அரிச்சந்திரன் படித்துறை
அரிச்சந்திரன் படித்துறை (ஆங்கிலம்:Harishchandra Ghat) வாரணாசி எனும் காசி நகரில் ஓடும் கங்கை ஆற்றுப் படித்துறைகளில் ஒன்று. புராணக் கதையில் வரும் அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன், இங்கு அமைந்த மயானத்தில் பிணம் எரிக்கும் வெட்டியானாக ஏவல் செய்த காரணத்திற்காக இப்படித்துறைக்கு அரிச்சந்திரன் படித்துறை எனப் பெயராயிற்று. [1]. வாரணாசியில் இந்துக்களின் சடலங்கள் எரியூட்டப்படும் இரண்டு படித்துறைகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று மணிகர்னிகா படித்துறை ஆகும். இப்படித்துறை அருகில் தமிழர்களின் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் காஞ்சி சங்கர மடத்தின் கோயிலும், அதனருகில் பாரதியாரின் திருவுருவச் சிலையும் அமைந்துள்ளன.
புராண வரலாறு தொகு
சூரிய குலத்து அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன் தான் செய்வித்த ராஜசூய யாகத்திற்கு தட்சணையாக (காணிக்கையாக), யாகம் செய்த விசுவாமித்திரருக்கு தனது முழு நாட்டையும் தன் உடமைகளையும் வழங்கினார். ஆனால் விசுவாமித்திரர் இந்தத் தட்சணை போதாது என்று மேலும் பல தட்சணை கேட்டார். இனி தட்சணை வழங்க தன்னிடம் ஏதும் இல்லை என்பதால் தன்னையும், தன் மனைவியையும், தன் மகனையும் விசுவாமித்திர முனிவருக்கு தட்சணையாக கொடுத்துவிட்டு, அவருக்கு அடிமைச் சேவகம் செய்தார் அரிச்சந்திரன். [2]. ராஜா அரிச்சந்திரன், காசி நகரத்து கங்கைக் கரையில் அமைந்த மயானத்தில் பிணங்களை எரிக்கும் வெட்டியானாக பணிபுரிந்ததால் இப்படித்துறைக்கு அரிச்சந்திரப் படித்துறை என்று பிற்காலத்தில் பெயராயிற்று.
மத நம்பிக்கை தொகு
காசியில் இறப்பவர்களை அரிச்சந்திர படித்துறையில் தகனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. [3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2021-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210417183452/https://www.ixigo.com/harishchandra-ghat-varanasi-india-ne-1125720.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150320073157/http://varanasi-tourism.net/varanasi-ghats/harish-chandra-ghat.html.
- ↑ http://wikimapia.org/18128268/Raja-Harishchandra-Ghat