ஆய்த எழுத்து

247 தமிழ் எழுத்துக்களில், சார்பெழுத்தான ஆய்த எழுத்து ( ஃ ).
(ஆயுத எழுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இதே பெயருடைய திரைப்படம் பற்றி அறிய ஆய்த எழுத்து (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.

ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

ஆய்த எழுத்து () என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.[1]

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எடுத்துக்காட்டு

  • அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
  • இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

ஆய்தம் என்னும் சொல்

தொகு
ஃ என்னும் எழுத்தின் தமிழ் சைகை காணொளி

ஆய்தம் என்பது பெயர்ச்சொல். ஆய்தல் என்பது வினைச்சொல். ஆய்வுரை நுணுகிப் பார்ப்பது. ஆய்தல் என்னும் உரிச்சொல் இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2] இதனால் ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட நிற்பதைக் காணமுடிகிறது.

வரலாறும் இலக்கணமும்

தொகு

உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றிய பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது.

"அ" என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. "அ" என எழுதினால் அது வரிவடிவ எழுத்து.

காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.

உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது.

இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.

ஓசையின் அடிப்படையில் அஃகேனம் எனப் பெயர் பெற்றுள்ளது.

வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு.

பத்துவகைச் சார்பெழுத்துகளில் 2 ஆய்த எழுத்து பற்றியதாகும். அதில் ஒன்று முற்றாய்தம் (தன்னரை மாத்திரையை முழுமையாகப் பெற்று ஒலிப்பது) மற்றொன்று ஆய்தக்குறுக்கம் (தன் மாத்திரை அளவிலிருந்து பாதியாகக் குறைந்து ஒழிப்பது) ஆகும்.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும்.

கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகிச் சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும்.

ஆய்தம் என்பது பொதுவாகக் கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது.

போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது.

போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.

தொல்காப்பியம்

தொகு
எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.[3][4]

ஆயுதம்

தொகு
ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன. (சங்கநூல் சொல்லடைவு 1967) சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது சாலாது.

ஆய்த எழுத்து - விளக்கம்

தொகு
(ஃ) – அடைப்புக்குறிக்குள் உள்ள இந்த எழுத்தை ஆய்தம் என்னும் பெயரால் குறிப்பிடுவது வழக்கம்.
தொல்காப்பியர் இந்த ஆய்த எழுத்து சார்பெழுத்தின்பாற்பட்டது எனக் குறிப்பிடுகிறார்.
அஃகான் என்னும் பெயரிட்டு இதனை முன்னோர் வழங்கிவந்தனர். தொல்காப்பியரும் அவ்வாறே இதனை வழங்குகிறார். நன்னூல் அஃகேனம் என்னும் பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது. தனிநிலை என்னும் சொல்லாலும் இதனைக் குறிப்பிடுகிறது.
தமிழ் எழுத்துகளை ஆனா(அ), ஆவன்னா(ஆ) … எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்துவந்தது. இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர்.

ஆய்தம் = ஒலி நுணுக்கம்

தொகு
தமிழில் ஆய்த எழுத்து வல்லெழுத்து ஒலியை நுணுக்கம் செய்யப் பயன்படுத்தப்படும்.
“ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது தொல்காப்பியம் (உரியியல்) ஆய்தல் என்னும் சொல் நுணுக்கமாக நோக்கும் ஆராச்ச்சியைக் குறிக்க இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். வலிமையான கற்களை நுணுக்கி மென்மையாக்கிக் கொள்வது போல ஆய்த எழுத்துகளை ஊர்ந்து வரும் வல்லின எழுத்துகளை நுண்மையாக்கிக் காட்ட இந்த ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண்கிறோம்.

முற்றாய்தம்

தொகு
எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது.
  • எஃகு = வேல், கஃசு = தொடி, கஃசு என்பன நிறுத்தலளவைக் குறியீடுகள், கஃடு = கள், பஃது = பத்து [5], பஃறி = கட்டுமரம்
  • உயிரோடு புணரும்போது ஆய்த எழுத்து தோன்றுதல் உண்டு.[6]

ஆய்தக் குறுக்கம்

தொகு
(கல்+தீது) கஃறீது, (முள்+தீது) முஃடீது, (அவ்+கடிய) அஃகடிய –எனப் புணர்ச்சியில் வரும் ஆய்தவெழுத்து ஆய்தக் குறுக்கம்.

வடமொழி ஒலி ஒப்பீடு

தொகு
சமற்கிருதத்தில் (வடமொழியில்) இந்த ஒலியெழுத்தை அஹ என ஒலிப்பர். இந்த மொழியில் இந்த ஒலி சொல்லின் இறுதி ஒலியாக வரும். தமிழில் இந்த ஒலி இறுதி ஒலியாக வராது. வல்லின எழுத்துகள் ஆறும் ஊர்ந்துவரும் நுண்ணொலி எழுத்தாக இடையில் மட்டுமே வரும்.

திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம்

தொகு

திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எனவே அதனைத் தனியே குறிப்பிடவேண்டியுள்ளது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49)
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476)
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014)

இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டு அரைமாத்திரையால் அலகிட்டுக்கொள்கிறோம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (226)
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில் (363)
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414)

இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுக்கொள்கிறோம்.

இதனால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர்.

இக்கால நிலை

தொகு
இக்காலத்தில் பிறமொழி (திசை)ச் சொற்களை எழுதும்போது ஃபாதர், ஃபேன், செல்ஃப், புரூஃப் என்றெல்லாம் எழுதிவருகிறோம்.

மாற்றுக் கருத்து

தொகு

முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் என்ற நூலில் ஆய்த எழுத்து குறித்து கீழ்காணும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார்.[7] ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார் [8]. எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம்.

எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப்பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கீழும் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது.[9]

ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது. ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்று கொள்வதும் தவறாகாது அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றோ அவை ஒவ்வொரு புள்ளி (நாகியாது, காடு) மட்டுமே பெற்று எழுதப்பட்டன என்றோ கருதலாம். "ஒற்றெழுத்தியற்றே குற்றியலுகரம்" என்ற செய்யுளில் நூற்பாவும் இங்கு நினைக்கத் தக்கது. யாப்பருங்கல இரண்டாம் நூற்பாவின் மேற்கோளாக வரும் "சங்கயாப்பின்"

"குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும்

மற்றவை தாமே புள்ளி பெறுமே"

என்பதும் இங்குச் சுட்டத்தக்கது.

முப்பாற்புள்ளியே ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய மூன்றற்கும் பொது எழுத்தாய்த் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது [10] என்ற கருத்துக் குழப்பத்தை விளைவிக்குமாதலின் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன - 'தொல்காப்பியம்' நூன்மரபு 2
  2. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
    ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். - தொல்காப்பியம் உரியியல் 32

  3. "தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நூல் மரபு". பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2015.
  4. "எழுத்துக்களின் வகை". பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2015.
  5. முப்பஃது என்ப - தொல்காப்பியம் முதல் நூற்பா
  6. பஃது என் கிளவி - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 39
  7. இரா.கிருட்டிணமூர்த்தி, சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து ப-53, 1982, முதற்பதிப்பு
  8. இரா.கிருட்டிணமூர்த்தி, சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து ப-52, 1982, முதற்பதிப்பு
  9. மு.இராகவையங்கார், ஆராய்ச்சித்தொகுதி, ப-130, 1964, பாரிநிலையம், இரண்டாம் பதிப்பு
  10. சு.இரத்தினசாமி, தமிழ் எழுத்து வரிவடிவ வரலாறு, ப-64, 1988, முதற்பதிப்பு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்த_எழுத்து&oldid=3402842" இலிருந்து மீள்விக்கப்பட்டது