economic and Political Weekly (1978). "The Villupuram Atrocity". Economic and Political Weekly 13 (41): 1721–1725. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/4367015.