அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்

(அயர்லாந்துப் பஞ்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் (Irish Potato Famine) அல்லது பெரும் பஞ்சம் (Great Famine) என்பது 1845-1852 கால கட்டத்தில் அயர்லாந்து நாட்டில் பெரும் திரளான மக்கள் பட்டினியாலும் நோயாலும் மடிந்ததையும் வாழ்வுதேடி வெளிநாடுகளுக்குப் பெயர்ந்து சென்றதையும் குறிக்கும்.[1]

அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்
Great Famine

(an Gorta Mór)
நாடுஅயர்லாந்து
இடம்அயர்லாந்து
காலம்1845 - 1852
மொத்த இறப்புகள்1 மில்லியன்
அவதானிப்புகள்வளர்ச்சித் திட்டங்கள் தோல்வியுற்றது; உருளைக்கிழங்கு நோய்ப்பட்டது; சோள இறக்குமதிக் கட்டுப்பாடு
நிவாரணம்கீழே காண்க
மக்கள்தொகைக்கு பாதிப்புசாவு, புலம்பெயர்தல் காரணமாக மக்கள் தொகை 20-25% குறைந்தது
விளைவுகள்அயர்லாந்தின் மக்கள் தொகை, அரசியல் மற்றும் கலாச்சார அமைப்பு வேரோட்டமாக மாறியது
வலைத்தளம்பெரும் பஞ்ச நினைவுச் சின்னங்கள்
முன்1740–1741 அயர்லாந்து பஞ்சம்
பின்1879 அயர்லாந்து பஞ்சம் (An Gorta Beag)

பெயர் தொகு

அயர்லாந்துக்கு வெளியே அயர்லாந்து உருளைக்கிழங்குப் பஞ்சம் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்ற இந்த நிகழ்வு அயரிய மொழியில் (Irish language) an Gorta Mór (IPA: [ənˠ ˈɡɔɾˠtˠə ˈmˠoːɾˠ] என்று அழைக்கப்படுகிறது. அதற்கு பெரும் பஞ்சம் (the Great Hunger) என்பது பொருள். இதைக் கெட்ட காலம் (the bad times) என்றும் (அயரிய மொழியில் an Drochshaol ([ənˠ ˈdˠɾɔxˌhiːlˠ]) என்றும் அழைப்பர்.

காரணங்கள் தொகு

அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட பல காரணங்கள் இருந்தன. நேரடிக் காரணமாக அமைந்தது உருளைக்கிழங்குச் சாகுபடியைத் தாக்கிய ஒருவகை நோய் ஆகும்.[2] "உருளைக்கிழங்கு நோய்" (potato blight) என்ற அந்த தாக்குதல் 1840களில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது உண்மை. என்றாலும், அயரிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உருளைக்கிழங்கை நம்பியே பிழைத்தனர்.

மேலும், அயர்லாந்தில் அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையும், அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதும், சமூக, பொருளாதாரக் கூறுகளும் அயரிய பஞ்சத்தின் கொடுமையை இன்னும் கடுமை ஆக்கின. அயர்லாந்தின் பெரும் பஞ்சம் இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தியதற்கு அரசியல், சமூக, பொருளாதாரக் கூறுகளைக் கட்டுப்படுத்திய ஆட்சியாளர்கள் எந்த அளவுக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்பது பற்றிய விவாதம் இன்றும் தொடர்கிறது.[3][4]

பெரும் பஞ்சம் கடினமானதற்கு முக்கிய காரணங்கள் தொகு

இங்கிலாந்து நிலக்கிழார் ஆதிக்கம் தொகு

1541ஆம் ஆண்டிலிருந்து அயர்லாந்து நாடு முற்றிலுமாகப் பிரித்தானிய கட்டுபாட்டுக்கு உட்படலாயிற்று. இங்கிலாந்தின் நிலக்கிழார்கள் அயர்லாந்தின் நிலத்தில் பெரும்பண்ணைகளுக்கு உரிமையாளர் ஆனார்கள். அயர்லாந்தின் குடியானவர்கள் அப்பண்ணை நிலங்களில் குத்தகைத் தொழிலாளிகளாக வேலை செய்தார்கள். அவர்கள் சோளம், உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பயிர்செய்ததோடு, ஓரளவுக்கு கால்நடைகளையும் வளர்த்தார்கள். நிலக்கிழார்களுக்குக் கொடுக்கவேண்டிய குத்தகைத் தொகையாக தானியங்களும் கால்நடைகளும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட பிறகு, அயரிய குடியானவர்களுக்கு எஞ்சியதெல்லாம் உருளைக்கிழங்கு மட்டுமே. அதைச் சிறிதளவு நிலத்திலும் பயிரமுடியும் என்பதாலும், அப்பயிர் எளிதாகவும் விரைவாகவும் பலனளிக்கும் என்பதாலும், உருளைக்கிழங்கே அயர்லாந்தில் சாமானியர்களின் அன்றாட உணவாக மாறிற்று.

கத்தோலிக்கருக்கு எதிரான சட்டம் தொகு

அயர்லாந்து மக்களுள் மிகப் பெரும்பான்மையோர் கத்தோலிக்க சமயத்தைக் கடைப்பிடித்தனர். 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து புராட்டஸ்தாந்து சபையைத் தழுவியதும், அயர்லாந்து கத்தோலிக்கரின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் நிலத்தை உடைமையாகக் கொண்டிருக்க தடை விதிக்கப்பட்டது. நிலத்தை வாங்கினாலோ குத்தகைக்குக் கொடுத்தாலோ தண்டனை வழங்கப்பட்டது.

இங்கிலாந்தையும் இசுக்காந்துலாந்தையும் சார்ந்த புராட்டஸ்தாந்து சமயத்தவர்களுக்கு அயர்லாந்தின் விளைச்சல் நிலங்கள் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன. இவ்வாறு வெளிநாட்டு நிலக்கிழார்கள்களின் கீழ் குத்தகை விவசாயிகளாக அயர்லாந்தது நாட்டவர் மாறினர்.

அயரிய கத்தோலிக்கருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு வேலைகள் கொடுக்கப்படவில்லை. நகரப் பகுதிகளில் அவர்கள் குடியேற உரிமை மறுக்கப்பட்டது. நகரங்களிலிருந்து 5 மைலுக்கு அப்பால்தான் அவர்கள் வீடுவைக்க முடிந்தது. அவர்கள் கல்வி பெற உரிமை கிடையாது. இவ்வாறு பலவகைகளில் கொடுமைப்படுத்தப்பட்ட அயரிய மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது "அயரிய விடுதலைச் சட்டம்" (Emancipation Act) வழியாகத்தான் (1778).[5]

குத்தகை முறையின் கொடுமை தொகு

அயரிய கத்தோலிக்கரும் நிலத்தை உடைமையாகக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றப்பட்ட போதிலும், ஏழ்மையில் வாடிய அவர்களால் நிலத்தை விலைகொடுத்து வாங்க இயலவில்லை.

அயரிய மக்களில் 72% பேர் நிலத்தைப் பயிரிடுவதில் ஈடுபட்டிருந்தனர். எனவே குத்தகைக்கு எடுத்து பயிரிடுவதற்குப் போதுமான நிலமும் கிடைக்கவில்லை. குறைந்தது 8 ஏக்கர் நிலமாவது பயிரிட இருந்தால்தான் ஒரு குடும்பம் அதைக்கொண்டு வாழமுடியும் என்ற நிலையில், 65% குத்தகை நிலங்கள் ஒவ்வொன்றும் 5 ஏக்கருக்குக் குறைவாகவே இருந்தன.

பயிர்த்தொழிலை விடுத்து வேறு வேலை வாய்ப்புகள் அயரிய கத்தோலிக்கர்களுக்கு அளிக்கப்படவில்லை. வட அயர்லாந்தின் அல்ஸ்டர் பகுதியைத் தவிர வேறு ஓரிடத்திலும் தொழிற்சாலைகள் நிறுவப்படவுமில்லை. பிரித்தானிய அரசு கடைப்பிடித்த ஒருதலைச் சார்பான கொள்கைகளாலும் வரிவிதிப்புகளாலும் அயர்லாந்தில் தொழில்வளர்ச்சி தடைபட்டது என்று அதிகாரபூர்வமான ஒரு குழு அறிக்கை கூறியது. நிலச் சீர்திருத்தம், குத்தகைக் குடியானவர்களின் உரிமைப் பாதுகாப்பு, பொதுப்பணி செயல்பாடு, தொடருந்துப் பாதைகளை நிறுவுதல் போன்றவை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியதை பிரித்தானிய அரசு கண்டுகொள்ளவில்லை.

அரசியல் காரணங்கள் தொகு

ஆண்டு உருளைக்கிழங்கு சாகுபடி (கணிப்பு)
(ஆயிரம் டன் கணக்கில்)[6]
1844 14,862
1845 10,063
1846 2,999
1847 2,046
1848 3,077[1]
1849 4,024
1855 6,287
1856 4,419
1859 4,321

[1] 1848ஆம் ஆண்டுக்கான கணிப்பு, முழுமையற்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்தது.


 
பெரும் பஞ்சத்தில் உயிரிழந்தோருக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம். உணவு பெற பல மைல் தூரம் மோசமான காலநிலையில் பயணம் செய்ய வேண்டியிருந்ததால், பலர் பயணத்தின் போதே இறந்துபோயினர்.
 
ஆண்டு வாரியான அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய மக்கள் தொகை ஒப்பீட்டு வரைபடம். இடது அச்சு: அயர்லாந்து; வலது அச்சு: ஐரோப்பா.
1841-51 காலத்தில் அயர்லாந்து பிரதேசங்களில் மக்கள் தொகை வீழ்ச்சி - விழுக்காடு - (%)
லைன்ஸ்டர் மூன்ஸ்டர் அல்ஸ்டர் கோனாட் அயர்லாந்து
15.3 22.5 15.7 28.8 20
Table from Joe Lee, The Modernisation of Irish Society (Gill History of Ireland Series No.10) p. 2
 
1845-1849 கால கட்டத்தில் நிகழ்ந்த பட்டினி இனப்படுகொலை என்னும் பெயரில் பெல்பாஸ்டு நகரில் அமைக்கப்பட்ட சுவர் ஓவியம்
 
டப்ளின் நகரில் எழுப்பப்பட்ட பெரும் பஞ்ச நினைவுச் சிற்பம்


இழப்புகள் தொகு

அயர்லாந்தின் பெரும் பஞ்சத்தின்போது ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறந்தார்கள். பட்டினிக்குத் தப்புவதற்காகவும், வாழ்வு தேடியும் மற்றும் ஒரு மில்லியன் அயரிய மக்கள் தம் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.[7]இதனால் அயர்லாந்து நாட்டின் மக்கள் தொகை 20-25% வீழ்ச்சியடைந்தது.[8]

 
1841–1851 ஆண்டுகளில் அயர்லாந்தின் மக்கள் தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி

தாக்கம் தொகு

அயர்லாந்தின் வரலாற்றில் பெரும் பஞ்சம் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.[9] அப்பஞ்சத்தின் விளைவாக, அயர்லாந்தின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அந்நாட்டின் அரசியலில் அடிப்படையான திருப்பம் நிகழ்ந்தது. அயரிய கலாச்சாரத்திலும் ஆழ்ந்த தாக்கம் உண்டாயிற்று.

"பஞ்சத்திற்கு முந்திய காலம்", "பஞ்சத்திற்குப் பிந்திய காலம்" என்று அயரிய வரலாற்றைப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி அயரிய மக்களின் நினைவில் பதிந்துபோயிற்று.

பஞ்சத்தைத் தொடர்ந்து அயர்லாந்தில் தங்கியவர்களும் சரி, பிழைப்புக்காக வெளிநாடு பெயர்ந்தவர்களும் சரி, அயர்லாந்தின் பெரும் பஞ்சத்தைத் தங்கள் வரலாற்றின் முக்கியதொரு கட்டமாகக் கருதுகின்றார்கள்.[10]

பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அயர்லாந்து நாடு "பிரித்தானிய மற்றும் அயரிய ஐக்கிய இராச்சியம்" (United Kingdom of Great Britain and Ireland) என்ற அரசியல் அமைப்பின் பகுதியாக இருந்தது. எனவே, அயரிய பெரும் பஞ்சம் அயரிய மக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டி எழுப்பி, அவர்கள் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துக் குரல்கொடுக்க உந்துதல் அளித்தது.


மேற்கோள்கள் தொகு

  1. Kinealy 1995, ப. xvi–ii.
  2. Ó Gráda 2002, ப. 7.
  3. Woodham-Smith 1991, ப. 19.
  4. Kinealy 1994, ப. xvi–ii, 2–3.
  5. MacManus 1979, ப. 458–459.
  6. Bourke, P. M. Austin (1960), "The Extent of the Potato Crop in Ireland at the time of the Famine" (PDF), Dublin: Journal of the Statistical and Social Inquiry Society of Ireland, Dublin, அயர்லாந்து: Statistical and Social Inquiry Society of Ireland, XX, Part III: 1–35, ISSN 0081-4776, பார்க்கப்பட்ட நாள் 2011-04-10.
  7. Ross 2002, ப. 226.
  8. Kinealy 1994, ப. 357.
  9. Kinealy 1995, ப. xvii.
  10. Kinealy 1995, ப. 342.

ஆதாரங்கள் தொகு

மேல் ஆய்வுக்கு தொகு

வெளி இணைப்புகள் தொகு