அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்
அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல் (Spanish conquest of the Aztec Empire, பெப்ரவரி 1519இல் துவங்கியது) அமெரிக்காக்களில் எசுப்பானியக் குடியேற்றத்தில் மிகவும் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும். இதன்மூலம் எசுப்பானியா அசுடெக்குகளை அடக்கியதும் மத்திய மெக்சிக்கோவை கைப்பற்றியதும் முக்கிய தாக்கங்களாகும்.[2]
அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அமெரிக்காக்களில் எசுப்பானியக் குடியேற்றம் மற்றும் மெக்சிக்கோ இந்தியப் போர்கள்]] பகுதி | |||||||||
எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோவை கைப்பற்றுதல், துணியில் வரைஅய்ப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம்.[1] எசுப்பானியம்: Conquista de México por Cortés |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
அசுடெக் | எசுப்பானிய கைப்பற்றுகையாளர்கள் |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
மோக்டெசுமா II † குயிட்லயுயாக் † குயுடெமோக் † | எர்னான் கோட்டெஸ் பெத்ரோ டெ அல்வராடொ இளைய சிகொடென்காட்டில் |
||||||||
பலம் | |||||||||
300,000 | எசுப்பானியா: 90–100 குதிரைப் படை 900–1,300 காலாட்படை 6 துப்பாக்கிகள் 13 பிரிகன்டைன்கள்
|
711 முதல் ஐபீரிய மூவலந்தீவில் ஆட்சி புரிந்துவந்த முசுலிம்களை தோற்கடித்து மீள்பற்றுகை நிகழ்த்திய கிறித்தவர்களின் பின்னணியில் இந்த கைப்பற்றுகையும் கவனிக்கப்பட வேண்டும்.எசுப்பானியாவின் இந்த முயற்சிகள் கரிபியனில் கொலம்பசு நிரந்தர ஐரோப்பிய குடியேற்றங்களை நிறுவியதைத் தொடர்ந்து அங்கும் பரவியது. ஏற்கெனவே இருந்த எசுப்பானியப் பகுதிகளை அடித்தளமாகக் கொண்டு புதிய பகுதிகளை கண்டறியவும் கைப்பற்றவும் குடியேற்றங்களை நிறுவவும் எசுப்பானியா ஊடுருவாளர்களை (entradas) அனுப்பியது. 1519ஆம் ஆண்டின் கோட்டெசு தேடல்குழுவில் இருந்தோர் அதற்கு முன்னதாக சண்டை எதையும் கண்டதில்லை. கோட்டெசும் அதற்கு முன்னர் சண்டை எதற்கும் தலைமை ஏற்றதில்லை. இருப்பினும் கரீபியனிலும் மத்திய அமெரிக்காவிலும் தேடலில் ஈடுபட்டிருந்த புதியத் தலைமுறை எசுப்பானியர்கள் வியூகமைப்பதிலும் வெற்றிக்கான வழிமுறைகளையும் கற்றனர். மெக்சிக்கோவின் கைப்பற்றுகை முன்னதாக நிறுவப்பட்டிருந்த செயல்முறைகளைப் பின்பற்றியது. [3]
இந்த எசுப்பானிய போர் முயற்சி பெப்ரவரி 1519இல் தொடங்கியது. ஆகத்து 13, 1521இல் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானியப் படைகளும் சிகொடென்காட்டில் தலைமையிலான உள்ளூர் இட்லாக்சுகலான் படைகளும் கூட்டாக இணைந்து அசுடெக் பேரரசின் தலைநகரமான டெனோச்டீட்லானையும் பேரரசர் குயுடெமோக்கையும் பிடித்தபிறகு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போரின்போது கோட்டெசிற்கு அசுடெக்குகளுக்கு எதிரிகளும் பல குறுமன்னர்களும் ஆதரவளித்தனர். குறிப்பாக டோடொனாக், இட்லாக்சுகால்டெகா, டெக்கோகேன்கள், மற்றும் டெக்கோகோ ஏரியின் கரையிலிருந்த நகர அரசுகள் உதவி புரிந்தன. இந்தக் கூட்டணிப் படைகள் முன்னேறியபோது பலமுறை எதிராளிகளால் திடீரென வழிமறுக்கப்பட்டனர். எட்டு மாத சண்டைகளுக்கும் உரையாடல்களுக்கும் பின்னர் பேரரசர் மோக்டெசுமா அனுமதி பெற்று கோட்டெசு நவம்பர் 8, 1519 அன்று தலைநகர் டெனொச்டீட்லான் வந்தடைந்தார். அங்கு தங்கியிருந்தபோது வெராகுரூசில் இருந்த தனது படைவீரர்கள் அசுடெக்கின் தாகுத்தலில் இறந்ததை அறிந்த கோட்டெசு பேரரசரை அவரது அரண்மனையிலேயே சிறைபிடித்து அவர் மூலமாகவே பல மாதங்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். உள்ளூர் அரசரை கைப்பற்றுவதை எசுப்பானியர்கள் கரீபியனில் ஓர் செய்முறையாகவே வைத்திருந்தனர். முசுலிம்களிடமிருந்து தங்கள் நிலப்பகுதியை மீள்பற்றுகை செய்த காலத்திலிருந்தே இத்தகைய முறைகளை எசுப்பானியர்கள் பின்பற்றியிருந்தனர்.[4]
கோட்டெசு டெனோச்டீட்லானை நீங்கியபோது பெத்ரோ டெ அல்வராடொ தலைமையேற்றார். அல்வராடொ தலைநகரில் பெரும் விழாவொன்றை நிகழ்த்த அசுடெக்குகளுக்கு அனுமதி வழங்கினார்; முன்பு சோலுலாவில் நிகழ்த்திய இனப்படுகொலை போன்று இங்கும் நகரச் சதுக்கத்தை சூழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்த அசுடெக் மக்களை கொன்று குவித்தார். இந்த இனப்படுகொலை கோட்டெசின் வாழ்க்கை வரலாற்றில் விவரமாக பதியப்பட்டுள்ளது.[5] டெனோச்டீட்லானின் முதன்மைக் கோவிலில் நடந்த இந்த இனப்படுகொலையைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். புரட்சியாளர்களை அமைதிபடுத்த முயன்ற மோக்டெசுமா வீசப்பட்ட ஆயுதமொன்றால் கொல்லப்பட்டார்.[6] இதனால் ஊர் திரும்பிய கோட்டெசு சூன் 1520இல் தலைநகரிலிருந்து போராடித் தப்பிச் சென்றனர். இருப்பினும் எசுப்பானியர்களும் இட்லாக்சுகலான் படைகளும் மீண்டும் வலு பெற்று தாக்கினர்; இவர்களின் முற்றுகையால் ஓராண்டுக்குப் பிறகு ஆகத்து 13, 1521இல் டெனோச்டீட்லான் வீழ்ந்தது.
அசுடெக் பேரரசின் வீழ்ச்சி எசுப்பானியாவின் கடல்கடந்த பேரரசு, புதிய எசுப்பானியா உருவாகக் காரணமானது. இதுவே பின்னாளில் மெக்சிக்கோ ஆனது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Indigeniso e hispanismo". Arqueología mexicana. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20. (Spanish)
- ↑ The title of conqueror Bernal Díaz del Castillo's major work is The True History of the Conquest of Mexico and William Hickling Prescott's nineteenth-century bestselling book of the conquest is entitled The History of the Conquest of Mexico both authors take for granted that what is referred to is the conquest of the Aztecs.
- ↑ James Lockhart and Stuart Schwartz, Early Latin America: A History of Colonial Spanish America and Brazil. New York: Cambridge University Press, 1983. See especially chapter 3, "From islands to mainland: the Caribbean phase and subsequent conquests."
- ↑ James Lockhart and Stuart Schwartz,Early Latin America: A History of Colonial Spanish America and Brazil New York: Cambridge University Press, 1983, p. 80
- ↑ Francisco López de Gómara, Cortés: The Life of the Conqueror by His Secretary, translated by Lesley Byrd Simpson. Berkeley: University of California Press 1964, pp. 207-08.
- ↑ Ida Altman, et al. The Early History of Greater Mexico, Pearson, 2003, p. 59.
வெளி இணைப்புகள்
தொகு- Hernán Cortés on the Web பரணிடப்பட்டது 2005-06-30 at the வந்தவழி இயந்திரம் – web directory with thumbnail galleries
- Catholic Encyclopedia (1911)
- Conquistadors, with Michael Wood – website for 2001 PBS documentary
- Ibero-American Electronic Text Series presented online by the University of Wisconsin Digital Collections Center
- La Historia verdadera de la conquista de la Nueva España (எசுப்பானியம்)