அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, சென்னை

அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, சென்னை அல்லது தாம்பரம் காசநோய் மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய அரசு மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையை தமிழ்நாடு அரசு நிதியளித்து நிர்வகிக்கிறது. இது 1928 இல் நிறுவப்பட்டது.[1]

அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை
தமிழ்நாடு அரசு
அமைவிடம் தேசிய நெடுஞ்சாலை எண் 32, தாம்பரம் சானடோரியம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள் 12°56′40″N 80°7′45″E / 12.94444°N 80.12917°E / 12.94444; 80.12917
மருத்துவப்பணி பொது
வகை முழு சேவை மருத்துவ மையம்
இணைப்புப் பல்கலைக்கழகம் இசுடான்லி மருத்துவக் கல்லூரி
படுக்கைகள் 776 (சானடோரியம்), 120 (மறுவாழ்வு மையம்)
நிறுவல் 1928
பட்டியல்கள்

வரலாறு தொகு

இந்த மருத்துவமனையை 1928 ஆம் ஆண்டில் காச நோய் நிபுணர் எம்.டி மற்றும் எம்.ஆர்.சி.எஸ். பட்டம்பெற்ற மருத்துவர் டேவிட் ஜேக்கப் ஆரோன் சவ்ரி முத்து என்பவர் நிறுவினார். ஐக்கிய இராச்சியத்தில் இருந்து திரும்பியதும், 1928 ஏப்ரல் 9 ஆம் நாள் தம்பரத்தில் பச்சைமலை அடிவாரத்தில் மருத்துவமனையைத் தொடங்கினார். இந்த மருத்துவமனையை 250 ஏக்கர்கள் (100 ha) பரப்பளவில், 12 படுக்கைகளுடன் திறக்கப்பட்டது. சவ்ரி முத்து ஐக்கிய இராச்சியத்தில் மெண்டிப் மலைப்பகுதியில் உள்ள சானடோரியத்தை ஒத்த மருத்துவமனையாக இதை வளர்த்தெடுக்க விரும்பினார். நுரையீரல் காசநோய் மருத்துவ நிபுணரான சவ்ரி முத்து 1900 களின் முற்பகுதியில், ஐல் ஆஃப் வைட்டில் உள்ள இங்கில்வுட் சானடோரியத்தின் மருத்துவராக இருந்தார். 1910 அல்லது அதற்குள், இவர் சாமர்செட் பகுதியில் உள்ள மெண்டிப் மலைப்பகுதியில் சானடோரியம் ஒன்றை நிறுவி விரிவாக்கினார். 1917 ஆம் ஆண்டில் குறைந்த காலம் இருந்தபோதிலும், இவரது நோயாளிகளில் ஒருவர், கணிதவியலாளர் சீனிவாச இராமானுசன் ஆவார்.

டாக்டர் சவ்ரி முத்துவின் நண்பர்களில் மற்றொருவர் மகாத்மா காந்தி ஆவார், அவர் இயற்கை மருத்துவம் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். காந்தியின் செல்வாக்கின் காரணமாக, டாக்டர் சவ்ரி முத்து 1920 முதல் இந்தியாவில் அதிக காலம் தங்கினார். சென்னைக்கு வந்தவர் இங்கு காசநோய் நோயாளிகளுக்கு சுகாதார நிலையம் ஒன்றை நிறுவ விரும்பினார். அதற்காக இவர் தம்பரத்தில் 250 ஏக்கர் நிலத்தை வாங்கினார். 1928 ஏப்ரல் 9 ஆம் நாள், 12 படுக்கைகளுடன் கூடிய சுகாதார நிலையம் சர் சிபி ராமசாமி அய்யரால் திறந்து வைக்கப்பட்டது.

இருப்பினும், இவர் மீண்டும் இங்கிலாந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் இவர் இந்த சொத்தை 1937 மார்ச் 24 அன்று சென்னை அரசுக்கு விற்றார். மாநில அரசால் வாங்கப்பட்ட இந்த மருத்துவமனை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.[2]

இதன்பிறகு இந்த சானடோரியத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, கூடுதல் படுக்கைவசதி, கதிரியக்கவியல் தொகுதி மற்றும் ஆய்வகம் போன்ற பல வசதிகள் உருவாக்கப்பட்டு அடுத்த தசாப்தங்களில் வளர்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது ஒரு குறுகிய காலத்திற்கு இந்த வளர்ச்சி தேக்கமடைந்தது. 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பிறகு, ஒரு புனர்வாழ்வு குடியிருப்பை 17.14 ஏக்கர்கள் (6.94 ha) பரப்பளவில் இந்திய அரசின் அப்போதைய சுகாதார அமைச்சர் ராஜ்குமாரி அமிர்த் கவுர் திறந்து வைத்தார். இங்கு காசநோயாளிகளுக்கு பிரம்பு நாற்காலி தயாரித்தல், புத்தக வேலைகளான அச்சிடுதல், தைத்தல், புத்தக அட்டை அமைத்தல் போன்ற தோழில் வாய்புகளும் ஏற்படுத்தப்பட்டது.[2]

1976 ஆம் ஆண்டில், அதிகமான நோயாளிகள் பிரிவுகள் உருவாக்கப்பட்டன, மொத்த படுக்கைகள் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்தது. பல ஆண்டுகளாக மருத்துவமனை முக்கியத்துவம் பெற்றவந்த நிலையில், உள்ளூர் மக்களின் வசதிக்காக ' தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம் ' என்ற புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது மற்றும் 600047 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணை உடைய தனி அஞ்சல் பிரிவு உருவாக்கப்பட்டது.[2]

1980 களின் முற்பகுதியில் இப்பகுதியில் காசநோய் தாக்கம் குறைந்து வந்ததால், காசநோய் சானடோரியம் என்ற பெயரானது அதிகாரப்பூர்வமாக 'காசநோய் மற்றும் நெஞ்சக நோய் அரசு மருத்துவமனை' என்று பெயர் மாற்றப்பட்டது, மேலும் 1986 ஆம் ஆண்டில், இந்தப் பெயரும் 'அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை' என்று மாற்றம் பெற்றது. 1993 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி நோய் அறிகுறிகளுடன் காச நோயாளிகள் சேர்க்கப்பட்டதன் மூலம், இந்த மருத்துவமனை எச்.ஐ.வி பராமரிப்பு மற்றும் பயிற்சி மையமாக மாறியது.[2]

இன்று, இந்த மருத்துவமனை நெஞ்சக நோய் மருத்துவத்திற்கான ஒரு பிரத்யேக மையமாகவும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் காசநோய் துறையில் ஆராய்ச்சி செய்யும் சிறப்பான மையமாகவும் உள்ளது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Manikandan, K. (19 March 2013). "GHTM lab gets NABL recognition". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/ghtm-lab-gets-nabl-recognition/article4523018.ece. பார்த்த நாள்: 24 Mar 2013. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Govt. Hospital of Thoracic Medicine" (PDF). GHTM.in. Archived from the original (PDF) on 14 September 2013. பார்க்கப்பட்ட நாள் 24 Mar 2013.