ஆண் (மனிதர்)

வாலிப பருவத்தை அடைந்த ஆண்.

ஆண் (ஒலிப்பு) (Man) என்பவன் மனித இனத்தில் வளர்ந்த ஓர் ஆண்பால் உயிரினமாகக் கருதப்படுபவன் ஆவான். பொதுவாக ஆண் என்றாலே நன்கு வளர்ந்த நிலையிலுள்ள ஆண் பாலினமாக அடையாளம் காணப்படுகிறது. சிறுவயது ஆண்பால் மனிதர்களைப் பொதுவாகச் சிறுவன், பையன் போன்ற சொற்களால் குறிப்பிடுவது வழக்கம். வளர்ந்த ஆண்களைக் குறிப்பிடுவதற்கு தமிழ்ப் பேச்சு வழக்கில் ஆம்பளை, ஆம்பிளை போன்ற சொற்களைப் பயன்படுத்துவர்.ஆண் என்னும் சொல், வளர்ந்த ஆண் மனிதர்களை மட்டுமன்றி, பிற ஆண்பால் உயிரினங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மனித இனத்தில் வயது வேறுபாடில்லாமல் எல்லா ஆண்களையும் குறிக்கவும் ஆண் என்ற சொல் பயன்படுகின்றது. ஆணுக்கு உரிய இயல்புகளைப் பொதுவாக ஆண்மை என்னும் சொல்லால் குறிப்பர்.

மைக்கேல் ஏஞ்சலோவின் படைப்பில் ஆதாமின் உருவம்

இவ்வுலகிலுள்ள மற்ற ஆண் பாலூட்டிகளைப் போலவே, ஓர் ஆண் மனிதனின் மரபணு பொதுவாக தாயின் ஒரு எக்சு (X) குரோமசோமையும் அவனது தந்தையிடமிருந்து ஒரு ஒய் (Y) குரோமோசோமையும் மரபுரிமையாகப் பெறுகிறது. ஆண் சிசு ஒரு பெண் சிசுவை விட அதிகமான அளவு ஆண்ட்ரோசன்களையும் குறைவான அளவு ஈசுட்ரோசன்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த பாலின சிடீராய்டுகளின் அளவுகளில் காணப்படும் இந்த வேறுபாடுதான் ஆண், பெண் என வேறுபடுத்துகின்ற உடலியல் வேறுபாடுகளுக்கு மிகவும் பொறுப்பானதாக உள்ளது. பருவமடைதல் நிகழ்வின்போது ஆண் உடலில் சுரக்கும் இயக்குநீர்கள் ஆண்ட்ரோசன் உற்பத்தியை தூண்டுகின்றன. இதனால் இரண்டாம் நிலை பாலியல் பண்புகளின் வளர்ச்சிகள் தோன்றுகின்றன. தொடர்ந்து பாலினங்களுக்கு இடையில் அதிக வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. எனினும் விதிவிலக்காக சில மூன்றாம் பாலின ஆண்கள், இருபாலின ஆண்கள் போன்ற ஆண்களும் உருவாகி விடுகின்றனர்.

சொற்பிறப்பியல்

தொகு

ஆண் என்ற பொருள் கொண்ட ஆங்கிலச் சொல்லான "man" என்ற சொல் புரோட்டோ-இந்தோ -ஐரோப்பிய வேர்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும்[1]. பழைய ஆங்கில மொழியிலிருந்து நேரிடையாக தருவிக்கப்பட்டுள்ளது. பழைய ஆங்கிலத்தில் வளர்ந்த ஆண் என்பதைக் குறிக்கும் சொல்லாகவே "man" என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. பாலினம் அறியப்படாத ஒருவனைக் குறிக்கவும் இதே சொல்லே பழைய ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டது. பழைய ஆங்கிலப் பிரதிப்பெயரான "man" நெருங்கிய தொடர்புடைய நவீன செருமன் மொழியில் "ஒருவன்” என்ற பொருள் கொண்ட "one" என அடையாளம் பெறுகிறது.[2]. புரோட்டோ செருமானிய மொழிகளிலிருந்து மனித இனம், நபர், கணவன், ஒருவன் என்ற பொருள்களுடன் பழைய ஆங்கில மொழிக்கு இச்சொல் வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. செருமானிய தொன்ம பழங்குடியினர் புராணத்தில் மானுசு என்று அழைக்கப்பட்டதாக ரோமானிய வரலாற்றாளர் டாசிடசு கூறுகிறார். இந்தோ-ஐரோப்பிய புராணங்களிலும் முதல் மனிதர் மனு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதும் பெயர்களும்

தொகு

சிறுவன் என்ற நிலையை கடந்து பருவமடைதல் மூலம் மனித வாழ்க்கையில் ஆண் எட்டும் அடுத்தக் கட்ட வளர்ச்சி நிலையே ஆண் பருவம் எனப்படுகிறது. இக்கால கட்டத்தில் ஆணுக்கு இரண்டாம் நிலை பாலின நடத்தைகள், வளர்ச்சிகள் தோன்றுகின்றன. இதையே ஆண் வயதுக்கு வருதல் அல்லது பருவமடைதல் என்கிறார்கள். இத்தகைய பருவநிலையை அடைந்த முதியோர் எவரையும் ஆண் என்ற சொல் குறிக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் கைய், டியூடு, பட்டி, புளோக், ஃபெல்லோ, சாப், பாய், அல்லது லேடு என பல பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆணின் பருவநிலையுடன் ஆணின் குணங்களாக ஆண்மையும் வீரமும் தொடர்புபடுத்தப்படுகின்றன.

உயிரியலும் பாலியலும்

தொகு

மனிதர்களில் பால் அடிப்படையிலான பலவகையான ஈருருவத் தோற்ற இயல்புகள் காணப்படுகின்றன. இவற்றுள் பல நேரடியாக இனப்பெருக்கத் தேவைகளுடன் தொடர்பு கொண்டவையாக இல்லாவிட்டாலும், பாலியல் இனக்கவர்ச்சிக்கு உதவுகின்றன எனலாம். மனிதர்களில் பாலியல் ஈருருத்தோற்றத்தின் வெளிப்பாடுகள் பெரும்பாலும், உயரம், நிறை, உடற்கட்டு போன்றவற்றைச் சார்ந்தனவாக உள்ளன. இவ்வெளிப்பாடுகள் யாவும் உதாரணங்களே என்றாலும் மிகவும் பொதுமைப் படுத்தப்பட்ட இக்கூற்று எல்லா வேளைகளிலும் பொருந்தும் என்று கூறவியலாது. எடுத்துக்காட்டாக, ஆண்கள் பொதுவாகப் பெண்களை விட உயரமானவர்கள் எனக் கருதினால் எல்லா ஆண்களும் பெண்களை விட உயரமானவர்களாக இல்லை என்பதை காணமுடிகிறது.

 
பருவமடைந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணின் புகைப்படம் ஒப்பீட்டிற்காகத் தரப்பட்டுள்ளது. இரண்டு மாதிரிகளிலும் ஓரளவிற்கு உடலில் இருந்த முடி அகற்றப்பட்டுள்ளது

.

பால் உறுப்புகளின் வளர்ச்சியில் பூப்படைதல் என்பது ஒரு வளர்ச்சி நிலையாகும். ஆண் பூப்படைந்தவுடன் அவனுடைய இரண்டு விந்துச் சுரப்பிகளிலும் தொடர்ந்து விந்துச் செல்கள் உற்பத்தியாகின்றன. ஆண்பால் ஆர்மோனாகிய டெசுடோசிடரானின் உற்பத்தி தூண்டப்படும். சுரக்கும் அளவும் அதிகரிக்கும். மனித இனத்தில் சிறுவனாயிருந்து ஒருவன் பருவமடைந்து வாழ்க்கையில் ஆண் என்ற நிலையில் அடியெடுத்து வைக்கும்போது அவனிடத்தில் தோன்றுகின்ற இரண்டாம் நிலை பாலின வளர்ச்சிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.

  • மறைவிடங்களில் முடி வளர்தல்.
  • முகத்தில் தாடி, மீசை வளர்தல்.
  • பெரிய கைகள் மற்றும் பாதங்கள்,
  • விரிந்த தோள்களும், மார்பும்.
  • பெரிய மண்டையோடும் எலும்பு அமைப்பும்.
  • மூளை வளர்ச்சியும் முதிர்ச்சியும்
  • கனமான குரல்,
  • தசைநார்களின் திரட்சி
  • அதிக உயரம்

பாலினச் செயற்பாடுகள்

தொகு
 
லியானோர்டோ டாவின்சி வரைந்த ஒரு மனிதனின் ஓவியம் அவனுடைய விகிதசமத்தைக் காட்டுகிறது.[3]

மனித இனத்தின் உயிரினத் தொகையினை இனப்பெருக்கம் மூலம் தற்காத்துக் கொள்ள ஆண் ஒரு முக்கியமான காரணியாகிறான். ஆண் இனப்பெருக்கச் செல்களால் பால் முறை இனப்பெருக்கம் நிகழ்கிறது. மனித இனத்தில் பொதுவாக கருவுறுதலின்போது விந்தணு கொண்டு செல்லும் மரபியல் பொருள் மூலம் பால் வகை தீர்மானிக்கப்படுகிறது. ஒரு விந்தணு எக்சு (X) குரோமோசோம்களுடன் சென்று பெண்ணின் கரு முட்டையை கருத்தரிக்கச் செய்தால் உருவாகும் சந்ததி பெரும்பாலும் பெண் குழந்தையாக (XX) இருக்கும். ஒருவேளை விந்தணு ஒய் (Y) குரோமோசோம்களுடன் சென்று பெண்ணின் கரு முட்டையை கருத்தரிக்கச் செய்தால் உருவாகும் சந்ததி பெரும்பாலும் ஆண் குழந்தையாக (XY) இருக்கும். தனிநபர்களின் உடலமைப்பு அல்லது குரோமோசோம் உருவாக்கம் இந்த வகைகளிலிருந்து வித்தியாசப்படும்.

இம்முறை XY பாலியல்-நிர்ணயிப்பு முறை என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு இம்முறை பொதுவானதாக உள்ளது, இதைத்தவிர மரபணு சாராத வகை உள்ளிட்ட பிற பாலியல்-நிர்ணய முறைகள் சிலவும் உள்ளன,

மூளையின் ஐப்போதாலமசு, முன் பிட்யூட்டரி, விந்துச் சுரப்பி ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. டெசுடிரோசிடிரோன் விந்துச் சுரப்பி நாளங்களில் நுழைந்து விந்துச் சுரப்பைய் கட்டுப்படுத்தலாம். இன உறுப்புகளில், இனப்பெருக்க உட்சுரப்பி செய்யும் உற்பத்தி முதனிலை பாலியல் செயற்பாடாகக் கருதப்படுகிறது. பெண்களில் அண்டம் கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்தகம் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. விந்தணுவையும் கருமுட்டையையும் ஒருங்கிணைப்பதில் மறைமுகமாக நிகழும் அனைத்து செயல்பாடுகளும் இரண்டாம் நிலை பாலியல் நடத்தைகளாகும். பிறப்பு மற்றும் பாலின உறுப்புகளின் தோற்றம், ஆண் தோற்றம், மனிதர்களின் முகத்தில் முடிகள் தோன்றுதல், காதல் போன்ற நடத்தைகளில் நாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளும் இரண்டாம்நிலை பாலின செயல்பாடுகளின் சிறப்பு அம்சங்களாகும்.

பாலினம்

தொகு

ஒரு நபர் தன்னை ஆணாக கருதுகிறாரா அல்லது அவர் ஆணாக கருதப்படுகிறாரா என்பதைப் பற்றி உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் காரணிகள் போதுமானதாக இல்லை. உடல் அல்லது மரபணு அம்சங்களில் ஒரு பாலினமாக அல்லது பிறழ்ந்து கலவையான பாலினமாகத் தோற்றம் கொண்டவர்களும் உண்டு. இவர்களில் திருநம்பி என்போர் திருநர்களில் ஒரு வகையாகும். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர். திருநங்கைகளைப் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. திருநங்கைகள் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்குத் திருநம்பிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை [4].

இனப்பெருக்கத் தொகுதி

தொகு
 
மனித இனத்தின் ஆண் இனப்பெருக்கத்தொகுதியும் சூழலும்

ஆணுக்குரிய பாலுறுப்புக்கள் யாவும் இனப்பெருக்கத் தொகுதியின் பகுதிகள் ஆகும். இவற்றுள், ஆணுறுப்பு, விதைகள், விந்துக் குழாய், விந்துச் சுரப்பி உள்ளிட்டவை அடங்குகின்றன. ஆண் இனப்பெருக்க உறுப்புக்களின் முக்கியப் பணியை விந்துச் சுரப்பிகள் நிறைவேற்றுகின்றன. ஓர் ஆண் இனப்பெருக்க முதிர்ச்சியடைந்தவுடன் அவரது விந்துச்சுரப்பியில் தொடர்ந்து விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. விந்தணு எனப்படும் ஆண் இனப்பெருக்கச் செல்கள் இவ்வாறு உண்டாகி பெண்ணின் கருமுட்டையுடன் கஒருங்கிணைந்து கருவாகிக் குழந்தையாக வளர்கிறது. கரு வளர்ச்சிக் காலத்தில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது. பிட்யூட்டரி சுரப்பி விந்துச் செல் உற்பத்தியை தூண்டிவிடவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. மனிதச் சமூகத்தில் தந்தை மற்றும் குடும்பம் என்ற கருத்து பின்பற்றப்படுகிறது. ஆண் இனப்பெருக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்புகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது ஆண்மையியல் எனப்படுகிறது.

பாலின ஆர்மோன்கள்

தொகு

ஆணின் இனப்பெருக்கச் செயல்கள் பல ஆர்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பாலூட்டிகளில் ஆர்மோன்கள் இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டிவிடும். விந்துச் சுரப்பி விந்துச் செல்களையும் டெசுடோசிடிரான் ஆர்மோனையும் உற்பத்தி செய்கிறது. டெசுடோசிடிரான் பிற ஆண் இனப்பெருக்கச் செயல்களைக் கட்டுப்படுத்துவதோடு இரண்டாம்நிலை பாலினப்பண்புகளையும் தோற்றுவிக்கிறது. குரல் மாற்றம், முடி வளர்ச்சி மற்றும் இதர பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன.

பல சுரப்பிகளால் சுரக்கப்பட்டு அடர்த்தியான திரவப்பொருளாக விந்து திரவம் சுரக்கப்படுகிறது. விந்துத் திரவம் வெண்மை நிறக் கோழைப் பொருளாகக் காணப்படும். இதற்கு செமினல் பிளசுமா என்று பெயர். இப்பொருளும் விந்துப்பை, புராசிடேட்டு சுரப்பி போன்ற பல சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது. விந்துத் திரவம் விந்து செல்களுக்கு உணவளிக்கவும் நீந்தி செல்லும் ஊடகமாகவும் பயன்படுகிறது.

ஆண்மை

தொகு
 
ஆண்மையைச் சுட்டும் மைக்கலேஞ்சலோவின் மேற்கத்திய ஓவியம்
 
ஒரு செருமானிய ஆனழகனின் கட்டுமசுத்தான உடலமைப்பு ஆண்மைக்கு எடுத்துக்காட்டாய் காட்டப்பட்டுள்ளது

ஆண்மைக்கான வேர்கள் மரபணுக்களில் இருந்து தோன்றுகிறது [5][6].

ஆகவே பல்வேறு கலாச்சாரங்களில் ஆண்மை என்பதை பல்வேறு கோனங்களில் பார்த்தாலும் அனைத்துக் கலாச்சாரத்தின் ஆண்மை குறித்த வரையறையில் சில பொதுவான அம்சங்கள் உள்ளன [7]. சில சமயங்களில் பாலின அறிஞர்கள் ஆணுறுப்பின் மிகுந்த ஆளுமை வாய்ந்த வடிவத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கான சொற்றொடராக இச்சொல்லை பயன்படுத்துகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் யான் வெய்ன் என்பவரை ஒரு விதமான ஆணாகவும், அதே நேரத்தில் ஆல்பர்ட் ஐன்சுடீனை மற்றொரு விதமான ஆணாகவும் கருதியதாகக் குறிப்பிடுவர்.

செல்வம், இனம் மற்றும் சமூக வர்க்கம் போன்றவற்றைப் போலவே ஆண்மைக்கும் சமூக மதிப்பு உள்ளது என்று மானுடவியல் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக மேற்கத்திய கலாச்சாரத்தில், அதிக ஆண்மையுள்ளவருக்கு பொதுவாக அதிக சமூக நிலைமை கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே வீரம் மற்றும் வீரியம் போன்ற சொற்கள் பிறந்தன. உடல் வலிமையும் மனவலிமையும் ஆண்மையுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் பருவமடைந்த ஆண்களுக்கே ஆண்மை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இனப்பெருக்கச் செயல்பாட்டினை பெண்களை விட ஆண்கள் நீண்ட நாட்கள் வழங்கிட இயலும். ஆண்மையின் பண்புகளை மேம்படுத்துவது தொடர்பாக தற்காலத்தில் பெரிய ஒப்பந்தங்கள் அறியப்படுகின்றன. குரோமோசோமில் உள்ள எக்சு, ஒய் மரபணுக்களின் இயல்புநிலைகள் ஆராயப்படுகின்றன. ஆரோக்கியமான இனப்பெருக்க உறுப்புகள், ஆர்மோன்கள் உற்பத்தி ஆகியவற்றையும் மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரத்தில் மனிதர்களின் குழுக்களில் ஆண்கள் பலவிதமான சமூக மற்றும் கலாச்சார பாத்திரங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. வேட்டையாடும் கூட்டாளிகளாகவும் அனைத்து பெரிய விளையாட்டுகளிலும் போர் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஆண்கள் பெரும் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. வரலாறு முழுமைக்கும் ஆண்களுக்கான கடமைகள் அவ்வப்போது மாறி வந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. American Heritage Dictionary, Appendix I: Indo-European Roots. man-1 பரணிடப்பட்டது 19 மே 2006 at the வந்தவழி இயந்திரம். Accessed 2007-07-22.
  2. John Richard Clark Hall: A Concise Anglo-Saxon Dictionary
  3. The Vitruvian man
  4. Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781500380939. இணையக் கணினி நூலக மைய எண் 703235508.
  5. John Money, 'The concept of gender identity disorder in childhood and adolescence after 39 years', Journal of Sex and Marital Therapy 20 (1994): 163-77.
  6. Laura Stanton and Brenna Maloney, 'The Perception of Pain', Washington Post, 19 December 2006.
  7. Donald Brown, Human Universals

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்_(மனிதர்)&oldid=3824706" இலிருந்து மீள்விக்கப்பட்டது