ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில்

ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்புதுக்குளம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. வவுனியா நகரத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையில் 12 மைல் தூரம் சென்று பன்றிக்கெய்தகுளத்தில் இறங்கி சேமமடு செல்லும் சிறுசாலையில் சுமார் நான்கு மைல்கள் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

வரலாறு தொகு

1958-ம் ஆண்டிலே ஏற்பட்ட இனக்கலவரத்திலே வடமத்திய மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வளமான வணிக நிலையங்கள் நெருப்புக்கு இரையாக்கப்பட, அங்கிருந்து இடம் பெயர்ந்த பருத்தித்துறை, தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பலரையும், காடாக இருந்த ஆறுமுகத்தான்புதுக்குளத்தின் அண்மைக்கிராமங்களில் வாழ்ந்த பலரையும் சேர்த்து பண்டிதமணி திரு சி.சின்னையா ஆசிரியர் அவர்களின் செயல் திட்டத்திலே, இங்கு குடிசைகள் அமைத்து, ஆறுமுகத்தான்புதுக்குளம் என்னும் ஆதிகாலப் பெயரையே சூட்டி, இடிபாடுகளாக இருந்த கந்தசுவாமி ஆலயத்தின் இடிபாடுகளை நீக்கி புதிதாகக்கட்டி, 1962-ம் ஆண்டு கும்பாபிசேகம் செய்து பின்னர் ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதத்தில் அலங்கார உற்சவங்கள் பத்து நாட்களும் விமரிசையாக நடைபெற்றும், அதனைத் தொடர்ந்து வரும் கந்தர்சஷ்டி விரதத்தில் கந்தபுராணம் படித்துப் பயன் விரித்துரைப்பதும், சூரன் போரை மிகவும் விமரிசையாக நடத்தியும் தொடர்ந்து கார்த்திகைப்பரணி, பெருங்கதை, மார்கழித் திருவெம்பாவைக் காலங்களில் திருவாதவூரர் அடிகள் புராணம் படித்து பயன் விரித்துரைப்பதும், தொடர்ந்து வரும் எல்லா விசேஷ நாட்களிலும் விசேஷ பூசைகளும், நித்திய பூசையாக இருகாலப்பூசைகளும் நடைபெற்று வந்தது.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது பரிவார தெய்வங்களாக வினாயகர், பைரவர் போன்ற தெய்வங்கள் வீற்றிருக்கின்றனர் .இத்தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதிகள் உண்டு. உற்சவ மூர்த்தியாக வள்ளி, தேவயானை சமேத சுப்பிரமணியப்பெருமான் உள்ளார்.