ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை மாநில எல்லைகள் மாற்ற சட்டம்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை மாநில எல்லைகள் மாற்ற சட்டத்திருத்தம் (Andhra Pradesh and Madras Alteration of Boundaries Act), என்பது இந்திய அரசியல் சாசனத்தின், ஆர்டிகல் 3 இல் இந்திய பாராளுமன்றத்தில் 1959 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இது 1960 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தின் திருத்தணி வட்டம் மற்றும் பள்ளிப்பட்டு துணை வட்டம் ஆகியவை சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இதற்கு மாற்றாக செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டப் பகுதிகள் வழங்கப்பட்டன.[1][2]
சித்தூர் மாவட்டத்தின் மூன்று வெவ்வேறு வட்டங்களில் இருந்த 319 கிராமங்கள் மற்றும் ஒரு சிறிய காட்டுப் பகுதி ஆகியவை ஆந்திராவில் இருந்து சென்னை மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஈடாக தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த 148 கிராமங்கள் மற்றும் அப்போதைய சேலம் மாவட்டத்தில் இருந்த மூன்று கிராமங்கள் மற்றும் சில காட்டுப் பகுதிகள் ஆந்திராவுக்கு தரப்பட்டன.
ஆந்திராவில் இருந்த சித்தூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சென்னையில் இருந்த செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிகளின் பிரதேசங்களில் கணிசமான அளவு நடந்த இந்த பரிமாற்றத்தால் எல்லைகள் மாற்றமடைந்தன. ஆந்திர மாநிலத்தில் இருந்த திருத்தணி மற்றும் ராமக்கிருஷ்ணராஜுபேட்டை சட்டமன்றத் தொகுதிகளின் பெரும் பகுதிகள் சென்னை மாநிலத்துக்கு மாற்றப்பட்டு ஈடாக சென்னை மாநிலத்தின் ஒரு வட்டத்திலிருந்து சத்யவேடு, இரண்டு தொகுதிகளில் (ஒரு இரட்டை உறுப்பினர் மற்றும் மற்றொரு ஒற்றை உறுப்பினர் ) இருந்து சிறிய பகுதிகள் ஆந்திராவுக்கு மாற்றப்பட்டன. இதன் விளைவாக, ஆந்திர சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 301 இல் இருந்து. 300 ஆக குறைந்தது அதேசமயம், சென்னை சட்டமன்றத்தில் 205 இருந்து 206 ஆக ஒரு தொகுதி அதிகரித்தது. சென்னை மாநிலம் திருத்தணி என்ற புதிய சட்டமன்றத் தொகுதியை பெற்றது மற்றும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன.[3]