திருமுழுக்கு யோவான்
புனித திருமுழுக்கு யோவான் (John the Baptist) (எபிரேயம்: יוחנן המטביל, Yoḥanan ha-mmaṭbil, அரபு மொழி: يوحنا المعمدان Yūhannā al-maʿmadān, அரமேயம்: ܝܘܚܢܢ Yoḥanan)[1] (c. கி.மு. 6 - கி.பி. 28) என்பவர் கிறிஸ்துவின் முன்னோடியாக வந்த இறைவாக்கினரும்,[2] கிறிஸ்தவ சமயத்தில் முக்கிய நபரும்[3] ஆவார். இறைமகன் இயேசுவின் உறவினரான இவர்,[4] யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்து வந்தார்.[5] எனவே மற்ற 'யோவான்'களிடம் இருந்து, இவரைப் பிரித்து அடையாளப்படுத்தும் விதமாக 'திருமுழுக்கு' என்ற அடைமொழி இவரது பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமில் இவர் யஹ்யா என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
புனித திருமுழுக்கு யோவான் | |
---|---|
திருமுழுக்கு யோவான் ஓவியம், வரைந்தவர்: தீசியன், 1542 | |
இறைவாக்கினர், போதகர், கிறிஸ்துவின் முன்னோடி, மறைசாட்சி | |
பிறப்பு | சுமார். கி.மு. 6 |
இறப்பு | கி.பி. 28 எருசலேம் |
ஏற்கும் சபை/சமயங்கள் | கிறித்தவம், இசுலாம் |
முக்கிய திருத்தலங்கள் | புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், எருசலேம் |
திருவிழா | ஜூன் 24 (பிறப்பு), ஆகஸ்ட் 29 (இறப்பு) |
சித்தரிக்கப்படும் வகை | சிலுவை, செம்மறி ஆடு, ஒட்டக முடியாடை |
யோவானின் பிறப்பு
தொகுதிருமுழுக்கு யோவானின் பிறப்பு பற்றிய செய்தி, லூக்கா நற்செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.[6]
ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் செக்கரியா தூபம் காட்டுகிற வேளையில், அங்குத் தோன்றிய வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார்.[7] வானதூதரின் வார்த்தைகளை நம்ப செக்கரியா தயங்கியதால், அவர் யோவான் பிறக்கும் வரை பேச்சற்றவராய் இருப்பார் என்று வானதூதர் கண்டிப்பாக கூறினார். அதன் விளைவாக, செக்கரியா பேச்சற்றவராய் ஆனார்.
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.[8]
குழந்தைப் பருவம்
தொகுதிருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்"[9] என்று இறைவாக்கு உரைத்தார்.
லூக்கா நற்செய்தியின் குறிப்புகள், இயேசுவின் தாய் மரியாவும், யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள்[4] என்று குறிப்பிடுவதால், இயேசுவும் யோவானும் சிறுவயதில் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல கிறிஸ்தவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் இயேசு சாதாரண உடையுடனும், யோவான் ஒட்டக முடியாலான ஆடையுடனும் காணப்படுகின்றனர்.
பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, யோவானின் பெற்றோர் அவரது சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், யோவான் பாலை நிலத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இயேசுவை சுட்டிக்காட்டும் காலம் வரும் வரை, யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார்.[10] தற்கால அறிஞர்கள், பாலைநிலத் துறவிகளாக வாழ்ந்த எஸ்சேனியர்களில் ஒருவராக யோவானும் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இயேசு பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த பாலைவனத் துறவிகள், தனிமையில் கடவுளை தியானித்து வந்ததோடு இஸ்ரயேலரின் மனமாற்றத்துக்கும் அழைப்பு விடுத்தனர். மனமாற்றத்திற்கு அடையாளமாக திருமுழுக்கு பெறும் சடங்கைத் தொடங்கி வைத்தவர்கள் இவர்களே[11] என்று நம்பப்படுகிறது.
போதணைகள்
தொகு"குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்"[12] என்று இறைவாக்கினர் எசாயா யோவானின் பணியைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
இறைவாக்கினர் மலாக்கி "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்"[13] என்று யோவானைப் பற்றி முன்னறிவித்து இருக்கிறார்.
இறைமகன் இயேசுவைச் சுட்டிக்காட்டவே, பாலைநிலத்தில் ஒலிக்கும் குரலாக யோவான் வந்தார்.[14] திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, "பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.[15]
பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார்.[16]
"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை"[17][18] என்று இயேசுவே இவரைப் பற்றி புகழ்ந்து கூறி இருக்கிறார்.
கொடிய மரணம்
தொகுதிருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தவர்களின் நெறிகேடானச் செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார். அவ்வாறே, குறுநில அரசன் ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்ததையும் யோவான் கண்டித்து வந்தார். ஏரோது, ஏரோதியாவின் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதனால் ஏரோதியா யோவான் மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்.
ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று தன்தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.[19]
ஆதாரங்கள்
தொகு- ↑ Wetterau, Bruce. World history. New York: Henry Holt and company. 1994.
- ↑ Cross, F. L. (ed.) (2005) Oxford Dictionary of the Christian Church, 3rd ed. Oxford University Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280290-3, article "John the Baptist, St"
- ↑ Funk, Robert W. & the Jesus Seminar (1998). The Acts of Jesus: the search for the authentic deeds of Jesus. San Francisco: Harper; "John the Baptist" cameo, p. 268
- ↑ 4.0 4.1 லூக்கா 1:36 "உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்."
- ↑ Crossan, John Dominic (1998). The Essential Jesus. Edison: Castle Books; p. 146
- ↑ லூக்கா 1:5-7
- ↑ லூக்கா 1:11-17
- ↑ லூக்கா 1:57-64
- ↑ லூக்கா 1:76-77
- ↑ லூக்கா 1:76-77 'குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.'
- ↑ Harris, Stephen L. (1985) Understanding the Bible. Palo Alto: Mayfield; p. 382
- ↑ எசாயா 40:3
- ↑ மலாக்கி 3:1
- ↑ யோவான் 1:23 "'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே"
- ↑ மாற்கு 1:4-6
- ↑ மத்தேயு 3:7-8,11-12
- ↑ மத்தேயு 11:11
- ↑ லூக்கா 7:28 "மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை."
- ↑ மாற்கு 6:21-29
வெளி இணைப்புகள்
தொகு- Catholic Encyclopedia: St. John the Baptist
- Jewish Encyclopedia: John the Baptist
- Prophet Yahya (John) in the light of Islamic tradition.
- Prophet John (Yahya) பரணிடப்பட்டது 2012-07-10 at the வந்தவழி இயந்திரம்