ஆன்றணி படியற

கர்தினால் ஆன்றணி படியற (Antony Cardinal Padiyara) (பிறப்பு: பெப்ருவரி 11, 1921 - இறப்பு: மார்ச்சு 23, 2000) என்பவர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த ஒரு இந்திய கர்தினால் ஆவார்.[1] இவர் இந்திய கத்தோலிக்க திருச்சபையில் நிலவுகின்ற சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சபையின் உயர் பேராயராகப் பணிபுரிந்து அதன் தலைமைப் பதவியை வகித்தார்.[2] அச்சபையினர் இவரை மார் ஆன்றணி படியற என அழைப்பர்.

மேதகு (மார்)

ஆன்றணி படியற
Antony Padiyara
எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் சபைத் தலைமைப் பேராயர்; அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் கர்தினால்-குரு
சபைகத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை
உயர் மறைமாவட்டம்எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலம்
முன்னிருந்தவர்கர்தினால் ஜோசப் பாறேக்காட்டில்
பின்வந்தவர்கர்தினால் வர்க்கி விதயத்தில்
பிற பதவிகள்- உதகை ஆயர் (1955-1970)
சங்கனாச்சேரி சீரோ-மலபார் உயர்மறைமாவட்டப் பேராயர் (1970-1985)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுதிசம்பர் 19, 1945
ஆயர்நிலை திருப்பொழிவுசூலை 3, 1955
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுசூன் 28, 1988
கர்தினால் குழாம் அணிசீரோ-மலபார் சபைத் தலைமைப் பேராயர்; அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் கர்தினால்-குரு
பிற தகவல்கள்
இயற்பெயர்ஆன்றணி
பிறப்பு(1921-02-11)11 பெப்ரவரி 1921
மணிமலை, எர்ணாகுளம், கேரளம்
இறப்புமார்ச்சு 23, 2000(2000-03-23) (அகவை 79)
காக்கநாடு, கேரளம், இந்தியா
கல்லறைபுனித மரியா பேராலயம், எர்ணாகுளம் உயர்மறைமாவட்டம்
குடியுரிமைஇந்தியன்
சமயம்கத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை
குறிக்கோளுரைServire et Laetitia
"பணிசெய்தலும் மகிழ்ச்சியும்"

இவர் 1955-1970 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உதகை மறைமாவட்டத்தின் ஆயராகவும், 1970-1985 ஆண்டுகளில் சீரோ-மலபார் சபையின் சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் பணியாற்றினார்.[3]

பின்னர், 1985-1996 ஆண்டுகளில் எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும், சீரோ-மலபார் சபையின் தலைமைப் பேராயராகவும் பணிபுரிந்தார்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இவருக்கு 1988இல் கர்தினால் பட்டம் வழங்கினார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

ஆன்றணி படியற கேரளத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தைச் சார்ந்த மணிமலை என்னும் ஊரில் 1921, பெப்ருவரி 11ஆம் நாள் பிறந்தார். பெங்களூர் புனித பேதுரு குருத்துவக் கல்லூரியில் மெய்யியலும். இறையியலும் பயின்றார்.

குருப்பட்டம்

தொகு

படியற 1945, திசம்பர் 19ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இலத்தீன் வழிபாட்டுமுறை சார்ந்த கோயம்பத்தூர் மறைமாவட்டத்தில் குருவாகச் சட்டமுறை இணைப்புப் பெற்றார். அந்த மறைமாவட்டத்தில் பெரிய கொடிவேரி, கொல்லேகல், ஊட்டி ஆகிய இடங்களில் 1952 வரை குருத்துவப் பணி புரிந்தார்.

உதகை மறைமாவட்ட இளம் குருத்துவக் கல்லூரியின் தலைவராக 1952இல் நியமிக்கப்பட்டார். 1954இல் புனித பேதுரு குருத்துவக் கல்லூரியில் பேராசிரியரானார்.

ஆயர் பட்டம்

தொகு

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1955 சூலை 3ஆம் நாளில் ஆன்றணி படியறயை உதகை மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்தார். அவருக்கு அதே ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் ஆயர் திருப்பொழிவு வழங்கியவர் ஆயர் ரெனே ழான்-பப்தீஸ்த்-ஜெர்மேன் ஃப்யூகா ஆவார். திருப்பொழிவுச் சடங்கின் போது ஆயர் பிரான்சிஸ் முத்தப்பா மற்றும் பேராயர் மேத்யூ காவுக்காட்டு ஆகியோர் துணைநின்றனர்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்கேற்பு

தொகு

ஆயர் படியற 1962-1965இல் நிகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் நான்கு அமர்வுகளிலும் கலந்துகொண்டார்.

பிற பதவிகள்

தொகு

பின்னர் ஆயர் படியற இலத்தீன் வழிபாட்டுமுறையிலிருந்து சீரோ-மலபார் வழிபாட்டுமுறைக்குத் திரும்பிச் சென்றார். 1970, சூன் 14ஆம் நாள் அவரை திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமித்தார்.

பேராயர் படியற இந்திய ஆயர் பேரவையின் துணைத்தலைவராக 1976இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1983இல் கேரள கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரானார். 1984இல் சீரோ-மலபார் ஆயர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீரோ-மலபார் சபை ஆய்வாளராக நியமனம்

தொகு

1978ஆம் ஆண்டில் சுமார் ஒரு மாதம் மட்டுமே திருத்தந்தையாக ஆட்சிசெய்த முதலாம் யோவான் பவுல் பேராயர் ஆன்றணி படியறவிடம் ஒரு சிறப்புப் பணியை 1978 செப்டம்பர் 8ஆம் நாள் ஒப்படைத்தார். சீரோ-மலபார் திருச்சபையின் நிலை பற்றி விரிவாக ஆய்ந்து, திருத்தந்தையிடம் ஓர் அறிக்கை ஒப்படைக்க படியற கேட்டுக்கொள்ளப்பட்டார்.

எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்ட ஆயர்

தொகு

பேராயர் ஆன்றணி படியற 1985, ஏப்பிரல் 23ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார்.

கர்தினால் பதவி

தொகு

1988, சூன் 28ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பேராயர் ஆன்றணி படியறயை கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். அப்போது அவருக்கு அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் கர்தினால்-குரு என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.

சீரோ-மலபார் சபையின் தலைமை ஆயராக நியமனம்

தொகு

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1992, திசம்பர் 16ஆம் நாள் எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தை பெருநிலை உயர்மறைமாவட்டமாக (major archdiocese) உயர்த்தினார். அவ்வமயம் பேராயர் படியறைக்கு "தலைமைப் பேராயர்" (major archbishop) என்னும் பதவி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் சீரோ-மலபார் திருச்சபையின் உயர்பெரும் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இருப்பினும், அவ்வமயம் தலைமைப் பேராயரின் நடைமுறை அதிகாரத்தைத் தலைமைப் பேராயர் ஆபிரகாம் காட்டுமன என்பவர் கொண்டிருக்கும் வகையில் திருச்சபையின் தலைமைப் பீடம் ஏற்பாடு செய்திருந்தது. பேராயர் காட்டுமன 1992-1995 ஆண்டுகளில் திருத்தந்தையின் பதிலாளாக இருந்து அப்பணியை ஆற்றினார்.

உரோமைத் தலைமையகத்தில் பொறுப்புகள்

தொகு

கர்தினால் படியற கீழைத் திருச்சபைகள் பேராயத்திலும், கீழைத் திருச்சபைச் சட்ட சீர்திருத்தக் குழுவிலும் உறுப்பினராகச் செயல்பட்டார்.

பணித் துறப்பும் இறப்பும்

தொகு

75 வயது நிறைந்ததும் கர்தினால் படியற ஆயர் பதவியிலிருந்து 1996 நவம்பர் 11ஆம் நாள் ஓய்வுபெற்றார். இறுதி நாள்களில் பார்க்கின்சன் நோய்வாய்ப்பட்ட கர்தினால் படியற காக்கநாட்டில் அவரே நிறுவியிருந்த "கர்தினால் படியற இயற்கை மருத்துவநல மையத்தில்" 2000, மார்ச்சு 23ஆம் நாள் உயிர்துறந்தார்.

அவர் எர்ணாகுளம் உயர்மறைமாவட்ட முதன்மைக் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.

பத்மசிறீ விருது

தொகு

கர்தினால் ஆன்றணி படியற நாட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 1998ஆம் ஆண்டில் அவருக்குப் பத்மசிறீ விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

ஆதாரங்கள்

தொகு
முன்னர்
மறைமாவட்டம் நிறுவப்பட்டது
உதகை மறைமாவட்டம்
1955–-1970
பின்னர்
பாக்கியம் ஆரோக்கியசாமி
முன்னர்
மேத்யூ காவுக்காட்
சீரோ-மலபார் சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டம்
1970–-1985
பின்னர்
ஜோசப் பௌவத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்றணி_படியற&oldid=2211997" இலிருந்து மீள்விக்கப்பட்டது