திருவருகைக் காலம்

(ஆகமன காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவருகைக் காலம் (Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும்.[1]

திருவருகைக் காலம்
திருவருகைக் கால திரியினை ஒரு பீடப்பணியாளர் ஏற்றுகின்றார்
கடைப்பிடிப்போர்கிறித்தவர்கள்
வகைகிறித்தவம்
முக்கியத்துவம்இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு தயாரிப்பு
தொடக்கம்கிறிஸ்துமசுக்கு முன் வரும் நான்கான் ஞாயிறு
2023 இல் நாள்03 திசம்பர்
2024 இல் நாள்01 திசம்பர்
2025 இல் நாள்30 நவம்பர்
2026 இல் நாள்29 நவம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனகிறிஸ்து பிறப்புக் காலம், Christmas Eve, இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, Epiphany, Baptism of the Lord, Nativity Fast, இயேசுவின் பிறப்பு, Yule
தூய ஆவியின் வல்லமையால் மரியா கருத்தரிப்பார் என வானதூதர் கபிரியேல் வாழ்த்துக் கூறுகிறார். ஓவியர்: ஃப்ரா அஞ்சேலிக்கோ (1395-1455). காப்பிடம்: ப்ராதோ கலைக்கூடம், மத்ரித், எசுப்பானியா

திருவருகைக் காலம் என்பது கீழைத் திருச்சபைகளில் (Eastern churches) "கிறிஸ்து பிறப்பு விழா நோன்பு" (Nativity Fast) என்னும் பெயர்கொண்டுள்ளது.

திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கம்

தொகு

கத்தோலிக்க திருச்சபையும் வேறு சில மைய நீரோட்ட கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு முந்திய ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்து அரசர் பெருவிழாவாக கொண்டாடுகின்றன. 2012இல் இவ்விழா நவம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது. அவ்விழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று திருவருகைக் காலம் தொடங்குகிறது. இதுவே கிறித்தவ திருவழிபாட்டு ஆண்டின் முதல் காலம் ஆகும். திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுதான், புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாள் ஆகும்.

பிராங்பேர்ட் ஹோலி கிராஸ் சர்ச் கிரிஸ்துவர் தியானம் மையத்தில் 2500 எரியும் tealights மற்றும் லிம்பர்க் மறைமாவட்ட ஆன்மீகம் செய்யப்பட்ட கிரீட்டிய பாணி அட்வென்ட் பிராங்க்ஃபுர்ட்-Bornheim

திருவருகைக் காலத்தின் கட்டமைப்பு

தொகு
 
திருவருகைக் கால மாலை வழிபாட்டில் தூபம் காட்டுதல்

கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க சபை, லூதரன் சபை, மொராவிய சபை, ப்ரெஸ்பிட்டேரியன் சபை, மெதடிஸ்டு சபை போன்ற மேலைக் கிறித்தவ திருச்சபைகளின் நாள்காட்டிப்படி, திருவருகைக் காலம் கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு (டிசம்பர் 25) நான்கு ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன் தொடங்கும். திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 27இலிருந்து டிசம்பர் 3ஆம் நாள் வரையிலான ஒரு நாளாக இருக்கலாம்.

திருவருகைக் காலம் என்று தமிழிலும் adventus என்று இலத்தீன் மொழியிலும் அழைக்கப்படுகின்ற இக்காலத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல் parousia ஆகும். அது வருகை என்னும் பொருளுடைத்தது. ஆயினும், பொதுவாக parousia என்னும் சொல் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிக்க பயன்படுகிறது.

இவ்வாறு, கிறித்தவர்களுக்குத் திருவருகைக் காலம் என்பது, வரலாற்றில் மனிதராகப் பிறந்த கடவுளின் மகனாகிய இயேசுவின் முதல் வருகையை சிறப்பிக்கவும், உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரவிருக்கின்ற இரண்டாம் வருகையை எதிர்நோக்கவும் தயாரிப்பு செய்கின்ற காலமாக அமைந்துள்ளது.

 
திருவருகைக் காலத்தின் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளைக் குறிக்கும் மெழுகுதிரிகளும் காலச் சுழற்சியைச் சுட்டுகின்ற மலர்வளையமும்

திருவருகைக் கால மரபுகள்

தொகு
 
செர்பியா நாட்டைச் சார்ந்த குழந்தை திருவருகைக் கால மெழுகுதிரியை ஏற்றுதல்

திருவருகைக் காலத்துக்கு உரிய நிறம் ஊதா ஆகும். அக்காலத்தில் நிகழும் திருப்பலிகளின்போது குரு ஊதா நிற தோளுடையும் மேலாடையும் அணிவார். பீடத்தின் மேல்விரிப்பும் நற்கருணைப் பேழையின் முன் திரையும் ஊதாவாக அமைவதுண்டு. மகிழ்ச்சி ஞாயிறாக கொண்டாடப்படும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று ரோசா (இளஞ்சிவப்பு) நிற திருவழிபாட்டு ஆடை பயன்படுத்தப்படுகிறது. அது இயேசு கிறிஸ்துவின் வருகையை முன்னிட்டு திருச்சபை மகிழ்வதைக் குறிக்கும் அடையாளம் ஆகும்.

திருவருகைக் காலத்தின்போது வழிபாட்டில் அறிக்கையிடப்படுகின்ற விவிலிய வாசகங்கள் மூவொரு இறைவனின் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மரியாவின் மகனாகத் தோன்றிய நிகழ்வையும், அவர் உலக முடிவில் நடுவராக வருவிருக்கின்ற நிகழ்வையும் எடுத்துரைக்கின்ற பாடங்கள் ஆகும்.

திருவருகைக் காலத்தைக் குறிக்கும் நான்கு மெழுகுவர்த்திகள், வாரத்திற்கு ஒன்றாக கிறிஸ்தவ ஆலயங்களில் பொதுவாக ஏற்றப்படுகின்றன. இவற்றில் முதல் வாரத்தின் மெழுகுவர்த்தி ஆபிரகாம் உள்ளிட்ட இஸ்ரயேலின் குலமுதுவர்களையும், இரண்டாம் வாரத்தின் மெழுகுவர்த்தி இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த எசாயா உள்ளிட்ட இறைவாக்கினர்களையும், மூன்றாம் வாரத்தின் மெழுகுவர்த்தி, இயேசுவைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவானையும், நான்காம் வாரத்தின் மெழுகுவர்த்தி, இயேசுவின் தாய் மரியா, வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு ஆகியோரையும் நினைவுபடுத்துகிறது.

கிபி 4ஆம் நூற்றாண்டிலிருந்து திருவருகைக் காலம் நோன்புக் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது நோன்பு கடைப்பிடித்தல் தவக் கால முயற்சியாக மட்டும் கருதப்படுகிறது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் விழிப்பையும் குறிக்கின்ற காலமாகப் பொருள்விளக்கம் பெறுகிறது. திருவருகைக் காலத்தின் இறுதி எட்டு நாள்கள் (டிசம்பர் 17-24) தனிச்சிறப்பு வாய்ந்தவை. அப்போது திருச்சபை இயேசுவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதைக் காட்டும் விதத்தில் மன்றாட்டுகள் சொல்லப்படும்.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவருகைக்_காலம்&oldid=4041133" இலிருந்து மீள்விக்கப்பட்டது