அஞ்சலட்டை

(அஞ்சல் அட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஞ்சலட்டை என்பது தகவல்களை எழுதி, உறை எதுவும் இல்லாமலேயே சேரவேண்டியவருக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான செவ்வக வடிவத்தில் வெளியிடப்படும் தடித்த தாள் அல்லது மெல்லிய அட்டை ஆகும். இதை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான அஞ்சல் கட்டணம், உறையில் இட்டு அனுப்பும் கடிதங்களுக்கு ஆகும் கட்டணத்தை விடக் குறைவு. சில அஞ்சல் அட்டைகளில் அஞ்சல் கட்டணம் செலுத்தப்பட்டதைக் குறிக்கும் அஞ்சல்தலை போன்ற வடிவம் அச்சிடப்பட்டிருக்கும். சில அட்டைகளில் இது இருக்காது. அனுப்புபவர் தனியாக அதற்குரிய அஞ்சல்தலையைத் தனியாக வாங்கி ஒட்டவேண்டும். கட்டணம் அச்சிடப்படாத அட்டைகளைத் தனியார் நிறுவனங்களோ, பிற அமைப்புக்களோ, தனியாட்களோகூட அச்சடித்துக்கொள்ள முடியும். ஆனால், அஞ்சல் கட்டணத்தோடு கூடிய அட்டைகளை அதிகாரம் அளிக்கப்பட்ட அஞ்சல்சேவை அமைப்புக்களே வெளியிடுகின்றன.

1890ல் பயன்படுத்தப்பட்ட பிரித்தானிய அஞ்சல் அட்டை
Example of a court card, postmarked 1899, showing Robert Burns and his cottage and monument in Ayr

ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவை தபாலட்டை, குறைந்தது 3-½ அங்குல உயரம் x 5 அங்குல நீளம் x .007 அங்குலத் தடிப்புக் கொண்டதாகவும், 4-¼ அங்குல உயரம் x 6 அங்குல நீளம் x .016 அங்குலத் தடிப்புக்கு மேற்படாத அளவு கொண்டதாகவும் உள்ள செவ்வக வடிவமானது என வரையறுக்கின்றது. எனினும் சில அஞ்சலட்டைகள் இவ்வரையறைகளில் இருந்து விலகியும் காணப்படுகின்றன.

வரலாறு

தொகு

ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சலட்டையின் சுருக்க வரலாறு

தொகு
 
1905 ஆம் ஆண்டின் பிரிக்கப்படாத பின்புறம் கொண்ட அஞ்சலட்டையின் தகவல் எழுதப்பட்ட முன்பக்கம்
 
மேற்காட்டிய அதே 1905 ஆம் ஆண்டின் அஞ்சலட்டையில் பின்புறம்
 
அமெரிக்காவின் பிரிக்கப்பட்ட பின்பக்கம் கொண்ட அஞ்சல் அட்டை, 1916

பிலடெல்பியாவைச் சேர்ந்த ஜான் பி. சார்ல்ட்டன் (John P. Charlton) என்பவர் 1861 ஆம் ஆண்டில் அஞ்சலட்டைக்குக் காப்புரிமை பெற்றுகொண்டார். இவ்வுரிமையை அவர் எச். எல். லிப்மன் என்பவருக்கு விற்றார். "லிப்மனின் அஞ்சலட்டை" என்னும் பெயரில் அழகூட்டப்பட்ட கரைகளுடன் கூடிய அஞ்சலட்டைகளை இவர் வெளியிட்டார். 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளும் அஞ்சலட்டைகளை வெளியிடத் தொடங்கின.

அமெரிக்காவின் முதல் அஞ்சல் அட்டை, மசச்சூசெட்சின் இசுப்பிரிங்ஃபீல்டில் இருந்த மோர்கன் கடித உறைத் தொழிலகத்தால் 1873ல் வெளியிடப்பட்டது.[1][2] அந்த அஞ்சல் அட்டையில் சிக்காகோவில் நடைபெற்ற பல மாநிலக் கைத்தொழில் கண்காட்சியின் படம் அச்சிடப்பட்டிருந்தது.[3] ஐக்கிய அமெரிக்க அஞ்சலகம் அஞ்சல்தலையிடப்பட்ட அட்டைகளை 1873 ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கியது. மக்கள் விரைவான குறிப்புக்களை இலகுவாக அனுப்புவதற்கான வழிகளை விரும்பியதன் காரணமாகவே அஞ்சலட்டைகள் வெளியிடப்பட்டன. அஞ்சலகம் மட்டுமே அஞ்சலட்டைகளை வெளியிட அனுமதிக்கப்பட்டது. இத் தனியுரிமை 1898 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருந்தது. 1998 ஆம் ஆண்டில் அமெரிக்கக் காங்கிரசு, தனியார் நிறுவனங்களும் அஞ்சல் அட்டைகளை வெளியிடும் வகையில் "தனியார் அஞ்சல் அட்டைச் சட்டமூலம்" என்னும் ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றியது.

தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்க அரசு, தனியார் நிறுவனங்கள் தமது அட்டைகளை "அஞ்சலட்டைகள்" என அழைப்பதைத் தடை செய்திருந்தது. இதனால் அவை "நினைவு அட்டைகள்" என அழைக்கப்பட்டுவந்தன. 1901 ஆம் ஆண்டில் இத்தடை நீக்கப்பட்டது.

1893ல் சிக்காகோவில் நடைபெற்ற "உலக கொலம்பியக் கண்காட்சி"யை விளம்பரப்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சலட்டைகள் வெளியிடப்பட்டன. சில காலத்தின் பின்னர், அமெரிக்க அரசு, ஐக்கிய அமெரிக்க அஞ்சலகத் திணைக்களம் மூலம் ஒரு சதம் பெறுமதி கொண்ட அஞ்சலட்டைகளைத் தனியாரும் வெளியிட அனுமதித்தது. அக்காலத்தில் அட்டைகளின் முன்பக்கத்தில் மட்டுமே அனுப்புபவர்கள் விடயங்களை எழுதலாம் என்னும் கட்டுப்பாடு இருந்தது. 1908 ஆம் ஆண்டிலேயே முகவரி எழுதும் பக்கத்திலும் தகவல்களை எழுத மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.[3]

1893 ஆம் ஆண்டின் கொலம்பியக் கண்காட்சியின் விளைவாக அரசு வெளியிட்ட அஞ்சல் அட்டைகளும், தனியார் வெளியிட்ட நினைவு அட்டைகளும் பெரும் வரவேற்புப் பெற்றன. கட்டிடங்களின் படம் அச்சிடப்பட்ட இவ்வாறான அட்டைகள் கண்காட்சியின்போது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 1908 ஆம் ஆண்டில் 677 மில்லியன்களுக்கு மேற்பட்ட அஞ்சலட்டைகள் அஞ்சல் செய்யப்பட்டிருந்தன.

1901 ஆம் ஆண்டில் அஞ்சல் அட்டை என்னும் பொருள் தரும் "Post Card" என்னும் சொல் அட்டையின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டன. இப்பக்கத்தில் முகவரி எழுதுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பிற்காலத்தில் தகவல்களைப் பின்புறத்திலும் எழுத அனுமதிக்கப்பட்ட பின்னர் அட்டையின் பின்புறத்திலும் ஒரு பகுதியைப் பிரித்து அதற்காக ஒதுக்கினர். இது "பிரிக்கப்பட்ட பின்புற" அட்டைகள் எனப்பட்டன. எனவே பிரிக்கப்படாத பின்புறம் கொண்ட முந்தியகால அட்டைகள், "பிரிக்கப்படாத பின்புற" அட்டைகள் எனப்படுகின்றன. அஞ்சலட்டை வரலாற்றில் இவ்விரு வகை அட்டைகளின் பெயர்களும் அவை பயன்பாட்டிலிருந்த காலப்பகுதிகளைக் குறிக்கப் பயன்படுகின்றன. இவை "பிரிக்கப்படாத பின்புறக் காலம்", "பிரிக்கப்பட்ட பின்புறக் காலம்" எனப்படுகின்றன. பிரிக்கப்பட்ட பின்புறக் காலம் 1907 ஆம் ஆண்டு தொடங்கியது. இது அமெரிக்க அஞ்சலட்டைகளின் பொற்காலம் எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. முதலாம் உலகப் போர்க் காலத்தில் செருமனியில் அச்சிடப்பட்ட சிறந்த அட்டைகளின் இறக்குமதி தடைப்பட்டதுடன் இக் காலகட்டம் முடிவுக்கு வந்தது. 1907க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் அஞ்சலட்டைக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. வட ஐக்கிய அமெரிக்காவில் நாட்டுப்புறப் பெண்களும், சிறிய நகரப் பெண்களும் அஞ்சல் அட்டைகளை விரும்பினர்.[4]

1916 ஆம் ஆண்டுக்கும் 1930 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் "வெண்கரைக் காலம்" எனவும், 1931 தொடக்கம் 1950 வரையான காலப்பகுதி "துணி அட்டைக் காலம்" எனவும் அழைக்கப்படுகின்றன. கடைசியாகக் குறிப்பிட்ட காலப்பகுதியில், அட்டைகளின் மேற்பரப்பு துணிகளைப் போன்ற பரப்புத்தன்மை கொண்டிருந்ததால் அதற்கு அப்பெயர் வழங்கப்பட்டது. அதற்குப் பின் வருவதும் இன்றுவரை நிலைத்திருப்பதுமான காலப்பகுதி "குரோம் காலம்" எனப்படுகிறது. இக் காலத்தைச் சேர்ந்த அட்டைகள் பளபளப்பான மேற்பரப்பைக் உடையனவாக இருந்தன. இவற்றின்மீது அச்சிடப்படும் படங்கள் நிற நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய அட்டைகள் 1939 ஆம் ஆண்டு வாக்கிலேயே அறிமுகமாகி இருந்தபோதும் 1950க்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கின.

பிரித்தானிய அஞ்சலட்டைகள்

தொகு

1894 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் "ராயல் மெயில்" எனப்படும் அரச அஞ்சல் சேவை, அஞ்சல் மூலம் அனுப்பப்படக்கூடிய படம் தாங்கிய அஞ்சலட்டைகளை வெளியிடுவதற்குத் தனியாருக்கு அனுமதி வழங்கியது. முதல் இவ்வாறான அஞ்சல் அட்டைகள் எடின்பரோவைச் சேர்ந்த இசுட்டெவார்ட்சு என்னும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் இத்தகைய அஞ்சலட்டைகளில், புகழ்பெற்ற கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள், பெயர்பெற்றவர்களின் நிழற்படங்கள் அல்லது வரைதல்கள் போன்றவை இடம்பெற்றன. நீராவித் தொடர்வண்டிகளின் அறிமுகத்துடன் போக்குவரத்து இலகுவானதாகவும் கட்டுப்படியானதாகவும் ஆனதால், கடற்கரைகள் சுற்றுலாவுக்கான முக்கிய இடங்களாக மாறின. இவை தமக்கேயுரிய நினைவுப் பொருட்கள் உற்பத்தித் துறையை உருவாக்கின. படந்தாங்கிய அஞ்சல் அட்டைகள் இவற்றுள் முக்கியமான இடத்தை வகித்தன.

 
டொனால்ட் மக்கில் என்பவர் உருவாக்கிய "கண்ணியக் குறைவான" அஞ்சலட்டை ஒன்றின் படம்.

1930களின் தொடக்கத்தில் கேலிச் சித்திரப் பாணியிலான "கண்ணியக் குறைவான" உள்ளடக்கங்களைக் கொண்ட அஞ்சலட்டைகள் வெளிவரத் தொடங்கின. இவற்றை அக்காலத்தில் மக்கள் விரும்பி வாங்கினர். அத்தகைய அட்டைகள் புகழின் உச்சியில் இருந்தபோது, ஆண்டொன்றுக்கு 16 மில்லியன் அட்டைகள் விற்கப்பட்டதாம். இவை பொதுவாக பாதிரிமார்கள், பருத்த பெண்கள், பரிதாபத்துக்குரிய கணவன்மார்கள் போன்ற பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கீழ்த்தரமானவையாக இருந்தன. 1950களின் தொடக்கத்தில் புதிதாகத் தேர்வான பழமைவாதக் கட்சி அரசு, ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிப்பதாகக் கூறி இத்தகைய அஞ்சலட்டைகள் மீது நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, டொனால்ட் மக்கில் என்னும் புகழ்பெற்ற அஞ்சலட்டைக் கலைஞர் அரசின் முக்கியமான இலக்காக இருந்தார். சற்றுத் தாராளத் தன்மை கொண்ட 60களில் இத்தகைய அஞ்சலட்டைகள் மீண்டும் ஓரளவு புத்துயிர் பெறத்தொடங்கின. இதை ஒருவகைக் கலை வடிவமாகவும் சிலர் கருதலாயினர்.[5] மீண்டும் இது ஒரு தொழிலாக உருவெடுத்தது. எனினும் 70களிலும், 80களிலும், இவ்வாறான அஞ்சலட்டைகளின், உள்ளடக்கத் தரமும், ஓவியத் தரமும் மிகவும் குறைந்துவிட்டதனாலும், அஞ்சலட்டைகளின் உள்ளடக்கம் குறித்த புதிய மனப்போக்குகளினாலும் இப்பாணி அஞ்சலட்டைகள் முற்றாகவே மறைந்துவிட்டன.

தற்காலத்தில் சேகரிப்பாளரிடையே இவற்றுக்குப் பெரும் மதிப்பு உண்டு. பெரும்பாலும் இவை கிடைத்தற்கு அரிதாக உள்ளன. அரிய வகையிலானவை ஏலவிற்பனைகளில் கூடிய விலைக்கு வாங்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "History & Innovation". Bostonhistorycollaborative.org. Archived from the original on 2011-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-06-16.
  2. "Springfield 375 | Springfield's Official 375th Anniversary Celebration Site". Springfield375.org. பார்க்கப்பட்ட நாள் 2012-06-16.
  3. 3.0 3.1 "The History of Postcards". Archived from the original on 2010-02-01. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
  4. Gifford, Daniel (2013) American Holiday Postcards 1905-1915: Imagery and Context. McFarland Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0786478179.
  5. Nick Collins (5 August 2010). "Bawdy seaside postcards on display". The Telegraph. http://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/7928443/Bawdy-seaside-postcards-on-display.html. பார்த்த நாள்: 12 September 2011. 

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலட்டை&oldid=3540653" இலிருந்து மீள்விக்கப்பட்டது