ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பெயர்
பெயர்:பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி மாவட்டம்
அமைவு:ஆய்க்குடி
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:கந்த சஷ்டி

அமைவிடம் தொகு

இக்கோவில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆய்க்குடி பேரூராட்சியில் அமைந்துள்ளது. தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. செங்கோட்டையிலிருந்து 13 கிமீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

கோவில் அமைவு தொகு

இந்து சமயக் கடவுளான முருகனை முதன்மைக் கடவுளாக கொண்டமைந்த கோவில் இது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.

தலவிருட்சம் தொகு

அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.

அரசு-சூரியன்
வேம்பு-அம்பிகை
கறிவேப்பிலை-மகாதேவன்
மாதுளை-விநாயகர்
மா விலங்கு-விஷ்ணு.

பஞ்ச தேவர்கள் தொகு

மூலவருக்கு வலப்புறம் மகாதேவன், மகாவிஷ்ணு, அம்பிகை, கணேசரும் இடப்புறம் சூரியனும் உள்ளனர். பஞ்ச தேவர்கள் சூழ பஞ்ச விருட்சங்களின் கீழ் மூலவர் அமைந்துள்ளார்.

தல தீர்த்தம் தொகு

அனுமன் நதி இக்கோவிலின் தல தீர்த்தமாகும்.

இக்கோவிலில் அரச இலை திருநீற்றுப் பிரசாதம் வழங்கப்படுகிறது.

தல புராணம் தொகு

ஆய்க்குடிக்கு அருகிலுள்ள மல்லிபுரம் என்னும் ஊரில் ஒரு குளத்தைத் தூர்வாரும் போது ஒரு முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. பக்தர் ஒருவர் அச்சிலையைத் தன் வீட்டு ஆட்டுத்தொழுவத்தின் அருகே கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டு வரலானார். அரசும் வேம்பும் இணைந்து உள்ள இடத்தில் தன்னைக் கொண்டுபோய் வைத்து வழிபடும்படியும் அவ்விடத்தை ஆடு ஒன்று அடையாளம் காட்டும் பக்தரின் கனவில் தோன்றி. முருகன் கூறினார். அதன்படியே செம்மறி ஆடொன்று அரசும் வேம்பும் உள்ள ஒரு இடத்துக்குச் செல்ல, பக்தரும் அந்த இடத்தில் ஓலைக் கீற்றால் குடிசை அமைத்து முருகர் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபடலானார். பிற்காலத்தில் அவ்வூரை ஆண்ட அரசர்களால் இக்கோவில் மேம்படுத்தப்பட்டது.

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார். இன்றும் இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு படிப்பாயசம் நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.

திருவிழாக்கள் தொகு

 
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்காரத் திருவிழா

கந்த சஷ்டி, தைப்பூசம்,சித்திரைத் திருநாள், மாசி மகம், வைகாசி விசாகம் ஆகியவை இக்கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்கள் ஆகும்.

கந்த சஷ்டி விழா, ஐப்பசி மாதம் (நவம்பர் 15 -டிசம்பர் 15, தோராயமாக) அதாவது துலா மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும். ஆறாம் நாள் சூரசம்ஹாரமும் 7 ஆம் நாள் மஞ்சள் நீராட்டு நடைபெறும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

ஆய்க்குடி

ஆதாரங்கள் தொகு