அரகண்டநல்லூர்க் குடைவரை

அரகண்டநல்லூர்க் குடைவரை என்பது, தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில் ஆகும். இங்குள்ள பெரிய பாறை ஒன்றின் கீழ்ப்பகுதியில் இக்கோயில் குடையப்பட்டு உள்ளது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்ட இக்குடைவரைப் பணி முற்றுப்பெறாமல் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளது. கைவிடப்பட்டதற்கான காரணங்கள் அறியப்படவில்லை. இந்தக் குடைவரைக்கு முன்புறம் “ஆய்குளம்” என அழைக்கப்படும் குளம் ஒன்றும் காணப்படுகிறது.[1]

இங்குள்ள மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் தூண்கள் அமைந்துள்ளன, ஒவ்வொரு வரிசையிலும் நான்கு பெரிய சதுர வடிவிலான முழுத்தூண்களும், பக்கச் சுவர்களை அண்டி வரிசைக்கு இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. தூண்களில் சதுரம், எண்கோணப்பட்டை போன்ற வழமையான கூறுகள் உருவாக்கப்படவில்லை. பின்புறச் சுவரில் உள்ள அடையாளங்களைக் கொண்டு ஐந்து கருவறைகளை அமைப்பதற்கான திட்டங்கள் இருந்ததையும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அறிய முடிகிறது. இக்குடைவரையின் முகப்பும், மேற்பகுதியும், தரையும் முழுமையாகச் செப்பம் செய்யப்படாத நிலையிலேயே உள்ளன.[2]

தற்போது இக்குடைவரையை அண்டிப் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட கோயில்கள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 54, 55
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 54