ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 46ஆவது சிவத்தலமாகும். இத்தலம் மீது சம்பந்தர் பாடிய தேவாரம் இரண்டாம் திருமுறையிலும், கபிலதேவ நாயனார் பாடிய பாடல் பதினொராம் திருமுறையிலும் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி.
தேவாரம் பாடல் பெற்ற திருஆக்கூர் தான்தோன்றீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருஆக்கூர் |
பெயர்: | திருஆக்கூர் தான்தோன்றீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஆக்கூர் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்[1] |
தாயார்: | வாள்நெடுங்கண்ணி, கடக நேத்திரி |
தல விருட்சம்: | சரக்கொன்றை |
தீர்த்தம்: | குமுத தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில் |
வரலாறு | |
அமைத்தவர்: | கோச்செங்கட் சோழன் |
அமைவிடம்
தொகுஇத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. செம்பொனார் கோயிலுக்கு ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.[1] சிறப்புலி நாயனார் அவதரித்த தலம்.[1]
அமைப்பு
தொகுஇராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே பலி பீடம், நந்தியை அடுத்து கருவறை உள்ளது. இடதுபுறம் ஆயிரத்தொருவர் சன்னிதியும், நவக்கிரக சன்னிதியும் உள்ளன. பலிபீடம் நந்தி என்பவற்றைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் இரண்டு பாணலிங்கங்கள், விசாலாட்சி, விசுவநாதர், சிறப்புலிநாயனார், மகாலிங்கம், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பரவையார், சுந்தரர், சங்கிலியார், கணபதி, மகாலிங்கம், பாலமுருகன், அருணகிரிநாதர், மகாலிங்கம், கஜலட்சுமி, கைலாசநாதர், பர்வதவர்த்தினி, வாயுலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, கோச்செங்கட்சோழன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னிதிக்கு வலப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அம்மன் சன்னிதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சரஸ்வதி, வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. சுப்பிரமணியர் சன்னிதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன.
தேவாரப் பாடல்
தொகுதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்:
நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
பொருள்: நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.[2]
தலவரலாறு
தொகு63 நாயன்மார்களிலொருவரும், திரு ஆக்கூரைத் தனது பிறப்பிடமாகக் கொண்டவருமான சிறப்புலி நாயனார் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அறுசுவை உணவு கொடுப்பது வழக்கம். ஒரு சமயம் 1000 அடியார்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 999 அடியார்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என கலங்கி, இறைவனிடம் முறையிட்டார். அப்போது இறைவன் தானே வயதான ஒரு சிவனடியாராக வந்து சிறப்புலி நாயனாரின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தார். இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார்.[3]
இறைவன், இறைவி
தொகுமாடக்கோயில் அமைப்பில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் தான்தோன்றியப்பர்,இறைவி வாள்நெடுங்கண்ணி.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 124
- ↑ "இரண்டாம் திருமுறை". Archived from the original on 2022-03-06. பார்க்கப்பட்ட நாள் 2022-03-06.
- ↑ "சிறப்புலி நாயனார் – ஆயிரத்தில் ஒருவரின் அடியார்". Archived from the original on 2022-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.