அஞ்சற்குறி

(அஞ்சல்குறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஞ்சற்குறி (Postmark) என்பது, ஒரு கடிதம், பொதி, அஞ்சலட்டை போன்றவை அஞ்சல் சேவையின் பாதுகாப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட தேதி, நேரம் ஆகியவற்றைக் குறிப்பதற்காக அவற்றின்மீது இடப்படும் குறியீட்டைக் குறிக்கும். தற்காலத்தில் அஞ்சல்குறியும், ஒட்டப்பட்டுள்ள அஞ்சல்தலைகள் பயன்படுத்துவிட்டதைக் குறிக்க இடப்படும் பயனழிப்பு முத்திரையும் (cancellation stamp) ஒன்றாகவே இடப்படுகின்றன. இவ்வேளைகளில், அஞ்சல்குறி மட்டுமோ அல்லது அஞ்சல்குறியும் பயனழிப்புக் குறியும் இடம்பெறும் ஒரே முத்திரையோ பயனழிப்பதற்குப் பயன்படும். அஞ்சல் குறியீடுகளைக் கையால் அல்லது இதற்கான பொறிகளைப் பயன்படுத்தி இடுவர். இறப்பர் முத்திரைகள், உருளைகள், மைத்தாரைகள் என்பன அஞ்சல்குறிகளை இடுவதற்குப் பயன்படும் கருவிகள். அண்மைக்காலத்தில் எண்ம அஞ்சல்குறிகள் பயன்படுகின்றன.

செருமானிய அஞ்சல்தலைகளுடன்கூடிய 1941 ஆம் ஆண்டைச் சேர்ந்த அஞ்சல்குறி. அஞ்சல்குறியும், பயனளிப்பும் தனித்தனியாக உள்ளன, 1941.
ஐக்கிய அமெரிக்க அஞ்சற்குறி. குறிக்கோள் தொடர் அடங்கிய பயனழிப்புடன் கூடியது, 1929

பல வேளைகளில் அஞ்சற்குறிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வருமான வரி விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட தேதியாக அஞ்சல்குறியில் காணப்படும் தேதி எடுத்துக்கொள்ளப்படுவது உண்டு.[1][2][3]

வரலாறு

தொகு
 
ஐக்கிய இராச்சியத்தில் பயன்பட்ட சில தொடக்ககால அஞ்சல்குறிகள்.
இடது: ஐக்கிய இராச்சியத்தில் பயன்பட்ட முதல் அஞ்சற்குறிகளுள் ஒன்று. ஏப்ரல் 17 ஆம் தேதி குறியிடப்பட்டுள்ளது. ஆண்டு இல்லை.
நடு: 1850 ஆம் ஆண்டு அயர்லாந்தில் இடப்பட்ட அஞ்சல்குறி..
வலது: 1890 ஆம் ஆண்டு இலண்டனில் இடப்பட்ட அஞ்சல்குறி.

முதல் அஞ்சல்குறியை ஆங்கிலேய அஞ்சலதிபர் நாயகமான என்றி பிசப் (Henry Bishop) என்பவர் 1661 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். அஞ்சல் காவுனர்கள் அஞ்சல்களை எடுத்துச் செல்வதைத் தாமதப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இக் குறியில் தேதியும், மாதமும் மட்டும் குறிக்கப்பட்டிருந்தன. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தேதி, மாதம் என்பவற்றுடன் அவ்வஞ்சல்களைப் பெற்றுக்கொண்ட அல்லது அவற்றைக் கொண்டு செல்வதில் ஈடுபட்ட அஞ்சல் நிலையத்தின் பெயரும் கொண்ட பல அஞ்சல் குறிகள் அஞ்சல்களில் இடப்பட்டன. குறைந்த அளவிலாயினும் தற்காலத்திலும் இவ்வழக்கம் உள்ளது. ஏறத்தாழ எல்லாத் தற்கால அஞ்சல்குறிகளிலும், தேதியும் இடமும் இடம்பெறுகின்றன. எனினும் சில விதிவிலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக நியூசிலாந்து அஞ்சல் அஞ்சல்குறிகளில் இடத்தின் பெயரைக் குறிப்பதைத் தவிர்க்கப்போவதாக 2004 ஆம் ஆண்டில் அறிவித்தது. எனினும், அக்குறிகளில் காணும் மூன்று இலக்க அடையாளத்திலிருந்து குறியிடப்பட்ட இடத்தை அறிந்துகொள்ள முடியும்.

பலவகையான அஞ்சற்குறிகளுள், தொடர்வண்டி அஞ்சலக அஞ்சல்குறிகள், கடல்சார் அஞ்சல்குறிகள் என்பவையும் குறிப்பிடத்தக்கவை. போர்க் காலங்களில் கடற்படைக் கப்பல்களில் இடப்பட்ட அஞ்சல்குறிகளில் வழக்கத்தைவிடக் குறைவான தகவல்களே இருந்தன. இது அக்கப்பல்களில் பாதை பற்றிய தகவல்களை எதிரிகள் அறிந்து கொள்வதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். "தணிக்கை செய்யப்பட்ட அஞ்சல்குறிகள்" என்பனவும் இது போன்ற நோக்கத்தைக் கொண்டவையே. இவற்றில் ஏற்கனவே இடப்பட்ட அஞ்சல் குறிகளில் இருக்கும் தகவல்கள் கருநிற மையிட்டு அழித்திருப்பர்.

பொதுவாக அஞ்சற்குறிகள் அரசுசார்பான அல்லது அரசினால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புக்களினால் அல்லது அவற்றினால் அதிகாரம் அழிக்கப்பட்ட முகவரகங்களினால் இடப்படுவதே உலகெங்கிலும் வழக்கமாக உள்ளது. எனினும் சில நாடுகளில், சிறப்பு அனுமதி பெற்று அஞ்சல் அனுப்புபவர்களே தமது அஞ்சற்குறிகளை இட்டுக்கொள்ளும் முறைகளும் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவில் அனுப்புனர் அனுமதி அஞ்சல்குறி (Mailer's Permit Postmark) என வழங்கப்படுகிறது.

மை நிறம்

தொகு

முதன்முதலில் ஐக்கிய இராச்சியத்தில் பென்னி பிளாக் என்னும் அஞ்சல்தலையுடன் கூடிய அஞ்சல் முறைமையை அறிமுகப்படுத்தியபோது கருநிற அஞ்சல்தலைகளின்மீது தெளிவாகத் தெரிவதற்காக சிவப்பு நிற மையைப் பயன்படுத்தினர். இது வெற்றியளிக்காததால், கறுப்பு நிற மையைப் பயன்படுத்துவதற்காக அஞ்சல்தலைகளைக் கறுப்பு அல்லாத பிற நிறங்களில் வெளியிட்டனர்.

பொது வாகத் தற்கால அஞ்சல்குறிகளுள் பெரும்பாலானவற்றில் கருநிற மையையே பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்தபடியாகச் சிவப்பு நிற மையையும் காணமுடியும். சிலவேளைகளில், குறிப்பாகப் படங்களுடன்கூடிய அஞ்சல்குறிகளுக்குப் பிற நிற மைகளும் பயன்படுவது உண்டு.

பெறுமதி

தொகு

சிறப்பு அல்லது அரிய அஞ்சற்குறிகள் அவற்றைக் கொண்டுள்ள அஞ்சல் தலைகள் அல்லது கடித உறைகளுக்குக் கூடிய பெறுமதியைக் கொடுக்கக்கூடியன. வழமையான அஞ்சல்குறிகளுக்குப் புறம்பாக முதல்நாள் உறைகளில் இடப்படும் அஞ்சல்குறிகள் கூடிய பெறுமதி கொண்டவை. இவற்றைவிட நிகழ்வுகளை நினைவு கூரும் வகையிலான படங்களுடன் கூடிய அஞ்சற்குறிகள், விளம்பர நோக்கம்கொண்ட அல்லது மக்களுக்குச் சில விடயங்களை அறிவிக்கும் "குறிக்கோள் தொடர் அஞ்சற்குறிகள்" என்பனவும் இவ்வாறான சிறப்பு அஞ்சற்குறிகள் ஆகும்.

இவற்றையும் காணவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Postmarks
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Sometimes spelled "post mark" or "post-mark".
  2. "History of the Postal Service". BBC. July 24, 2003. http://www.bbc.co.uk/dna/h2g2/alabaster/A1082558. 
  3. "William Dockwra and the Penny Post Service". Canadian Museum of Civilization. பார்க்கப்பட்ட நாள் November 8, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சற்குறி&oldid=3752064" இலிருந்து மீள்விக்கப்பட்டது