இணுவில் சிவகாமி அம்மன் கோயில்

இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே 'சிவகாமி அம்மன் கோயில் முக்கியமான ஒன்று. இது கிழக்கு இணுவில் பகுதியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று.

வரலாறு தொகு

யாழ்ப்பாண அரசு அமைந்த தொடக்க காலத்தில், நாட்டின் பல பகுதிகளுக்குப் பொறுப்பாக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தலைவர்களில் ஒருவன் குடியேறிய பகுதியாக, இணுவில் குறிப்பிடப்படுகின்றது. இவன் தமிழ் நாட்டின் திருக்கோவிலூரைச் சேர்ந்த பேராயிரவன் என்று யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்து அரசர்கள் தம் நாட்டை பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தனர். இணுவையூருக்கு, திருக்கோவலூர் பேராயிரவன் தலைவன் ஆயினான். இவன் சிதம்பரத்திலிருந்து சிவகாமியம்மை திருவுருவத்தை வரவழைத்துத் தான் வாழ்ந்த இடத்தில் இச்சிவகாமியம்மை ஆலயத்தை அமைத்தான் எனவும் அவ்விடம் அதனால் சிதம்பர வளவு என அழைக்கப்பட்டதெனவும் செவிவழிச் செய்திகள் சொல்கின்றன.

பேராயிரவன் பின் இப்பகுதிக்கு ஆட்சித்தலைவனாயிருந்த காலிங்கராயன் நாள்தோறும் சிவகமியம்மையை வழிபட்டே ஆட்சிக் கடைமைகளை மேற்கொண்டான் எனவும், அவன் மகன் கைலாயநாதன் உலாவின்போது தன்முன்பாய் சிவகாமியம்மை திருவுருவை தேரில் பவனிவரச் செய்தான் எனவும் பஞ்சவன்னத் தூது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏராளமான திருக்கோயில்களை இடித்தளித்த போத்துக்கீசர் கொடுங்கோலாட்சி யாழப்பாணத்தில் இடம்பெற்றபோது இணுவைச் சிவகாமியம்மன் ஆலயமும் அவர்களினால் இடித்தளிக்கப்பட்டது. பின் வந்த ஒல்லாந்தரின் 138 ஆண்டுகால ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவர்களது இந்து எதிர்ப்புக் கொள்கை சற்றுத் தளர்ந்தபோது, மீண்டும் இவ்விடத்தில் அம்மன் வழிபாடு ஆரம்பமானது. அக்காலத்தே தொம்பு எழுதும் பணியில் இருந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் சிவகாமி அம்மையை நாளும் வழிபாடு செய்தவர். புலவரை ஒல்லாந்த ஆட்சியாளர் தவறான குற்றச்சாட்டொன்றினாலே சிறையிலிட்டபோது அவர் சிவகாமி அம்மை அருளாலே சிறைமீண்டதால் இத்தலத்தின் பெருமை எங்கும் பரவலாயிற்று. சின்னத்தம்பிப் புலவர் இணுவை சிவகாமி அம்மை மீது சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம் என்பனவற்றையும் பாடியுள்ளார். தான் அம்மையின் அருளினாலே சிறை மீண்டதை புலவர் சிறை நீக்கு பதிகமாக பாடியுள்ளார்.

இக்கோயிலின் அருகே சிறந்த நாடக அரங்கு ஒன்றும் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தே அமைந்திருந்தது. இதனால் இத்தலம் சமயத்தை மட்டுமன்றி தமிழையும் வளர்த்தலில் முன்னின்றது. இத்திருத்தலம் சிறந்த தெய்வச் சூழலில் அமைந்துள்ளது. இணுவிற்பதியின் பண்டைய ஆட்சியாளர்கள் தம் வீரத்திற்காக வழிபட்ட வைரவர் – பத்திரகாளி கோயில் இவ்வாலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திற்கு கிழக்கில் சோழர் காலத்தைய அருள்மிகு காரைக்காற் சிவன்கோயில் அமைந்துள்ளது. மேற்கில் பெருஞ்சித்தராய் விளங்கிய பெரிய சந்நியாசியாரின் அடக்கத் திருத்தலம் உள்ளது. வடமேற்கில் இப்பகுதியை ஆண்ட பண்டைய ஆட்சியாளர் ஒருவருக்கு அமைந்த இளந்தாரி கோயிலும் உள்ளது.


ஆலயப் புனரமைப்பு தொகு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இக்கோயிலுக்கெனப் புதிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. கோயிற் கட்டடங்கள் பலவும் திருத்தி அமைக்கப்பட்டன. திருத்தொண்டகள் செய்வதில் ஊரவர்கள் பலரும் ஈடுபட்டனர். உள்வீதியில் எல்லா கடவுளர்களுக்கு ஆலயமும் வெளிவீதியில் திருமடமும், சின்னத்தம்பிப் புலவர் அரங்கும் அமைக்கப்பட்டன. இக் கோவிலின் கோபுரம் சாத்திரம்மா என்பவரால் ஊர் மக்களிடம் பிடி அரிசி வாங்கி கட்டப்பட்டதாகும்.

கோவிலின் தல விருட்சமாக மகிழமரம் உள்ளது. ஆலயத்தின் முன் வீதியில் இருந்த மகிழமரம் அழிந்து போக, தற்பொழுது பண்டைய மகிழமரம் தென்மேற்கு வீதியிலும் வடக்கு வீதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட மகிழமரமும் உள்ளது.திருவிழா தொகு

நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வருகின்றன. ஆண்டுத்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை என்பன மிகச்சிறப்பாய் ஆலயத்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மாதத்தில் பன்னிரு நாள் நடைபெற்று வருகின்றது. உத்தரநாளில் தீர்த்தத்திருவிழாவும் அதன் முதல்நாள் தேர்த்திருவிழாவும் பத்தாம், பதினோராம் நாட்களில் நடைபெறும். மகேசுவர பூசையும் இறுதி நாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. பகல் சங்காபிடேகத்தோடு நடைபெறும் ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழாவும் மிகச்சிறப்பானது.

நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் நடைபெறும் மகிடாசுர சங்கார விழாவும், பத்தாம்நாள் மானம்பூ விழாவும் இத்திருத்தலத்திற்கு சிறப்புத் தருவன. புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் மற்றும் வன்னிமர வாழை வெட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவெம்பாவை வழிபாடு நாள்தொறும் அதிகாலை மூன்று மணி தொடக்கம் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசக்தி சிறப்பு வழிபாடும் பூரணை நாளில் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் அம்மன் மகிடாசுரனை அழித்த நிகழ்வு கொண்டாடப்படுகின்றது. இது சூரன் போர் என மக்களால் அழைக்கப்படுகின்றது. அடுத்த நாள், விஜயதசமியன்று இக் கோயிலில் நடைபெறும் மானம்புத் திருவிழா புகழ் பெற்றதாகும்.

பிரபந்தங்கள் தொகு

ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இச் சிவகாமி அம்மன் தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார். அவையாவன:

  • சிவகாமியம்மை பதிகம்
  • சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
  • சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை
  • சிவகாமியம்மை துதி

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு