ஆனாய நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'இடையர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார்.

“அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்” – திருத்தொண்டத் தொகை

ஆனாய நாயனார்
ஆனாயநாயனார் விக்கிரகம்
பெயர்:ஆனாய நாயனார்
குலம்:இடையர்
பூசை நாள்:கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம்:திருமங்கலம்
முக்தித் தலம்:திருமங்கலம்

ஆனாய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1][2]


சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்து வருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு [3], விடைக்குலம் [4] என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.

இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி [5] செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழப் பசுக்காக்கச் சென்றார். சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டிருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றிற்று. தோன்றவே அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார், நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்த வைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.

மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்தணைந்தன (வந்து சேர்ந்தன). ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர். பாதலத்தின் நாகர்கள் மலையில் வாழ் அரசமகளிர், விஞ்சையர், கின்னரர் முதலிய தேவகணங்கள் – தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின் வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களின்றும் வந்து அணைந்தனர். நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால் பாம்பும், மயிலும், சிங்கமும், யானையும், புலியும் மானும் என்றித் திறத்தனவாகிய உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.

ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.

நுண்பொருள் தொகு

  1. பூச்சொரியும் கொன்றை சிவ நினைவைப் பெருகுவது.
  2. ஐந்தெழுத்துள் அனைத்தும் அடக்கம். ஆதலால் ஐந்தெழுத்து இசையமுதம், நிற்பனவும் இயங்குவனமுமான சராசரங்களை எல்லாம் தன்வயப்படுத்த வல்லது.
  3. ஐந்தெழுத்து மந்திரத்தை வேய்ங்குழலில் இசைத்தல் இசை விரும்பும் இறைவர்க்கு உகப்பானது.
முன்னின்ற மழ விடைமேல் முதல்வனார் எப்பொழுதும்
சென்னின்ற மனப்பெரியோர் திருக்குழல் வாசனை கேட்க
இந்நின்ற நிலையேநம் பாலணைவாய் என அவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார் ஐயர்திரு மங்கணைந்தார் - பெரியபுராணம்

கார்த்திகை அத்தம் குருபூசை அன்றைய நாளில் இறைவனுக்குக் கொன்றைப் பூச் சூட்டுதலும் ஐந்தெழுத்துத் திருப்பதிகங்களை ஓதுவதும் அவற்றை வேய்ங்குழலில் இசைத்துப் பாடுவதும் அழகிதாம்.

மேற்கோள்கள் தொகு

  1. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (20 ஜனவரி 2011). ஆனாய நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1391. 
  2. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 
  3. புனிற்றுப்பசு: அண்மையில் கன்று ஈன்ற பசு
  4. விடைக்குலம்: நாம்பன் மாடு
  5. கண்ணி: விரியாத பூ - மொட்டு
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனாய_நாயனார்&oldid=3395135" இருந்து மீள்விக்கப்பட்டது