அறிவொளி
அறிவொளி (Arivoli) தமிழகப் பட்டிமன்ற மேடைகளை தன் வசீகர பேச்சால் ஈர்த்து வந்த தமிழ் அறிஞர் ஆவார். இவர் 1936-ஆம் ஆண்டு சனவரி 21-ஆம் நாள் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே சிக்கல் எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் கரந்தைத் தமிழ்க்கல்லூரியில் தமிழ் படித்தவர். அதன் பிறகு அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியா் பணியாற்றினார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், பூம்புகார் கல்லூரியிலும் பேராசிரியராக பணிபுரிந்தார். பணிக்குப் பிறகு திருச்சியில் குடிபெயர்ந்த அறிவொளி இலக்கியக் கூட்டங்கள் மற்றும் பட்டிமன்றங்களில் உரையாற்றினார். காரைக்குடி கம்பன் கழகத்தின் மூலம் தமிழுக்கு முக்கியப் பங்காற்றினார். குன்றக்குடி அடிகளார், அ. ச. ஞானசம்பந்தன் போன்ற புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களுடன் பேசி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். மேலும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பட்டிமன்றங்களில் பேசியவர். பிறகு பட்டிமன்ற நடுவராக விளங்கினார். 1986-ஆம் ஆண்டு முதல்முறையாக வழக்காடு மன்றம் என்னும் அமைப்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். இவரது திறமையைப் பாராட்டி ஆய்வுரை திலகர், கபிலவாணர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. மேலும் வாழ்நாள் சாதனை விருதும் பெற்றார்.[1]
இவரின் பேச்சுத் தமிழுக்கு தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா, பாரிஸ், குவைத், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் இரசிகர்கள் உண்டு. இலக்கிய மேடைகள் மட்டுமல்லாது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழிலில் பேசுவது மட்டுமல்லாது தமிழில் எழுதுவதிலும் வல்லவரான இவர் 120-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1974-ம் ஆண்டு, 'பாரதிதாசனின் புதிய பார்வை' என்ற தலைப்பில் முதல் நூலை எழுதினார். அண்மையில் எழுதப்பட்ட 103-வது நூலின் பெயர், யோகக் களஞ்சியம், சிவபுராணம் அனுபவ விளக்கம் என்ற நூலும், கம்பராமாயணம் முழுவதையும் நாவல் வடிவில் 1,200 பக்கங்களில் எழுதியுள்ளார்.
இறப்பு
தொகுஉடல் நலக்குறைவு காரணமாக தமது 82-வது அகவையில் திருச்சியில் இறந்தார். [2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆற்றல்மிகு பேச்சாளர் அறிவொளி மறைவு
- ↑ பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி மறைவு
- ↑ "பட்டிமன்றப் புகழ் அறிவொளி மறைந்தார்". நக்கீரன். https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/arivoli. பார்த்த நாள்: 23 June 2024.