அங்கேரியின் முதலாம் இஸ்தேவான்

பதினோராம் நூற்றாண்டு ஹங்கேரிய அரசர் மற்றும் புனிதர்

முதலாம் இஸ்தேவான் அல்லது புனித அரசர் இஸ்தேவான் (அங்கேரியம்: Szent István király; இலத்தீன்: Sanctus Stephanus, ஏறத்தாழ 975 முதல் கி.பி. 15 ஆகஸ்ட் 1038 வரை) அங்கேரியை ஆண்ட (கி.பி. 1000 அல்லது 1001 - கி.பி. 1038) முதல் அரசராவார். இவர் பிறந்த வருடம் உறுதியாகத் தெரியாவிட்டாலும் இவரின் வாழ்க்கை வரலாற்று மூலங்களிலிருந்து பெற்ற தகவல்களிலிருந்து அங்கேரியிலுள்ள எஸ்தகொம் நகரில் 975ம் ஆண்டின் பின் பிறந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. அங்கேரியர்களின் பெரும் இளவரசரான கெய்சாவிற்கும் அவரின் மனைவி சாரோல்ட்க்கும் ஒற்றை மகனாகப் பிறந்த இஸ்தேவனுக்கு முதலில் பாகால் சமயப் பெயரான வஜிக் எனப் பெயரிடப்பட்டது. இவர் ஞானஸ்நானம் பெற்றது எப்போது என்ற தகவல் தெரியவில்லை. இவரின் பெற்றோர்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் குடும்பத்தின் முதல் கிறித்தவ விசுவாசியாக இஸ்தேவன் விளங்கினார். ஒட்டோனிய அரச மரபைச் சேர்ந்த பவேரிய இளவரசி கிசெலாவை இவர் மணம் முடித்தார்.

புனித இஸ்தேவான் 1
முதலாம் இஸ்தேவான்
ஆட்சிக்காலம்1000 அல்லது 1001–1038
அங்கேரி25 டிசம்பர் 1000 அல்லது 1 ஜனவரி 1001
ஆட்சிக்காலம்997–1000 or 1001
முன்னையவர்கேசா
பிறப்புவஜிக்
துணைவர்கிசேலா
மரபுஅர்பாத் பேரரசு
தந்தைகேசா
தாய்சாரொல்ட்
மதம்உரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்புனித இஸ்தேவான் 1's signature

அங்கேரியர்களின் பெரும் இளவரசராக இருந்த இஸ்தேவானின் தந்தை கேசா இறந்த பிறகு அரியணைக்காக தனது உறவினர் கொப்பானியுடன் போராட வேண்டியிருந்தது. கொப்பானி பாகால் சமயத்தை பின்பற்றும் பெரும்படையுடன் அரியணைக்காக உரிமை கோரியிருந்தார். உள்நாட்டு பிரபுக்கள் மற்றும் வெளிநாட்டு போர்வீரர்களின் உதவியுடன் கொப்பானியை தோற்கடித்த இஸ்தேவான் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்தர் அனுப்பிய மகுடத்தைக் கொண்டு 25 டிசம்பர் 1000வது (அல்லது ஜனவரி 1001) ஆண்டில் முடிசூடிக்கொண்டார். தொடர்ச்சியான போர்கள் மூலம் இவர் கார்பந்தியன் வடிநிலங்களைக் கைப்பற்றி தனது ஆட்சிப் பகுதியோடு ஒருங்கிணைத்தார். இவர் புனித உரோமைப் பேரரச மன்னனான இரண்டாம் கொன்ராட்டின் படைகளை 1030ல் அங்கேரியிலிருந்து வெளியேற்றியதன் மூலம் தனது நாட்டின் இறைமையை தக்கவைத்துக் கொண்டார்.

இஸ்தேவான் குறைந்தபட்சம் ஒரு கிறித்தவ பேராயர் அலுவலத்தையும் ஆறு ஆயர் அலுவலகங்களையும் மூன்று புனித ஆசீர்வாதப்பர் சபைகளையும் அமைத்தார். இதன்மூலம் அங்கேரியின் மிகப் பெரிய தேவாலயம் புனித உரோமைப் பேரரச பேராயர்களால் விருத்தியாக்கப்பட்டது. இவர் கடுமையான சட்டங்கள் இட்டு அங்கேரியில் கிறித்தவம் பரவ வழிவகை செயதார். இஸ்தேவான் ஆட்சிகாலத்தில் அங்கேரியில் அமைதி நிலவியதால் மேற்கு ஐரோப்பாவிலிருந்து கிறித்துவ புனித தலங்களுக்குச் செல்லும் யாத்திரீகர்கள் அங்கேரியூடாக பயணம் மேற்கொள்வதை விரும்பினர்.

15 ஆகஸ்ட் 1938ல் மரணமடைந்த இஸ்தேவான் செகேஸ்பெகேவர் நகரில் அவர் அமைத்த புனித மரியாள் பேராலய வளாகத்தில் புதைக்கப்பட்டார். இவர் இறப்பின் பின் அங்கேரியில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டு பல தசாப்தங்கள் தொடர்ந்தது. 1083ல் அரசர் இஸ்தேவானுக்கும் அவரின் மகன் எமரிக்குக்கும் திருத்தந்தை ஏழாம் கிரகோரியால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இஸ்தேவான் அங்கேரியில் மட்டுமல்லாது அதைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மிகப் பிரபல புனிதராகத் திகழ்கிறார். இவரைக் கௌரவிக்கும் பொருட்டு அங்கேரி இவரின் திருநாளைப் (ஆகஸ்ட் 20) பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

ஆரம்ப வருடங்கள் (அண். 975–997)

தொகு

இஸ்தேவான் பிறந்த வருடம் தொடர்பான தகவல்கள் எதுவும் அவரின் சமகாலத்தைய குறிப்புகளில் பதியப்பட்டிருக்கவில்லை.[1] சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட அங்கேரிய மற்றும் போலிய மொழி வரலாற்றுக் குறிப்புகள் புனித இஸ்தேவான் பிறந்த வருடத்தை 967, 969, 975 என வேறுபட்ட தகவலை வழங்குகின்றது.[2] 11ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இஸ்தேவானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மூன்று  நூல்களிலும் ஏனைய வரலாற்றுக் குறிப்புகளிலும் இஸ்தேவான் 997ல் வளரிளம் பருவத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.[3] இஸ்தேவானின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் ஒன்றான லெசர் லெஜன்ட் இஸ்தேவான் எஸ்தகொம் நகரில் பிறந்ததாகக் கூறுகிறது.[4] இத்தகவல் மூலம் இஸ்தேவான் பிறந்தது 972க்கு பிறகு எனத் தெரியவருகிறது. காரணம் இஸ்தேவானின் தந்தை கேசா, இவர் அங்கேரியர்களின் அப்போதைய பெரும் இளவரசராக இருந்தவர், தனது அரண்மனையை எஸ்தர்கொம் நகருக்கு அவ்வாண்டிலேயே மாற்றியிருந்தார்.[1] கேசா தனது ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கிறித்தவத்தை பரப்பும் நடவடிக்கைகளில் தனது படைகளைப் பயன்படுத்தி ஈடுபட்டார். எனினும் பாகால் மதவிவகாரங்களில் இவர் தலையிடவில்லை.[5][6] இஸ்தோவான் வாழ்க்கை வரலாற்று நூற்கள் மூன்றில் ஒன்றான கிரேட்டர் லெஜன்ட் கேசாவை கொடுங்கோல ஆட்சியாளர் எனவும் அவரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் புரட்சி செய்த நிலக்கிழார்களை இரக்கமற்ற முறையில் அடக்கினார் எனவும் கூறுகிறது.

அங்கேரிய மொழியில் எழுதப்பட்ட பல வரலாற்றுக் குறிப்புகள் இஸ்தேவானின் தாயார் பெயர் சாரொல்ட் எனத் தெரிவிகின்றன. இவர் அங்கேரிய இனக்குழுத்தலைவர்களில் ஒருவராகவிருந்த இரண்டாம் கியூலாவின் மகள் ஆவார்.[7] அங்கேரிய போலிய காலக்கோவை எனும் வரலாற்று நூல் போலந்திய ஆட்சியர் மெஷ்கோவின் சகோதரியான அதிலெய்டே இஸ்தோவானின் தாய் எனும் வேறுபட்ட தகவலைத் தெரிவிக்கிறது. எனினும் இத்தகவலின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவுள்ளதால் பிற்காலத்தைய வரலாற்றாசிரியர்கள் இதை ஏற்கவில்லை.[8]

 
இஸ்தேவானின் பிறப்பு

இஸ்தேவானின் முதற்பெயர் வயிக் என்பதாகும்.[9] துருக்கிய மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லான வய் இலிருந்து தோன்றிய இப்பெயரின் பொருள் இளவரசன் என்பதாகும்.[10] இஸ்தேவானின் வரலாற்றைக் கூறும் கிரேட்டர் லெஜண்ட் எனும் நூலில் இஸ்தோவானுக்க்கு திருமுழுக்கு வழங்கியவர் பேராயர் புனித அடல்பேர்ட் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 983ம் ஆண்டுக்கும் 994ம் ஆண்டுக்குமிடையில் இஸ்தேவானின் தந்தை கேசாவின் ஆலோசனைக் குழுவிலிருந்தார்.[11] எனினும் புனித அடல்பேர்ட்டின் வரலற்று குறிப்பில் இத்திருமுழுக்கு தொடர்பான செய்திகள் எதுவும் பதியப்படவில்லை.[12] திருமுழுக்கு நடந்த காலத்தைப் பற்றி வரலாற்றாசிரியர் கியோபி இத்திருமுழுக்கு இஸ்தேவான் பிறந்தவுடன் நடந்தது எனவும் மற்றுமொரு வரலாற்றாசிரியர் கிரிஸ்ட்டோ இஸ்தேவானின் தந்தை 997ல் இறப்பதற்கு சில காலம் முன் நிகழ்ந்தது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

பேராயர் ஆர்ட்விக் எழுதிய இஸ்தேவானின் வாழ்க்கை வரலாறு இஸ்தேவான் இலக்கண கலையில் சிறந்து விளங்கினார் என்கிறது.[13] இதன்மூலம் இஸ்தேவான் இலத்தீன் மொழியைப் பயின்றிருந்தார் எனத் தெரிய வருகிறது. 11ம் நூற்றண்டின் இறுதியில் எழுதப்பட்ட இவரின் ஏனைய இரு வாழ்க்கை வரலாறுகள் இலக்கணம் பயின்றது பற்றிக் குறிப்பிடாமல் கல்வி பயின்றார் என்று மட்டும் குறிப்பிடுகிறது. மேலும் இவ்விரு வரலாறுகளும் இஸ்தேவான் போர்க்கலை மற்றும் வேட்டையாடல் பயிற்சியில் சிறந்து விளங்கினார் என தெரிவிப்பதாக வரலாற்றசிரியர் கிரிஸ்ட்டோ குறிப்பிட்டுள்ளார்.

இஸ்தேவானின் 14 அல்லது 15 வயதின்போது அவரின் தந்தை அங்கேரியிலுள்ள தலைவர்கள் மற்றும் போர் வீரர்களைக் கூட்டி தனக்குப் பின் இஸ்தேவானே பெரும் இளவரசனாகவிருப்பான் எனத் தெரிவித்தார்.[14] அத்தலைவர்களும் போர்வீரர்களும் அதற்கு ஆதரவளிப்பதாக சத்தியபிரமாணம் செய்தனர். அத்தோடு இஸ்தேவான் நிட்ரா பிரதேசத்தை ஆட்சி செய்யுமாறும் தந்தையால் நியமிக்கப்பட்டார் என வரலாற்றாசிரியர் கியோபி தெரிவிக்கிறார். சிலோவாக்கிய வரலாற்றாசிரியர்களும் 995ம் ஆண்டு காலபகுதியில் நிட்ரா பிரதேசத்தை ஆண்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

இஸ்தேவானுக்கு பவேரியாவின் பிரபு இரண்டாம் என்றியின் மகளான கிசேலாவை அவரின் தந்தை 995ம் ஆண்டில் அல்லது அதற்கு பிறகு மணம் முடித்து வைத்தார். இத்திருமணம் அங்கேரிய ஆட்சியாளருக்கும் மேற்கு ஐரோப்பிய குடும்பத்திற்குமான இணைப்பின் முதற்படியாக விளங்கியது. இத்திருமணம் ஸ்கையேர்ன் மாளிகையில் புனித அடல்பேர்ட் தலைமையில் நடைபெற்றது. கிசேலாவுடன் சில பவேரிய போர்வீரர்களும் இஸ்தேவானின் இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கு அங்கேரியில் குடியேறினர். இவர்கள் தங்குவதற்கான நிலங்களை இஸ்தோவான் வழங்கினார். வரலாற்றசிரியர் கியோபி இஸ்தேவானும் அவரின் மனைவியும் திருமணத்தின் பின் நிட்ராவில் குடியேறியிருக்கலாம் என்கிறார்.

ஆட்சிக் காலம் (997–1038)

தொகு

பெரும் இளவரசன் (997–1000)

தொகு

997ம் ஆண்டில் அங்கேரியர்களின் பெரும் இளவரசராகவிருந்த கேசா இறந்தார். தந்தையின் இறப்பின் பின் எஸ்தர்கோம்மில் ஒரு ஆலோசணை கூட்டத்தைக் கூட்டினார் இஸ்தேவான். அக்கூட்டத்தில் இஸ்தேவானை அங்கேரியர்களின் பெரும் இளவரசராக அவரின் ஆதரவாளர்கள் அங்கீகரித்தனர். இஸ்தேவான் அந்நேரத்தில் கார்பந்திய வடிநிலத்தின் வடமேற்கு பகுதியையே ஆட்சி செய்தார். ஏனைய பிரதேசங்கள் நிலப்பிரபுக்கள் வசமிருந்தன. தந்தைக்குப் பின் அரியணை மகனுக்கே சொந்தம் எனும் வகையில் இஸ்தேவான் இதைச் செய்தார். எனினும் இதை மறுத்த சொமோகி நிலப் பிரபு கொப்பானி இளவரசர் கேசா மரணத்தின் பின் பணிமூப்பின் பிரகாரம் தனக்கே அரியணை சொந்தம் என உரிமை கோரினார். அவர் திரான்ஸ்தனூபியா பிரதேசத்திலிருந்த பிளான்ட்டன் ஏரியின் தென்பகுதிகளை மிக நீண்டகாலமாக நிர்வாகம் செய்து வந்திருந்தார்.

 
கொப்பானியின் மரணம்.

கொப்பானி அரியணைக்காக உரிமை கோரியது மட்டுமல்லாமல் இறந்த சகோதரனின் மனைவியை மணம் முடித்தல் எனும் பாகால் சமய முறைப்படி கேசாவின் மனைவியான சாரொட்டை மணம் முடிக்கும் உத்தேசத்தையும் வெளியிட்டிருந்தார். கொப்பானி 972ல் திருமுழுக்கு பெற்றிருந்தாலும் கிறித்துவ சமயத்தை இஸ்தேவான் பிரதிநிதித்துவப்படுத்தியதால் கொப்பானியின் படையில் பாகால் மதத்தவர் அதிகமாயிருந்தனர். 1002ம் ஆண்டைச் சேர்ந்த பனோன்ஹல்மா பட்டயம் இஸ்தேவானுக்கும் கொப்பானிக்கும் இடையே நடந்த போரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இஸ்தேவானுக்கும் கொப்பானிக்குமிடையே இடம்பெற்ற அனைத்து போர்களும் அர்பார்ட் பேரரசின் இரு குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போர் எனவும் ஏனைய அங்கேரிய இனங்கள் இதில் பங்கேற்கவில்லை எனவும் கூறுகிறார். கொப்பானி அவர் படைகளுடன் வட திரான்தனூபியாவினுள் புகுந்து அங்கிருந்த இஸ்தேவானின் கோட்டைகளையும் நிலங்களையும் கைப்பற்றினார். இஸ்தேவான் தன்னுடைய மெய்பாதுகாவலர்களாக ஒன்ட் மற்றும் பஸ்மானி எனும் சகோதரர்களை நியமித்ததோடு பவேரியாவிலிருந்து வந்து தங்கிய போர்வீரர் வெசலின் என்பவரை படைத் தளபதியாக நியமித்தார்.

இஸ்தேவானின் படை அண்மித்த செய்தி கேள்விபட்டதும் கொப்பானி வெஸ்பிரேம் பிரதேசத்தை முற்றுகையிட்டார். போரின் இறுதியில் இஸ்தேவான் மாபெரும் வெற்றியடைந்தார். போர்க்களத்தில் கொல்லப்பட்ட கொப்பானியின் உடல் நான்காக வெட்டப்பட்டு அப்பாகங்கள் எஸ்தெர்கொம், கியோர், கியுலாபெஹேவர், வெஸ்பிரேம் ஆகிய கோட்டைகளின் வாசலில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசருக்கு எதிரானவர்களை எச்சரிக்கவே இவ்வாறு செய்யப்பட்டது.

முடிசூட்டு விழா (1000-1001)

தொகு
 
புடாபெஸ்டில் இஸ்தேவானின் நவீன சிற்பம்

கொப்பானியின் உடலின் ஒரு பகுதியை தனது தாய்மாமன் மூன்றாம் கியுலா ஆளும் பிரதேசமான கியுலாபெஹேவரில் காட்சிப்படுத்தியதன் மூலம் அங்கேரிய பிரபுக்கள் நிர்வகிக்கும் அனைத்து நிலங்களையும் தான் ஆளப்போவதாக இஸ்தேவான் வலியுறுத்தினார். அத்தோடு தன்னை ஒரு அரசனாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் ஏனைய நாடுகளின் ஆதரவையும் பெறலாம் என இஸ்தேவான் கணித்தார்.

இஸ்தேவான் புனித உரோமைப் பேரரசரான மூன்றாவது ஒட்டோவிடமிருந்து (996-1002) தனது மகுடத்தைப் பெற்றார் என வரலாற்றுக் குறிப்பாளர் தியெட்மார் குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் இஸ்தேவான் புனித உரோமைப் பேரரச மேலாட்சியை ஏற்றுக் கொண்டார் என அவ்வரலாற்றாசிரியரின் கூற்றிலிருந்து தெரிய வருகிறது. மறுபுறம் இஸ்தோவானைப் பற்றி எழுதப்பட்ட காவியங்கள் அனைத்திலும் திருத்தந்தை மூன்றாம் சில்வெஸ்தரே (999-1003) இஸ்தேவானுக்கு மகுடத்தை வழங்கியதாகக் குறிப்பிடுகின்றன. கிறிஸ்ட்டோ உட்பட ஏனைய வரலாற்றசிரியர்கள் அனைவரும் பேரரசர் மூன்றாவது ஒட்டோவும் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்தரும் நெருங்கிய நண்பர்கள் எனக் குறிப்பதிலிருந்து இவ்விரு கூற்றுக்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை ஆகின்றன. 75 வருடங்களின் பின்னர் திருத்தந்தை ஏழாம் கிரகோரி ஆன்மீக ரீதியில் அங்கேரியைப் புனித பேதுருவின் மேலாட்சியில் இஸ்தேவான் விட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார். இஸ்தேவனைப் பற்றிய காவியமான கிரேட்டர் லெஜன்ட்டில் இஸ்தேவான் அங்கேரியைப் புனித மரியாளுக்கு அர்ப்பணித்ததாகக் குறிப்பிடுகிறது.

இஸ்தேவான் முடிசூட்டு விழாவின் சரியான திகதியை அறிய முடியவில்லை. பிற்காலத்தைய அங்கேரிய மரபுப்படி இஸ்தேவானின் முடிசூட்டு விழா இரண்டாம் புத்தாயிரமாண்டு முதல் தினத்தில் நடந்தது. அதாவது திசம்பர் 25 1000 அல்லது 1 ஜனவரி 1001 ஆகிய இரு தினங்களில் ஒன்றில் முடிசூட்டு விழா நடந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 புனித அரசர் இஸ்தேவான் நூல் (1994), ஆசிரியர் கியோ கியோபி, அட்லாண்டிக் ரிசேர்ச் அன்ட் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 64.
  2. புனித அரசர் இஸ்தேவானின் வாழ்க்கை (2001), ஆசிரியர் கியுலா கிறிஸ்ட்டோ, பக்கம் 15.
  3. அங்கேரியின் இஸ்தேவானின் வாழ்க்கை , ஆசிரியர் ஆட்விக், பக்கம் 381.
  4. முதலாம் இஸ்தேவான் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் இணையதளம், 2008.
  5. அங்கேரியின் வரலாறு (1999). லாஸ்லோ கொன்ட்லர், அட்லாண்ட்டிஸ் வெளியீடு, பக்கம் 51.
  6. அங்கேரி இராச்சியம் கேம்பிர்ட்ஜ் பல்கலைக் கழக வெளியீடு, 2007, பக்கம் 331.
  7. புனித அரசர் இஸ்தேவான் நூல் (1994), ஆசிரியர் கியோ கியோபி, அட்லாண்டிக் ரிசேர்ச் அன்ட் பப்ளிகேஷன்ஸ் பக்கம் 44.
  8. புனித அரசர் இஸ்தேவான் நூல் (1994), ஆசிரியர் கியோ கியோபி, அட்லாண்டிக் ரிசேர்ச் அன்ட் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 46.
  9. மத்திய கால அங்கேரி, பல் எங்கெல் 2001, பக்கம் 27.
  10. புனித அரசர் இஸ்தேவான் நூல் (1994), ஆசிரியர் கியோ கியோபி, அட்லாண்டிக் ரிசேர்ச் அன்ட் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 78.
  11. அங்கேரி இராச்சியம் (2007), நோரா பெரன்ட், ஜோசப் லஸ்லோவ்ஸ்கி, சகாஸ் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம். பக்கம் 329.
  12. புனித அரசர் இஸ்தேவான் நூல் (1994), ஆசிரியர் கியோ கியோபி, அட்லாண்டிக் ரிசேர்ச் அன்ட் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 78.
  13. அரசர் இஸ்தேவானின் வாழ்க்கை வரலாறு, ஆட்விக், பக்கம் 381.
  14. புனித அரசர் இஸ்தேவான் நூல் (1994), ஆசிரியர் கியோ கியோபி, அட்லாண்டிக் ரிசேர்ச் அன்ட் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 79-80.