அன்னமாச்சாரியார்

(அன்னமய்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.

தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார்
பிறப்பு(1408-05-09)மே 9, 1408
தாள்ளபாக்கம், ஆந்திரப் பிரதேசம்
இறப்புபெப்ரவரி 23, 1503(1503-02-23) (அகவை 94)
மற்ற பெயர்கள்அன்னமய்யா
பணிவைணவ அடியார், கவிஞர்
வலைத்தளம்
www.annamayya.org

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். "சுபத்ரா கல்யாணம்" இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான '’திம்மக்கா" என்பவர் அன்னமாச்சாரியாரின் மனையாளாவார்.

அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.

இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.

கீர்த்தனைகள்

தொகு

இவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை (சங்கீர்த்தனைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

 

சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் இராமானுசரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் இராமானுசர் மீதும் (உ.ம் கதுலன்னி கிலமைனா..., உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (உ.ம்: வாடே வேங்கடேசுனனே வாடே வீரு...) சில பாடல்களை இயற்றியுள்ளார்.

சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் "ப்ரஹ்மம் ஒக்கடே" என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.

மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையிலும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றி முடித்துள்ளார். இராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.

வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்து உள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்து உள்ளது. திவிபர்த ராமாயணா, சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன. அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரை வரிசை செய்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.

திரைப்படமும் பாடல்களும்

தொகு

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னமய்யா என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன.

இவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத், கொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர். இவரது பாடல்களை பல தெலுங்கு திரைப்படங்களில் எடுத்தாண்டுள்ளனர்.

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னமாச்சாரியார்&oldid=3231447" இலிருந்து மீள்விக்கப்பட்டது