2006 சான் சல்வடோர் அடென்கோவில் உள்நாட்டுக் கலவரம்

2006ஆம் ஆண்டு சான் சல்வடோர் அடென்கோவில் உள்நாட்டுக் கலவரம் மெக்சிக்கோ நகரத்திலிருந்து ஏறத்தாழ 30 km (19 mi) தொலைவில் மெக்சிக்கோ மாநிலத்தின் டெக்சாக்கோ நகர உள்ளூர் சந்தையில் 60 பூ விற்பவர்களை காவல்துறையினர் தடுத்தபோது மே 3, புதன்கிழமை தொடங்கியது. காவல்துறை வன்முறையைப் பயன்படுத்தி எதிர்த்தவர்களை கைது செய்தனர். மெக்சிக்கோ நகரிலிருந்து வடகிழக்கில் 25 km (16 mi) தொலைவிலிருந்த புறநகர் பகுதியான சான் சல்வடோர் அடென்கோ 2002ஆம் ஆண்டில் தங்கள் நிலப்பகுதியில் வானூர்தி நிலையம் அமைக்கவிருந்ததை எதிர்த்து நடத்தியப் போராட்டத்தால் பெயர் பெற்றிருந்தனர். எனவே கைது செய்யப்பட்ட பூ வியாபாரிகள் இந்த புறநகர்ப் பகுதி மக்களிடம் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டினர். இவர்களுக்கு ஆதரவாக அடென்கோ குடிமக்கள் டெக்சாக்கோ செல்லும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கான மாநிலக் காவல்துறையினர் இந்த சாலை மறியலை நீக்க அனுப்பப்பட்டனர்; ஆனால் அவர்களால் ஐந்து முறை முயன்றும் போராட்டதை முறிக்க முடியவில்லை.

இந்த முயற்சிகளின்போது காவல்துறை வன்முறையைக் கையாண்டது; இரண்டு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர், பல பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர்.

தேசிய மனித உரிமைகள் ஆணைய அறிக்கைதொகு

அக்டோபர் 16, 2006இல் மெக்சிக்கோவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (CNDH) தலைவர் ஒசே லூயி சோபரானெசு பெர்னான்டசு இந்த வழக்கில் ஐந்து மாத புலனாய்விற்குப் பிந்தைய முடிவுகளை அறிவித்தார். இந்த அறிக்கையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதனை ஓர் "துன்பியல்" நிகழ்வு எனக் குறிப்பிட்டது; மாநில மற்றும் கூட்டாட்சியின் காவல்துறையினரின் கூடுதலான எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதையும் வன்முறையையும் சுடுகலன்களைப் பயன்படுத்தியதையும் குறிப்பிட்டது.[1] குறிப்பாக தனது அறிக்கையில்:

  • 207 மக்கள் (பத்து சிறார்கள் உட்பட) மிகக் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
  • 145 பே காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • 26 பெண்கள் பாலின வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
  • 5 வெளிநாட்டினர், வன்முறைக்கு ஆளானதுடன், சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.[2]

இந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் ஆணையம் கூட்டாட்சி பொதுப் பாதுகாப்புச் செயலருக்கும் மெக்சிக்கோ மாநில ஆளுநருக்கும் தேசிய புலம்பெயர்ந்தோர் கழகத்திற்கும் தனது பரிந்துரைகளை அனுப்பியது. இவற்றில் பாதுக்காப்புப் படையினருக்கான மேம்பட்ட பயிற்சிகள், உயிரிழந்த இருவரின் உறவுகளுக்கு தகுந்த நட்டயீடு, பிற மனித உரிமை மீறல்களுக்கும் நட்ட ஈடு, வெளிநாட்டினரை வெளியேற்றும் செயற்பாடுகளில் சீர்திருத்தங்கள் ஆகியன அடங்கும். அறிக்கையின் முடிவாக இந்த வன்மைறை பேச்சுவார்த்தைகள் மூலமாக தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆயினும் காவல்துறையினரை பயன்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டது. [2]

காவல்துறை வன்முறைதொகு

தேசிய மனித உரிமைகள் ஆணையம் காவல்துறை கூடுதலான ஆட்பலத்தைப் பயன்படுத்தியதாகவும் சன்னல்களையும் அறைக்கலன்களையும் உடைத்ததாகவும் படுக்கைகளிலிருந்து குடிகளை வெளியே இழுத்ததாகவும் குற்றம் சாட்டியது. பாலியல் வன்முறை, கைது செய்யப்பட்டவர்களின் மீது வன்கலவி மற்றும் சிறார், முதியோர்,மாற்றுத்திறனாளிகள் மீதான வன்முறை ஆகியவற்றையும் விசாரித்தது.

மூலங்கள்தொகு

மேற்சான்றுகள்தொகு

Atenco - Women of Mexican Dissent the New Target http://www.scoop.co.nz/stories/HL0605/S00313.htm

வெளி இணைப்புகள்தொகு