அர்ச்சகர் என்பவர் இந்து சமயக் கோயில்களில் அர்ச்சனை செய்யும் நபராவார்.

அபிசேகத்தில் ஈடுபடும் ஒரு அர்ச்சகர்

இந்து தொன்மவியலில் அர்ச்சகர் தோற்றுவிப்பு

தொகு

அர்ச்சகாஸ்ச்ச ஹரி ஸக்ஷ¡த்" என்கிறது வேதம். உலக தர்மத்தை காப்பதில் மிக முக்கிய பங்காற்றிவருபவர்கள் தான் அர்ச்சகர்கள். தன் உடல், பொருள், ஆவி, இன்பம் எல்லாவற்றையுமே இறைவனுக்காக தியாகம் செய்து உலகம் தழைக்க இறைவனிடம் இடைவிடாது தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு இறைச்சேவை செய்பவர்கள்தான் அர்ச்சகர்கள். இவர்கள் இறைவன் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும்போதே பகவான் ஸ்ரீவிஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இறைவனின் ஹ்ருதயத்திலிருந்து இவர்கள் தோன்றியதால் இவர்களுக்கு ஸ்ரீவைகாநஸர்கள் என்று பெயர்.

ஸ்ரீவிகநஸர்

தொகு

அதாவது முதன் முதலில் பெருமாள் சர்வ லோகங்களையும் படைக்க எண்ணியபோது, உலக ஜீவராசிகளை தான் காக்கவும், தன்னை தினம் ஆராதித்து காப்பாற்ற தனக்காக ஒருவரை நியமிக்க வேண்டும்,என்று எண்ணிய போது, தனக்கு இணையான ஒருவரால்தான் என்னை பூஜிக்க முடியும் என்று கருதிய ஸ்ரீமஹாவிஷ்ணு, தன் ஹ்ருதயகமலத்திலிருந்து,தன் ஆத்மாவின் ஒரு பாகத்தை தன் வலது கை நகத்தினால், கிள்ளியெடுத்தார். பகவானின் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்பட்ட அந்த ஆத்மாவும், ஸ்ரீவிஷ்ணுவைப்போலவே இருந்ததால், இருவரையும் பார்ப்பவர்கள் குழப்பமடையக்கூடாது என்பதால், தன் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்பட்ட தன்னைப் போலவே, சங்கு-சக்ரம் தரித்து நான்கு கைகளுடன் விளங்கும் இன்னொரு விஷ்ணுவுக்கு "ஸ்ரீவிகநஸர்" என்று பெயர் சூட்டி அவரிடம் ஒன்றரைக்கோடி க்ரந்தங்களை கொடுத்து அதில் உள்ளபடி நீவிர் எனக்கு தினம் ஆராதித்து வரவேண்டும். என்று கட்டளையிட்டார்.[சான்று தேவை]

இவர்களின் பூலோக பிறப்பு

தொகு

அதன்படி அன்றிலிருந்து இன்று வரை இடையறாது பகவானுக்கு தொடர்ந்து பூஜித்து வருபவர்கள்தான் இந்த அர்ச்சகர்கள். இவர்களின் பூலோக பிறப்பு - இந்தியாவின் வடக்கேயுள்ள "நமிசாரண்யம்" என்கிற அற்புத புனித வனமாகும். ஆம்! இங்குதான் அர்ச்சகர்கள் முதல் முதலில் இறைவனால், இந்த புண்ய பூமியில் தோற்றுவிக்கப்பட்டார்; பிறகுதான் மற்ற ஜீவராசிகளை இறைவன் படைக்கலானார். என்பது வேதவழி வரலாறு.

ஸ்லோகம்

தொகு

அர்ச்சகர்களின் இந்த தோற்றத்தைக் குறிக்கும் ஸ்லோகம்

 " யேஷாமாஸீர் ஸ்ரீஆதிவைகாநஸானாம் ஜெந்ம §க்ஷத்ரே நைமிசாரண்ய பூமி: |
  தேவோயேஷாம் தேவகி புண்ய ராஸி: தேஷாம்பாத த்வந்தபத்மம் ப்ரபத்யேத்||"

ஸ்ரீவைகாநஸ அர்ச்சகர்கள்

தொகு

இப்படிப்பட்ட மிகப்புனிதமான இறைவனின் ப்ரதி அவதாரமாக திகழும் ஸ்ரீவைகாநஸ அர்ச்சகர்கள் இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள (திருமலா திருப்பதி தேவஸ்தானத்தையும் சேர்த்து) பல ஸ்ரீ சிவா மற்றும் விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக சேவையாற்றிவருகிறார்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் கோரிக்கை

தொகு

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் ஆகம விதிகளின்படி நடத்தப்படுகின்ற இந்துக் கோயில்களில் பெண்கள் மற்றும் பிராமணர் அல்லாத சாதியினர் பூசை செய்ய அனுமதி இல்லை. எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை சமூக நீதியை வலியுறுத்துபவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அம்பேத்கர் தலைமையில் 1927இல் நடந்த மகத் போராட்ட மாநாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தினர் அனைத்து சாதியினரும் அர்சகராக வேண்டும் என்று கோரி வந்தனர். இதையடுத்து மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 1970 திசம்பர் இரண்டாம் நாளில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தில் அர்ச்சகர் வாரிசு உரிமை ஒழிக்கப்படுவதாகவும், உரிய பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்றும் கூறப்பட்டிருந்த‍து. இதை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் முடிவில் அர்ச்சகர் வாரிசு உரிமை ஒழிக்கப்படுவதை ஏற்பதாகவும், அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டப்பிரிவு செல்லாது என்று கூறியது.[1]

கேரளத்தில் நியமனம்

தொகு

கேரளத்தில் ஈழவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் 1993 இல் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு அர்ச்சகராக நியமிக்கப்பட சாதியை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது முதன்மையான கூறாக இருக்க வேண்டியதில்லை என்று கூறியது.

தமிழகத்தில் சட்டம்

தொகு

மேற்கண்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு மீண்டும் மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 2006 மே 23 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்துக்களில் உரிய பயிற்சியும், தகுதியும் உள்ள அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் அனைத்து சாதியைகளைய்ம் சேர்ந்த 206 பேருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடு்க்கப்பட்டது. இந்த வழக்கில் 2015 திசம்பரில் வழங்கிய தீர்ப்பில் ஆகமப் பயிற்சி பெற்ற 206 பேரை அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்று கூறவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட கோயிலில் ஆகம விதிப்படி எந்தப் பிரிவினர், கோத்திரத்தினர் காலங்காலமாக இருந்து வருகின்றார்களோ அவர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் தீர்ப்பு வழங்கியது.[2]

கேரளத்தில் மீண்டும் நியமனம்

தொகு

இந்திய உச்ச நீதிமன்றத்தின் குழப்பமான தீர்ப்புக்குப் பிறகு அர்ச்சகர் பணியில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து கேரள அறநிலையத்துறை 2017 அக்டோபர் 6 அன்று 26 பிராமணர், 30 பிற்படுத்தப்பட்டோர், 6 பட்டியல் சாதியினர் என மொத்தம் 62 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணையை வழங்கியது.[3]

தமிழ்நாட்டில் நியமனம்

தொகு

இதன் பிறகு தமிழக அறநிலையத் துறையால் முதன் முதலாக பிற்படுத்தப்பட்ட சாதியினரான அகமுடையார் சாதியைச் சேர்ந்தவரும், தமிழக அறநிலையத் துறையால் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவரான மாரிச்சாமி என்பவர் மதுரை தல்லாக்குளம் அய்யப்பன் கோயில் பூசாரியாக 2017 பெப்ரவரி மாதம் பணியில் அமர்த்தப்பட்டார்.[4][5]

பெண் அர்ச்சகர்கள்

தொகு

கர்நாடகாவின் மங்களூருவில் கேரளாவின் ஆன்மீக சீர்திருத்தவாதியான நாராயண குருவால் அமைக்கப்பட்ட குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் லட்சுமி மற்றும் இந்திரா ஆகிய இரு விதவைப் பெண்கள் நவராத்திரியின் துவக்க தினத்தன்று அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.[6]


மேற்கோள்கள்

தொகு
  1. செங்கதிர் (அக்டோபர் 2018). "அறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்". சிந்தனையாளன். 
  2. "தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்?". கட்டுரை. bbc.com. 12 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2018.
  3. "கேரளாவைப் போல தமிழகமும் தலித்துகளை அர்ச்சர்கர்களாக நியமிக்க வேண்டும்: திருமாவளவன்". செய்தி. இந்து தமிழ். 6 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2018.
  4. "மந்திரம் ஓதுகிறார் மதுரை மாரிச்சாமி". செய்தி. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2018.
  5. நந்தினி வெள்ளைச்சாமி (2 ஆகத்து 2018). "தமிழகத்தில் முதன்முறையாக பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்: சமூக நீதிக்கான முக்கிய நகர்வு". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2018.
  6. "கர்நாடகாவில் விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம்". பிபிசி. 7 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சகர்&oldid=3576451" இலிருந்து மீள்விக்கப்பட்டது