அலெசு பிலியாத்சுக்கி

அலெசு விக்தராவிச் பிலியாத்சுக்கி (Ales Viktaravich Bialiatski, பெலருசிய மொழி: Алесь Віктаравіч Бяляцкі, romanized: அலீஸ் விக்தாரவிச் பிலியாத்ஸ்கி; பிறப்பு: 25 செப்டம்பர் 1962) பெலருசிய சனநாயக-சார்பு, மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் வியாசுனா மனித உரிமைகள் மையத்தில் பணியாற்றுகிறார். 2020-ஆம் ஆண்டில், "மாற்று நோபல் பரிசு" என்று பரவலாக அறியப்படும் ரைட் லவ்லிவுட் விருதை இவர் வென்றார். 2020 திசம்பரில், ஐரோப்பிய நாடாளுமன்றம் சாகரவ் பரிசு வழங்கிக் கௌரவித்தது.[1] 2022 இல், இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு, மெமோரியால் (உருசியா), குடிமை உரிமைகளுக்கான மையம் (உக்ரைன்) ஆகிய மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து வழங்கப்பட்டது.[2][3]

அலெசு பெல்யாத்சுக்கி
Ales Bialiatski
Алесь Бяляцкі
2011 இல் பெல்யாத்சுக்கி
தாய்மொழியில் பெயர்Алесь Бяляцкі
பிறப்பு25 செப்டம்பர் 1962 (1962-09-25) (அகவை 62)
வியாத்சில்யா, சோவியத் ஒன்றியம் (இன்று உருசியா)
மற்ற பெயர்கள்
  • அலெசு பியாலாஸ்கி
  • அலெசு பியாலியாத்ஸ்கி
கல்விகோமெல் மாநிலப் பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணியகம்வியாசுனா மனித உரிமை மையம்
வாழ்க்கைத்
துணை
நத்தாலியா பிஞ்சுக்
விருதுகள்

பிலியாத்சுக்கி 2021 சூலை 14 முதல், வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனித உரிமை ஆர்வலர்கள் இக்குற்றச்சாட்டுகள் அரசியல் உந்துதல் சுமத்தப்பட்டது என்று கருதுகின்றனர், அத்துடன் அவர்கள் பிலியாத்சுக்கியை மனசாட்சியின் கைதியாகப் பார்க்கின்றனர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பிலியாத்சுக்கி உருசியாவின் கரேலியாவில் உள்ள வியாத்சீலியா என்ற நகரில் பெலருசியப் பெற்றோருக்கு 1962 இல் பிறந்தார்.[4] 1965 ஆம் ஆண்டில், குடும்பம் பெலருசிற்குத் திரும்பி கோமெல் பிராந்தியத்தின் சுவித்லாகோர்சுக் நகரில் குடியேறியது. பிலியாத்சுக்கி பெலருசிய இலக்கியம்[4] படித்து 1984 இல் கோமெல் பல்கலைக்கழகத்தில் உருசிய, பெலருசிய மொழியியலில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு, இவர் கோமிக் பிராந்தியத்தின் லீசிசி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1985-1986 இல், உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் அருகே கவச வாகன ஓட்டுநராக இராணுவத்தில் பணியாற்றினார்.[5]

செயற்பாட்டாளர்

தொகு

சோவியத் ஒன்றியத்தில்

தொகு

1980களின் முற்பகுதியில், பிலியாத்சுக்கி பல சனநாயக சார்பு முன்முயற்சிகளில் ஈடுபட்டார், இதில் "விடுதலை" என்று அழைக்கப்படும் பெலருசிய இரகசியக் கட்சிக் குழு பெலருசு சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி ஒரு இறையாண்மை மிக்க சனநாயக நாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இக்குழு "புரச்சோக்" என்ற பெயரில் ஒரு சட்டவிரோத பிரசுரத்தை வெளியிட்டு, குறிப்பாக 1987-88 இல் பல சோவியத் எதிர்ப்பு போராட்டங்களை ஒருங்கிணைத்தது. 1987 திசம்பரில் பிலியாத்சுக்கி பெலருசிய சமூகங்களின் 1வது சட்டமன்றத்தின் ஏற்பாட்டுக் குழுவில் இருந்தார்.

பெலருசில்

தொகு

பிலியாத்ஸ்கி பெலருசிய செல்வாக்கு அணி என்ற அமைப்பின் செயலாளராகவும் (1996-1999), அதன் துணைத் தலைவராகவும் (1999-2001) பணியாற்றினார்.[4] 1996 இல் வியாசுனா மனித உரிமைகள் மையத்தைத் தொடங்கினார். தலைநகர் மின்சுக்கை மையமாகக் கொண்ட இவ்வமைப்பு 1999 சூன் மாதத்தில் நாடு தழுவிய தன்னார்வத் தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டது. 2003 இல் உச்சநீதிமன்றம் இவ்வமைப்பின் பதிவை இரத்துச் செய்தது. பிலியாத்சுக்கி சனநாயக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (2000-2004) பேரவையின் பணிக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.[6]

கைது

தொகு

2011 ஆகத்து 4 அன்று அலெசு பிலியாத்ஸ்கி வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, 4½ ஆண்டுகள் சிறைத்தண்டனை உட்பட சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 2014 சூன் 21 அன்று விடுவிக்கப்பட்டார்.[7]

2021 சூலை 14 அன்று, பெலருசியக் காவல்துறையினர் நாடு முழுவதும் வியாசுனா அமைப்பின் பணியாளர்களின் வீடுகளையும், அலுவலகத்தையும் சோதனையிட்டனர். பிலியாத்ஸ்கியும் அவரது இரண்டு சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.[8][9] 2021 அக்டோபர் 6 அன்று, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பிலியாத்ஸ்கிக்கு வழங்கப்பட்டது.[10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Belarusian opposition receives 2020 Sakharov Prize". European Parliament. 16 December 2020. Archived from the original on 24 February 2021. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.
  2. "The Nobel Peace Prize 2022". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  3. "Nobel Peace Prize to activists from Belarus, Russia, Ukraine". Onmanorama (in ஆங்கிலம்). 7 October 2022. Archived from the original on 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  4. 4.0 4.1 4.2 [A. Tamkovich (2014) Contemporary History in Faces. р.165-173. ББК 84 УДК 823 Т 65]
  5. "Nobel Peace Prize: Who is Ales Bialiatski?". BBC News. 7 October 2022. Archived from the original on 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  6. "Члены Координационного Совета". Archived from the original on 20 August 2020. பார்க்கப்பட்ட நாள் 19 August 2020.
  7. "Belarus: Human Rights Defender Freed" (in ஆங்கிலம்). HRW. 23 June 2014. Archived from the original on 8 January 2022. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
  8. Perunovskaya, A. (22 October 2021). "100 дней ареста. О чем пишет Алесь Беляцкий из тюрьмы?" [100 Days in Prison: What Does Ales bialiatski Write from His Cell?]. Deutsche Welle. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
  9. "Belarus: arbitrarily detained for over a month, Viasna's members must be released". FIDH. 20 August 2021. Archived from the original on 8 January 2022. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
  10. Kruope, A. (7 October 2021). "Belarus Authorities 'Purge' Human Rights Defenders" (in ஆங்கிலம்). HRW. Archived from the original on 7 April 2022. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
  11. Arinushkina, A. (1 January 2022). "Почти 1000 человек в Беларуси признаны политзаключенными" [Amost 1000 Political Prisoners in Belarus]. Deutsche Welle. Archived from the original on 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெசு_பிலியாத்சுக்கி&oldid=3532302" இலிருந்து மீள்விக்கப்பட்டது