அட்சய திருதியை
அட்சய திருதியை (Akshaya Tritiya) என அறியப்படுவது இந்துக்கள், சமணர்களின் வசந்தகால கொண்டாட்டம் ஆகும். இது இந்து மாதமான வைசாக வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.[1][2]
அட்சய திருதியை | |
---|---|
![]() பிரித்தானிய இந்திய அரசினால் வெளியிடப்பட்ட ஒரு அணாக் காசில் முதற் சமணத் தீர்த்தங்கரான ரிசபநாதர் மன்னன் சிரேயான்சிடமிருந்து கரும்புச்சாற்றைப் பெறும் காட்சி | |
கடைப்பிடிப்போர் | இந்துக்கள் சமணர்கள் |
கொண்டாட்டங்கள் | ஒரு நாள் |
அனுசரிப்புகள் | விஷ்ணுவை வழிபடல், தங்கம் பெற்றுக்கொள்ளல், தானம் செய்தல் |
தொடக்கம் | சித்திரை |
நாள் | ஏப்ரல் கடைசி அல்லது மே ஆரம்பத்தில் |
நிகழ்வு | ஆண்டுக்கொருமுறை |
மேலும், இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.[3] இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.[4] சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
அட்சயா எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
மத முக்கியத்துவம்
தொகு- இந்து இதிகாசப்படி, அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
- திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
- பொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில் கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.
- காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.
- பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.[5]
- மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர். இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.
- வங்காளத்தில், அட்சய திருதியை நாளில், "அல்கதா" எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.
- இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன.
- அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.
- செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
சமண மரபு
தொகுசமணத்தில், அட்சய திருதியை சமணத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிசபநாதர் தமது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவுசெய்து தமது குவிந்த கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றைப் பருகிய நாளாகக் கருதப்படுகிறது. சில சமணர்கள் இவ்விழாவை வர்சி தப எனும் பெயரால் குறிப்பிடுகின்றனர்.[6] சமணர்கள் இந் நாளில் உண்ணாநோன்பு மற்றும் துறவு வழமைகளைக் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக பாலிதானா (குசராத்) போன்ற புனிதப் பயண இடங்களில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.[6]
ஓராண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்கும் வர்சி தப் எனப்படும் நோன்பைக் கடைப்பிடிப்போர், இந்த நாளில் பாரணை செய்து (கரும்புச் சாற்றை அருந்தி) தமது தபசை நிறைவு செய்கின்றனர்.[7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ் மாதத்திற்கான முக்கிய விரதம் மற்றும் பண்டிகைகள்!". தினமலர். Retrieved 2025-04-28.
- ↑ K V Singh (2015). Hindu Rites and Rituals: Origins and Meanings. Penguin. pp. 39–40. ISBN 978-93-85890-04-8.
- ↑ B. A. Gupte (1994). Hindu Holidays and Ceremonials: With Dissertations on Origin, Folklore, and Symbols. Asian Educational Services. pp. 5–6. ISBN 978-81-206-0953-2.
- ↑ J. Gordon Melton (2011). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations. ABC-CLIO. pp. 18–20. ISBN 978-1-59884-206-7.
- ↑ "Festival". temple.dinamalar.com. Retrieved 2025-04-28.
- ↑ 6.0 6.1 J. Gordon Melton (2011). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations. ABC-CLIO. pp. 18–20. ISBN 978-1-59884-206-7.
- ↑ "Hindus and Jains celebrate Akshaya Tritiya for their own reasons". Merinews. Archived from the original on 12 June 2013. Retrieved May 13, 2013.
புற இணைப்புகள்
தொகு- அக்ஷய திரிதியா, அக்ஷய திருதியை, அகா தீஜ்- மரபுகள், சமயச் சடங்குகள் மற்றும் வழமைகள்
- அக்ஷய திரிதியா
- அட்சய திரிதியா மற்றும் சமணம் பரணிடப்பட்டது 2010-02-03 at the வந்தவழி இயந்திரம்
- அக்ஷய திரிதிய்யா பரணிடப்பட்டது 2010-06-12 at the வந்தவழி இயந்திரம்
- அக்ஷய் திரிதியா பெங்காலில்
- அக்ஷய் திரிதியாவில் மராட்டிய ரங்கோலிகள் பரணிடப்பட்டது 2008-09-05 at the வந்தவழி இயந்திரம்