2010 சனவரி 15 கதிரவ மறைப்பு

ஜனவரி 15, 2010 அன்று சாரோசு சுழற்சி 141 -ன் இருபத்திமூன்றாவது கதிரவ மறைப்பு ஏற்படுகிறது; இது பொங்கல் கிரகணம் எனப்படுகிறது. இது ஒரு வலய மறைப்பு என்பதே இதன் சிறப்பு. இக்கிரகணம் ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, நடு ஆசியா, தென் ஆசியா, சீனா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தென்படுகின்றது. இதன் வலய கட்டம் (annular phase) மத்திய ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, மியன்மார், கிழக்கு சீனாவில் சில இடங்கள் ஆகிய பகுதிகளில் தென்படுகின்றது.

பொங்கல் கிரகணம் ஏற்படும் இடங்கள்
அசைவூட்டுப் படம்

வலய மறைப்பு ஏன் ஏற்படுகிறது?

தொகு

2010-ஆம் ஆண்டு சனவரி 03ஆம் தேதியன்று பூமி ஞாயிற்றண்மை நிலையை (perihelion)வந்தடையும். (அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு சிறுமமாக இருக்கும்: 147மில்லியன் கிலோ மீட்டர்) அதன் காரணமாக, மறைப்பிற்கு 12 நாட்கள் முன்னதாகவே (சனவரி 3 அன்று), சூரியனின் வட்ட உருவம் வழக்கத்தைவிட பெரிய அளவில் தென்படும். அதேபோல், சனவரி 17ஆம் தேதியன்று (01:41 UTC) நிலவு புவிச்சேய்மை நிலையை (apogeee)வந்தடையும். (நிலவு பூமியிலிருந்து பெரும தொலைவில் இருக்கும்: 406,433கி.மீ.) எனவே, கிரகணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே சந்திரனின் வட்ட உருவம் வழமையை விட சிறிய அளவில் இருக்கும்.

இவ்விரண்டு நிகழ்வுகளும் (புவியின் ஞாயிற்றண்மை நிலை, நிலவின் புவிச்சேய்மை நிலை) ஒன்றுபடுவதால், சனவரி 15-ஆம் தேதி நிகழும் கங்கண மறைப்பு வழக்கத்தை விட அகலமாகத் தோன்றும்.

மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள்

தொகு

சனவரி 15 - அன்று தெரியவிருக்கும் வலய மறைப்பின் போது பலவிதமான அயனிமண்டல ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். இதன் பொருட்டு நான்கு ஆராய்ச்சி எறிகணைகளை (sounding rockets) சனவரி 14 -அன்றும் மேலும் ஐந்து ஆராய்ச்சி எறிகணைகளை சனவரி 15 - அன்றும் செலுத்தி ஆய்வுகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

  • மிக வேகமாக மாற்றமடையும் சூரியப் பாயம் (solar flux) வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளின் ஒளிவேதியியலையும் மின்னியக்கவிசையியலையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்திடும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது -- குறிப்பாக நிலநடுக்கோட்டு மத்திய வளிமண்டல எல்லை (equatorial mesopause) , வெப்ப வளிமண்டல-அயனிமண்டல (thermosphere-ionosphere) அடுக்குகளில் ஞாயிறுமறைவுக்குப் (sunset) பிறகு அயனிமண்டலத்தின் அயனியாக்கத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு மின்சுழல்கள் உருவாவது சில நாட்கள் திடீரென நடக்கின்றது; இதனால் ஜி.பீ.எஸ் எனப்படும் நில வழிநடத்து (செயற்கைக்கோள்) அமைப்பில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த ஆராய்ச்சி இதைப்பற்றி புரிந்துகொள்ள உதவும் என்று விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கூறுகிறது.[1]

எங்கு தெரியும் இந்த பொங்கல் கிரகணம்?

தொகு
  • கங்கண கிரகணமாகத் தெரியும் இடங்கள் : மத்திய ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 300 கி.மீ.-அகலம் கொண்ட 12,900 கி.மீ நீளமுடைய நெடும்பாதை; புவியின் 0.87 விழுக்காடு நிலவின் எதிர்நிழலினுள் வரும்.
  • அதாவது, உகாண்டா, கென்யா, தெற்கு சோமாலியாவில் தொடங்கி இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவுகள் சென்று, பின்னர் தென்னிந்தியா, வட இலங்கை வழியே மியான்மாரை அடைந்து இமய மலையின் வழியே சீனாவைச் சென்றடையும்; சீனாவில் யூனான், சிசுவான் மாநிலங்களை அடைந்தபின் நிலவின் இந்த எதிர்நிழல் (antumbra) ஷாங்க்சி, ஊபே மாநிலங்களைத் தாண்டிய பின்னர் புவியை விட்டே வெளியேறி விடும்.
  • பகுதி கிரகணமாகத் தெரியும் இடங்கள்: ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தோனேசியா பகுதிகள் உள்ளடங்கிய பாதை நிலவின் புறநிழலில் (penumbra) வரும்.[2]

தமிழ்நாட்டில் பொங்கல் கிரகணம் தெரியும் இடங்கள்

தொகு

தமிழ்நாட்டில் கங்கணகிரகணம் தோன்றுவது இதுதான் முதல் முறையா?

தொகு

சனவரி 15, 2010 அன்று தோன்றும் வலய மறைப்பிற்கு முன்னர் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 1901 -ஆம் ஆண்டு நவம்பர் 11 -அன்று ஒரு வலய மறைப்பு ஏற்பட்டது! இதுவும் சாரோசு சுழற்சி 141 -இன் ஒரு அங்கமே.

பொங்கல் கிரகணத்திற்குப் பின் 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -அன்று மீண்டும் ஒரு கங்கணகிரகணம் தோன்றும்[3].

(பெருமமாக) மறைக்கும் நேரம் (இந்திய நேரப்படி)

தொகு
  • நாகை - 13:14, கன்னியாகுமரி - 13:15, திருநெல்வேலி - 13:16, மதுரை - 13:20, ராமேசுவரம் - 13:21, சிவகங்கை - 13:22, தஞ்சாவூர் - 13:23, திருவாரூர் - 13:24, காரைக்கால் - 13:24.[4]

கிரகணங்கள் பற்றிய மூடநம்பிக்கைகள்

தொகு

கிரகணங்கள் பற்றிய மூடநம்பிக்கைகள் சிலவற்றைப் பற்றி பொங்கல்.காம் என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள்:

  • "கிரகணத்தின்போது வெளியே செல்லக்கூடாது".
  • சரியல்ல. மறைப்பின்(கிரகணத்தின்) போது வெளியே செல்ல ஒருவர் அஞ்சுமளவிற்கு சூரியன் புதிதாகவோ அல்லது மோசமாகவோ எதையும் உமிழப்போவதில்லை. அனலி மறைப்பு(சூரிய கிரகணம்) என்பது இயற்கையின் ஆச்சரியமூட்டகூடிய ஒரு நிகழ்வு; இந்நிகழ்வை தருணமாகப் பயன்படுத்தி வெளிச்சென்று அனுபவியுங்கள். அதேநேரத்தில், பாதுகாப்பான முறையில் கிரகணக் காட்சியைக் காண்பதற்கான ஏதேனும் ஒரு முறையைக் கடைப்பிடிக்க மறந்துவிடாதீர்கள்.[5]
  • "கிரகண நேரத்தில் குழந்தை பிறப்பது பாதுகாப்பற்றது"
  • சரியல்ல. ஒரு குழந்தையின் பிறப்பை அச்சப்படுத்துமளவுக்கு சூரியன் புதிதாகவோ அல்லது மோசமாகவோ எதையும் உமிழப்போவதில்லை. இது ஒரு பொருளற்ற மூடநம்பிக்கை.[5]
  • "கிரகணத்தின்போது உணவு சமைப்பதோ, உட்கொள்வதோ பாதுகாப்பற்றது"
  • இதுவும் தவறான கருத்தே.

கங்கண கிரகணத்தை (அல்லது எந்த ஒரு சூரிய மறைப்பையும்) வெற்றுக்கண்ணால் பார்க்கலாமா?

தொகு

கூடவே கூடாது. அனலியை (சூரியனை) வெற்றுக்கண்ணாலோ இருகண் நோக்கி அல்லது தொலைநோக்கி வழியாகவோ பார்க்கவே கூடாது. இதுவே சூரிய கிரகணத்தைக் காண விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான அறிவுரை.[6] எனவே, இந்த வானியல் அதிசயத்தைக் காண விரும்புவோர், போதிய பாதுகாப்பு முறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

சூரிய கிரகணங்களைப் பாதுகாப்பான முறையில் காண்பது எவ்வாறு?

தொகு
  • எறிவி (Projector) முறைகள்:
  • ஊசித்துளை எறிவி ( pinhole projector) சிறுதுளை உருப்பெருக்கி முறை -- காண்க. [7][8]
  • இருகண் நோக்கி எறிவி (binocular projection); காண்க. [9]
  • கண்ணாடி எறிவி ( mirror projector) கண்ணாடி உருப்பெருக்கி முறை -- 'காண்க. [10]
  • 14-ஆம் எண் கொண்ட பற்றவைப்போர் கண்ணாடியின் மூலம்.
  • சிறப்பு வடிகட்டி கண்ணாடி -- அலுமினியப்பூச்சினாலான பாலியெஸ்டர்.

குறிப்புகள்

தொகு
  1. "The Hindu-VSSC expects insights from eclipse". Archived from the original on 2010-01-18. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-18. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
  2. நாசா
  3. "pongaleclipse.com". Archived from the original on 2010-03-14. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
  4. தினத்தந்தி
  5. 5.0 5.1 "பொங்கல் கிரகணம்.காம்". Archived from the original on 2010-02-23. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
  6. exploratorium.edu
  7. "Pongal.com". Archived from the original on 2009-12-22. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
  8. Exploratarium.com
  9. "Space.com". Archived from the original on 2001-01-24. பார்க்கப்பட்ட நாள் 2001-01-24.
  10. "pongaleclipse.com". Archived from the original on 2009-12-22. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2010_சனவரி_15_கதிரவ_மறைப்பு&oldid=3848544" இலிருந்து மீள்விக்கப்பட்டது