அஞ்சல்தலை சேகரிப்பு
அஞ்சல்தலை சேகரிப்பு என்பது அஞ்சல்தலைகளையும், அதனுடன் தொடர்புடைய வேறு பொருட்களையும் சேகரித்தல் என்று பொருள்படும். இது உலகின் மிகப் பரலமான பொழுது போக்குகளில் ஒன்று. உலக அளவில் பரவி இருந்தும், பெரும்பாலானோருக்கு இது ஒரு இலாபமில்லாத முயற்சியாகவே இருந்து வருகிறது. எனினும், சில சிறிய நாடுகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, சிறுதொகையான அஞ்சல்தலைகளை, அஞ்சல்தலை சேகரிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே வெளியிட்டு வருமானம் பெறுகின்றன. இந்நாடுகள் வெளியிடும் அஞ்சல் தலைகள் அவற்றின் அஞ்சல் துறைத் தேவைகளிலும் அதிகமாகவே இருக்கும்.[1][2][3]
அஞ்சல்தலை சேகரிப்பின் வரலாறு
தொகுபென்னி பிளாக் (Penny Black) என்று அழைக்கப்படும், முதலாவது அஞ்சல்தலை, 1840இல் பெரிய பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது. இளம் அரசி விக்டோரியாவின் படத்தைத் தாங்கியிருந்த இது, துளைகளில்லாமல் வெளியிடப்பட்டதனால் பயன்படுத்தும்போது கத்தரிக்கோல்களினால் வெட்டிப் பிரிக்கப்படவேண்டியிருந்தது. பயன்படுத்தப்படாத 'பென்னி பிளாக்' அஞ்சல்தலைகள், கிடைத்தற்கரிதாயிருக்கின்ற அதேவேளை, பயன்படுத்தப்பட்டவை பொதுவாகக் கிடக்கின்றன. இவற்றை $25 முதல் $150 வரை அவற்றின் நிலையைப் பொறுத்து வாங்கலாம்.
1960களிலும், 1970களிலும், பொதுவாகச் சிறுவர்களும், இளவயதினருமே தொடக்ககாலச் சேகரிப்பாளர்களாக இருந்தார்கள். பெரியவர்கள் பலர் இதையொரு சிறுவர் செய்யும் செயலாகக் கருதி ஒதுக்கினார்கள். 1800களின் இறுதிப் பகுதியில், இவ்வாறான சேகரிப்பாளர்கள் பெரியவர்களாகி, அஞ்சல்தலைகள், அவற்றின் உற்பத்தி, அஞ்சல்தலையில் அச்சுப் பிழைகள் போன்றவை தொடர்பாக முறையாக ஆராய்ந்து வெளியிட்டார்கள்.
அரிய அஞ்சல்தலைகளுக்குப் கிடைத்த பிரபலம் பலருக்குத் தூண்டுதலாக அமைந்து, 1920களில், சேகரிப்பாளர்களது தொகை விரைவாக அதிகரித்தது. முந்திய அஞ்சல்தலைகள் நல்ல நிலையில் கிடைக்காததால், அவற்றின் பெறுமதியும் பெருமளவு கூடியது. பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்ந்து இருந்த பழைய அஞ்சல்தலைகள் கிடைத்தற்கு அரிதாயிருந்தன.
1920களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் அஞ்சல்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், 1930களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில ஆண்டுகளின் பின்னர் நல்ல விலைக்கு விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய அஞ்சல்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புதிய நிலையில் 1930களின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்கமுடியும். பல சேகரிப்பாளர்களும், வணிகர்களும் இன்னும் 1930களின் அஞ்சல்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அஞ்சல்தலை சேகரிப்புப் பொருட்கள்
தொகுஅஞ்சல்தலைகள் சேகரிப்பாளர்களது சேகரிப்புப் பொருட்களில் பின்வருவன அடங்கும்:
- அஞ்சல்தலைகள்
- அஞ்சல் எழுதுபொருட்கள்
- அஞ்சல் அட்டைகள்
- விமான அஞ்சல்கள்
- விமான அஞ்சல் தாள்
- இறைவரி முத்திரைகள்
- அஞ்சல் கட்டண நிலுவை முத்திரைகள்
- வாத்து முத்திரைகள்
- நினைவுத் தாள்கள்
- முதல் நாள் உறைகள்
- முதல் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்
- நினைவுப் பக்கங்கள்
- அஞ்சல்தலையியல் நூல்கள்
- அஞ்சல்தலை தொடர்பில் அரசு வெளியிடும் பொருட்கள் (உ.ம்., அஞ்சலுறைகள்)
- அஞ்சல் தலையொத்த பெயர்ச் சுட்டிகள் (labels)
- உண்மையான அஞ்சல்தலைகளின் படங்களைக் கொண்ட, வேறு அஞ்சல்தலையல்லாத பொருட்கள்
- அஞ்சல்தலையொத்த பெயர்ச் சுட்டிகளின் படங்களைக் கொண்ட, வேறு அஞ்சல்தலையல்லாத பொருட்கள்
- போலியான/ஏமாற்று அஞ்சல் தலைகள்
- அஞ்சல் தொடர்பான போலிகள்
- அரிய அஞ்சல்தலைகளின் போலிகள்
- மீள்பதிப்புகள்
- faked stamps
- அஞ்சல்நிலையக் குறிகள்
வரையறைகள்
தொகுஇன்று பல்வேறு நாடுகளும் வெளியிடும் அஞ்சல்தலைகள் கணக்கிட முடியாதவை. 1840 க்குப் பின்னர் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அனைத்து நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேகரிக்ககூடியவை மிகச் சிலவே. ஒரு வரையறையின்றி, கிடைக்கக் கூடிய எல்லாத் அஞ்சல்தலைகளையும் சேகரிக்க முயலும் ஒருவரின் சேகரிப்பில் எவ்வித ஆழமும் இருக்க முடியாது. இதனால் தற்காலத்தில் சேகரிப்பாளர்கள், தங்கள் சேகரிப்பு முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறான வரையறுப்புகள் சில பின்வருமாறு:
- ஒற்றை நாட்டுச் சேகரிப்பு - இது ஒரு நாடு வெளியிட்ட அஞ்சல் தலைகளை மட்டும் சேகரிப்பதாகும்.
- தலைப்புசார் சேகரிப்பு - இது ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாகப் பல்வேறு நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளைச் சேகரிப்பதாகும். பறவைகள், விலங்குகள், புகைவண்டிகள், விண்வெளிப் பயணம் என்பன அஞ்சல்தலை சேகரிப்பில் பரவலமான சில தலைப்புகளாகும்.
முதலீடுகள்
தொகுஇப் பொழுதுபோக்கு இலாபமற்றதாக இருந்தும், பல புதிய சேகரிப்பாளர்கள் அஞ்சல்தலைகளில் முதலீடு செய்கிறார்கள். அஞ்சல்தலையியல் முதலீடு உயர் மட்டச் சேகரிப்பாளரிடையே பரவலாக இருந்துவருகிறது. அரிய அஞ்சல்தலைகள், தொட்டுணரக்கூடிய முதலீடுகளில், இலகுவாகக் காவிச்செல்லக் கூடியவை என்பதுடன் சேமித்துவைப்பதும் இலகுவாகும். ஓவியங்கள், சேகரிப்புப் பொருள் முதலீடுகள், பெறுமதியான உலோகங்கள் என்பவற்றுக்குக் கவர்ச்சிகரமான மாற்றீடாக இவை இருந்து வருகின்றன.
எனினும், இந்தப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் கிடைக்கும் மன நிறைவுக்கும், பொது அறிவு வளர்ச்சிக்குமாகவே, இதில் ஈடுபடும்படி புதியவர்களைத் தூண்டுகிறார்கள். மிகச் சிறிய வண்ணப்படங்களான அஞ்சல்தலைகள் பல பயனுள்ள தகவல்களைத் தம்முள் புதைத்து வைத்துள்ளன. இவை இளம் சேகரிப்பாளர்களது அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
அஞ்சல்தலை ஆய்வுகள்
தொகுஅஞ்சல்தலைகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதும் ஒரு தனித்துறையாக இருந்து வருகிறது. இதனை 'அஞ்சல்தலையியல்' (Philately) என்பார்கள். இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அஞ்சல்தலைகள் சேகரிப்பதும் வழக்கமாக இருப்பதால், அஞ்சல்தலையியலும் அஞ்சல்தலை சேகரிப்பும் ஒன்றே என்று பிழையாக எண்ணப்படுகிறது. அஞ்சல்தலையியல் என்பது அஞ்சல்தலைகளையும், தொடர்புடைய பொருட்களையும் ஆய்வு செய்யும் ஒரு விரிவான துறையைக் குறிக்கும் ஒரு பதமாகும்.
விபரப் பட்டியல்கள்
தொகுபலவகையான அஞ்சல்தலை விபரப் பட்டியல்கள் உள்ளன.
- ஸ்டான்லி கிப்பன் (ஐக்கிய இராச்சியம்)
- ஸ்கொட் விபரப்பட்டியல் (ஐக்கிய அமெரிக்கா)
- மிச்சேல் (செருமனி)
- யிவேர்ட் (yvert) (பிரான்சு)
இவற்றையும் காணவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அமெரிக்காவிலுள்ள மாநிலங்கள் வாரியாக தபால்தலைக் காட்சியகங்கள்
- உலக புதிய அஞ்சல்தலைகள் புதிய முத்திரை பிரச்சினைகள் அடைவு (ஆங்கிலத்தில், ஆனால் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்க)
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is stamp collecting?". Learn About Stamps. 2010. பார்க்கப்பட்ட நாள் 4 October 2010.
- ↑ "The origin of stamp collecting in America, Part 1". Linn's Stamp News. 17 October 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2017.
- ↑ Gray, John Edward, A Hand Catalogue of Postage Stamps for the use of the Collector. 1862. Robert Hardwicke. page viii.