இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

(ஆராத் திருவின் சேரலாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்க காலத் தமிழ் இலக்கியம் பதிற்றுப்பத்து. இதில் குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனப்படும் எய்யும் வில்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் செயல்கள் தொகு

 • இமய மலையில் வில்லைப் பொறித்தான். [1]
 • கடம்பரின் காவல்மரமான கடம்பு மரத்தை வெட்டி, அம் மரத்தால் தனக்கு முரசு செய்துகொண்டான் [2] [3] [4]
 • தமிழகம் முழுவதும் ஆண்டான் [5]
 • இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட அரசர்கள் தன்னைத் தானே புகழ்ந்த திறத்தை அடக்கினான். [6]
 • யவனரின் செல்வத்தையும், வயிரத்தையும் கைப்பற்றித் தன் ஊருக்குக் கொண்டுவந்து பிறருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அவர்களின் தலையில் நெய் ஊற்றி நெய் வழிய வழிய அவர்களை இழுத்துவந்தான். [7] சங்ககாலத் தண்டனை இவ்வாறு இருந்தது.
 • தன்னை விரும்பாதவர்களை அடக்கினான். [8]
 • போரிடும்போதும் மார்பில் சந்தனம் அணிந்திருந்தான். [9]
 • ஆட்சியில் நோயும் பசியும் இல்லை. [10]
 • ஐவரோடு போரிட்ட கன்னன் போல் வழங்கினான்.[11]
 • மாரி பொய்த்தாலும் இவன் வழங்குது பொய்ப்பதில்லை. [12]
 • பகைவர் நாட்டில் இருக்கும்போதும் வழங்குவான். [13]
 • இவன் நாட்டு மக்கள் நிரையம் (நரகம்) அறியாதவர்கள். [14]
 • இவனது மனைவியின் மாண்புகள் பல. [15]
 • இவன் போர்க்களத்திலேயே பல காலம் வாழ்ந்ததால் பெரிதும் வாட்டத்துடனேயே காணப்பட்டான். [16]

வரலாற்றுச் சூழல் தொகு

வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது [17]. எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்[18].

காண்க தொகு

ஒப்புநோக்குக தொகு

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழாஅத்தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது.
சேரமான் பெருஞ்சேரலாதன்
போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநானூறு கூறுகிறது[19].

குறிப்புகள் தொகு

 1. பதிற்றுப்பத்து, பதிகம் 2
 2. பதிற்றுப்பத்து 11
 3. கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே – பதிற்றுப்பத்து 12
 4. கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை – பதிற்றுப்பத்து 17
 5. இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன் கோல் நிறீஇ - பதிற்றுப்பத்து, பதிகம் 2
 6. மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தான். பதிற்றுப்பத்து 11
  • ஆரியரை வணங்கும்படி செய்தான். பதிற்றுப்பத்து, பதிகம் 2
 7. யவனர்ப் பிணித்து நெய் தலைப்பெய்து கையின் கொளீஇ, அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு, பெருவிறல் மூதூர்த் தந்து பிறர்க்கு உதவி - பதிற்றுப்பத்து, பதிகம் 2
 8. அமையார்த் தேய்த்து - பதிற்றுப்பத்து, பதிகம் 2
 9. பதிற்றுப்பத்து 11
 10. பதிற்றுப்பத்து 13
 11. போர் தலைமிகுந்த ஈர் ஐம்பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை அக்குரன் அனைய கைவண்மையையே - பதிற்றுப்பத்து 14
 12. பதிற்றுப்பத்து 18
 13. பதிற்றுப்பத்து 20
 14. பதிற்றுப்பத்து 15
 15. அவை ஆறிய கற்பு, அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை முதலானவை – பதிற்றுப்பத்து 16
 16. பதிற்றுப்பத்து 19
 17. பதிற்றுப்பத்து, பாடல் 11
 18. செல்லம், வே. தி., 2002, பக். 90
 19. புலியூர்க் கேசிகன், 2004, பக். 116 (பாடல் 66)

உசாத்துணைகள் தொகு

 • புலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
 • செல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).
 • புலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)